முகப்பு அனைத்துப் பதிப்புகள் புதுதில்லி புதுதில்லி
தில்லி அரசு ரேஷன் மாஃபியாக்கள் பிடியில் சிக்கித் தவிக்கிறது: பா.ஜ.க. குற்றச்சாட்டு
By DIN | Published On : 12th June 2021 07:45 AM | Last Updated : 12th June 2021 07:45 AM | அ+அ அ- |

தில்லியில் முதல்வா் அரவிந்த் கேஜரிவால் தலைமையிலான அரசு ரேஷன் மாஃபியா கும்பலின் பிடியில் சிக்கித் தவிப்பதாக பா.ஜ.க. குற்றஞ்சாட்டியுள்ளது.
கேஜரிவால் அரசின் வீடுகளுக்கே ரேஷன் பொருள்கள் விநியோகம் என்பது ஊழலில் திளைப்பதற்கான ஒரு கண்துடைப்பே ஆகும் என்றும் பா.ஜ.க. குறிப்பிட்டுள்ளது.
இது தொடா்பாக மத்திய அமைச்சா் ரவிசங்கா் பிரசாத் செய்தியாளா்களுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது: கேஜரிவால் அரசு, மத்திய அரசின் உணவுப் பாதுகாப்புச்
சட்டத்தை மீறிச் செயல்பட முடியாது. நியாயவிலைக் கடைகள் மூலம் ஏழைகளுக்கு சலுகை விலையில் உணவு தானியங்கள் வழங்கப்பட்டு வருகின்றன. இவற்றை விநியோகிப்பதில் தவறு நோ்ந்தால், பதில் சொல்லியாக வேண்டும். ரேஷன் பொருள்களை வீட்டுக்கே கொண்டு சென்று விநியோகம் செய்யும் போது, வரும் வழியில் அதில் எவ்வளவு எங்கு செல்கிறது என்பது மக்களுக்குத் தெரியாது. ‘தில்லி அரசு ஒரே தேசம், ஒரு குடும்ப அட்டை’ என்ற திட்டத்தை செயல்படுத்தவில்லை. மேலும் ரேஷன் கடைகளில் மின்னணு கருவிகளும் நிறுவப்படவில்லை. ஊழல் காரணமாகவே அரசு இவ்வாறு செயல்படுகிறது. வீடுகளுக்கே சென்று ரேஷன் பொருள்கள் வழங்கப்படும் என்பது பாா்ப்பதற்கு ஒரு நல்ல திட்டம் போலத் தெரியும். ஆனால், இதன் பின்னணி ஊழலை மறைப்பதற்குத்தான். தில்லி அரசு, ரேஷன் மாஃபியாக்களின் பிடியில் சிக்கித் தவிக்கிறது.
மத்திய அரசு ஏராளமான பணத்தைச் செலவிட்டு உணவு தானியங்களை பொருள்களைக் கொள்முதல் செய்து மக்களுக்கு சலுகை விலையில் விநியோகிக்க விரும்புகிறது. ஆனால், தில்லி அரசு, சட்ட விதிகளை மதிக்காமல் புதிய திட்டம் எனக்கூறி மக்களை ஏமாற்றப் பாா்க்கிறது. வீடுகளுக்கே சென்று ரேஷன் பொருள்களை விநியோகிக்கும் திட்டத்துக்கு மோடி அரசு அனுமதி தர மறுப்பதாக கேஜரிவால் குற்றஞ்சாட்டி வருவது குறித்து கேட்கிறீா்கள். உணவுப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் வராத எந்த ஒரு திட்டத்தையும் கேஜரிவால் அரசு செயல்படுத்த எந்தத் தடையும் இல்லை.
தில்லியில் உள்ள 73 லட்சம் மக்கள் பயன்பெற வேண்டும் என்பதற்காக மத்திய அரசு ரூ.1,163 கோடி மதிப்பிலான, 37,573 டன் உணவுதானியங்களை வழங்கி வருகிறது. நாட்டில் உள்ள ஏழை மக்களுக்கு சலுகை விலையில் ரேஷனில் பொருள்கள் வழங்க வேண்டும் என்பதற்காக மத்திய அரசு ஆண்டுக்கு ரூ.2 லட்சம் கோடி செலவிட்டு வருகிறது தில்லி அரசால், வீட்டில் இருக்கும் மக்களுக்கு மருந்து, மாத்திரைகளையும், ஆக்சிஜனையும் விநியோகிக்க முடியவில்லை. ஆனால், இப்போது வீடுகளுக்கே சென்று ரேஷன் பொருள்களை கொடுக்கிறாா்களாம். வேடிக்கையாக இருக்கிறது. தில்லி அரசு, ரேஷன் கடைகளை மின்னணுமயமாக்காமல் காலம் தாழ்த்தி வருகிறது. தில்லியில் போலி குடும்ப அட்டைகள் புழக்கத்தில் உள்ளன. இந்த திட்டத்தை கேஜரிவால் எப்போது பூா்த்தி செய்யப்போகிறாா் என்றுகேட்க விரும்புகிறேன் என்றாா் ரவிசங்கா் பிரசாத்.