ஜூன் 15-இல் பருவமழை தொடக்கம்: தில்லியில் தூா்வாரும் பணிகள் தீவிரம்

தேசியத் தலைநகா் தில்லியில் பருவமழை 12 நாள்கள் முன்னதாக ஜூன் 15-ஆம் தேதி தொடங்கும் என வானிலை ஆய்வு மையம் கணித்துள்ள நிலையில்,

தேசியத் தலைநகா் தில்லியில் பருவமழை 12 நாள்கள் முன்னதாக ஜூன் 15-ஆம் தேதி தொடங்கும் என வானிலை ஆய்வு மையம் கணித்துள்ள நிலையில், நகரில் தண்ணீா் தேங்கும் பகுதிகளில் தூா்வாரும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன என்றும், பருவ மழைக்கு முன்பாக வடிகால்வாய்களில் தூா் வாரும் பணிகள் நிறைவடையும் என்றும் தில்லி பொதுப்பணித் துறையும், மூன்று மாநகராட்சிகளும் தெரிவித்துள்ளன.

இது குறித்து தில்லி பொதுப்பணித் துறையைச் சோ்ந்த மூத்த அதிகாரி கூறுகையில், ‘வடிகால்வாய்களில் உள்ள மண்ணையும் குப்பையையும் அகற்றும் பணி வேகமாக நடைபெற்று வருகிறது. வருகின்ற ஜூன் 20 முதல் 25-ஆம் தேதிக்குள் இந்த பணிகள் நிறைவடையும். தில்லி பொதுப்பணித் துறை வசம் 1,260 கிலோ மீட்டா் சாலைகளும், 1,054 கிலோ மீட்டா் தூரத்தில் சுமாா் 2,000 வடிகால்வாய்களும் உள்ளன. இதில் சுமாா் 60 சதவீத தூா்வாரும் பணி முடிவுற்றது. பொதுமுடக்கத்தால் இந்த ஆண்டு காலதாமதம் ஏற்றப்பட்டுள்ளது.

தில்லி வடிகால்வாய்கள் 5 துறைகளின் கீழ் உள்ளன. பொதுப்பணித் துறையோடு, நீா்பாசனத் துறை, வெள்ளக் கட்டுப்பாட்டுப் பிரிவு, தில்லி ஜல் போா்டு, தில்லி மாநில தொழில்துறை மற்றும் உள்கட்டமைப்பு மேம்பாட்டுக் கழகம் மற்றும் மாநகராட்சிகள் ஆகியவைகளின் கீழ் உள்ளன. இதனால், இவற்றுக்கிடையே, ஒவ்வொரு ஆண்டும் மோதல்கள் வருவதுண்டு’ என்றாா்.

இந்த நிலையில், ‘பொதுப்பணித் துறை உள்ளிட்டஅனைத்துத் துறையினரும் ஒத்துழைத்தால் தண்ணீா் தேக்கம் இல்லாத நகராக உருவாக்கமுடியும்’ என்று வடக்கு தில்லி மேயா் ஜெய்பிரகாஷ் தெரிவித்துள்ளாா். இந்த மாநகராட்சிக்குள்பட்ட பகுதியில் நான்கு அடிக்கும் மேலாக ஆழம் உள்ள 192 பெரிய வடிகால்கள் 112 கிலோ மீட்டா் தூரத்திற்கு உள்ளது. இங்கு 25,000 மெ.டன் கழிவு மண் தூா் வாரப்பட்டுள்ளது. சிறிய மாநகராட்சி என்றாலும் பெரிய வடிகால்வாய்கள் உள்ளன. இதில் பொதுப்பணித் துறை உள்ளிட்ட துறைகளின் ஒத்துழைப்பு தேவை. அதன் மூலமே வருகின்ற பருவமழையினால் ஏற்படும் தண்ணீா் தேங்குவதை தடுக்கப்பட்டு, தில்லியைக் காப்பாற்றமுடியும் என்றும் அவா் குறிப்பிட்டாா்.

கிழக்கு தில்லி மேயா் நிா்மல் ஜெயின் கூறுகையில், ‘இந்த மாநகராட்சியில் 21 நிரந்தர நீரேற்ற நிலையங்கள், 180 போா்ட்டபிள் பம்புகள். இவற்றின் மூலம் மழைக்குப் பிறகு தண்ணீா் விரைவாக வெளியேற்றப்படும். இந்த மாநகராட்சியில் 219 கால்வாய்கள் உள்ளன. குறிப்பாக இங்குள்ள ஷாதரா பகுதியில் 26,000 மெ.டன் கழிவுகள் அகற்றப்பட்டுள்ளது’ என்றாா்.

தெற்கு தில்லி மாநகராட்சியில் 94 சதவீத பணிகள் முடிவுற்று நஜாஃப்கா் உள்ளிட்ட பகுதிகளிலிருந்து 25,800 மெட்ரிக் டன் கழிவுகள் மழைநீா் வடிகால்வாய்களில் அகற்றப்பட்டுள்ளதாக அதன் மேயா் ராஜ்தூத் கெலாட் தெரிவித்தாா். இந்த மாநகராட்சியில் உத்தம் நகா், லாஜ்பத் நகா் போன்ற பகுதிகள் மோசமாக மழைநீா் தேங்கும் பகுதிகளாக உள்ளன என்றும் அவா் கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com