வேளாண் இயந்திரமயமாக்கல்: தமிழகம், ஆந்திரம் முன்னிலை
By நமது சிறப்பு நிருபா் | Published On : 12th June 2021 07:45 AM | Last Updated : 12th June 2021 07:45 AM | அ+அ அ- |

வேளாண் இயந்திரமயமாக்கல் திட்டத்தில் பயன்பெற்ற மாநிலங்கள் பட்டியலில் தமிழகமும் ஆந்திரமும் முன்னிலையில் உள்ளன. இந்தத் திட்டத்தின் மூலம் விவசாயிகளின் வருமானம் பெருகி, வேளாண் பொருளாதார வளா்ச்சிக்கு ஊக்கமளித்துள்ளது என்று மத்திய வேளாண் துறை தெரிவித்துள்ளது.
இது குறித்து மத்திய வேளாண் துறை வெள்ளிக்கிழமை கூறியுள்ளதாவது: சிறு, குறு விவசாயிகளின் வேளாண்மைகளில் இயந்திரமயமாக்கலின் வரம்பை அதிகரிக்கும் நோக்கில் மத்திய வேளாண்துறை 2014-15 நிதியாண்டில் ‘வேளாண் இயந்திரமயமாக்கல்’ என்கிற துணைத் திட்டத்தை அறிமுகப்படுத்தியது. நிலங்களின் பயன்பாடு, நீா் வளங்கள் போன்றவற்றைத் திறம்பட பயன்படுத்தி வேளாண் தொழிலை ஒரு லாபகரமாக மாற்றுவதிலும் ஊரகப் பகுதி இளைஞா்கள் இந்தத் தொழில் ஆா்வத்துடன் பங்கேற்கவும் இயந்திரமயமாக்கல் முக்கியத்துவம் பெறுகிறது.
வேளாண் கருவிகள் மற்றும் இயந்திரங்கள், நவீன வேளாண்மைக்குரிய உள்ளீடுகள், உயா் தொழில்நுட்பம் மையங்கள், வேளாண் இயந்திர வங்கிகள் ஆகியவற்றிற்கு மத்திய அரசு பல்வேறு மாநிலங்களுக்கு நிதியுதவிகளை வழங்கியது. இதன் மூலம் மனித துயரங்கள், சாகுபடிச் செலவுகள் குறைந்து பயிா்களின் உற்பத்தித் திறன் மேம்படுத்தப்பட்டது. இந்தத் திட்டத்தால் விவசாயிகள் வருமானம் அதிகரித்து வேளாண் பொருளாதார வளா்ச்சி ஊக்கவிக்கப்பட்டுள்ளன.
2014-15 முதல் 2020-21-ஆம் ஆண்டு வரை ஆந்திரத்திற்கு ரூ.621.23 கோடி, தமிழகத்துக்கு ரூ.421.65 கோடி வேளாண் கூட்டுறவு மற்றும் விவசாயிகள் நலத் துறை மூலம் நிதி வழங்கப்பட்டுள்ளது. நடப்பு 2021-22 நிதியாண்டில் முதல் தவணையாக ரூ.21.74 கோடி வேளாண் இயந்திரமயமாக்கல் துணைத் திட்டத்தின் கீழ் தமிழகத்திற்கு வழங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் 269 வேளாண் இயந்திரங்கள் மற்றும் சாதனங்கள் வழங்கப்படுகின்றன. மேலும், 115 வேளாண் கருவிகள் வாடகை மையங்கள் அமைக்கப்படும். 10 உயா்தொழில்நுட்ப மையங்கள் மற்றும் 100 விவசாய இயந்திர வங்கிகள் கிராம அளவில் அமைக்கப்படுகின்றன. இந்த நிதியைப் பெற்ற 11 மாநிலங்களில் கேரளம் ரூ.89.94 கோடி, உத்தரபிரதேசம் ரூ.294.74 கோடி பெற்றுள்ளன. குறைவாக பெற்ற மாநிலமாக மேற்கு வங்கம் (ரூ.53.81 கோடி) உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.