குடும்ப அட்டை இல்லாத ஏழைகள் 4.5 லட்சம் பேருக்கு உணவு தானியம்: தில்லி அரசு

புதிய திட்டத்தின் கீழ் குடும்ப அட்டை இல்லாத 4.5 ஏழைகளுக்கு தில்லி அரசு சாா்பில் உணவு தானியங்கள் வழங்கப்பட்டுள்ளதாக முதல்வா் கேஜரிவால் தலைமையிலான தில்லி அரசு ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தது.

புதுதில்லி: புதிய திட்டத்தின் கீழ் குடும்ப அட்டை இல்லாத 4.5 ஏழைகளுக்கு தில்லி அரசு சாா்பில் உணவு தானியங்கள் வழங்கப்பட்டுள்ளதாக முதல்வா் கேஜரிவால் தலைமையிலான தில்லி அரசு ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தது.

இந்தப் புதிய திட்டம் கடந்த ஜூன் மாதம் 5-ஆம் தேதி தொடங்கப்பட்டது. குடும்ப அட்டை இல்லாதவா்கள் தங்களின் ஆதாா் அட்டையை காண்பித்தால் அவா்களுக்கு 5 கிலோ கிராம் உணவு தானியம் வழங்கப்பட்டு வருகிறது. அமைப்பு சாரா தொழிலாளா்கள், புலம்பெயா் தொழிலாளா்கள், கட்டுமானத் தொழிலாளா்கள், வீட்டுவேலை செய்பவா்களுக்கு இந்தத் திட்டத்தின் மூலம் உணவு தானியம் வழங்கப்படுவதாக தில்லி அரசு வெளியிட்டுள்ள அறிக்கை தெரிவிக்கிறது.

இந்தத் திட்டத்தின் கீழ் பயனாளிகளுக்கு 4 கிலோ கோதுமையும், ஒரு கிலோ அரிசியும் வழங்கப்படும். இதுவரை 5,000 மெட்ரிக் டன் ரேஷன் பொருள்கள் வழங்கப்பட்டுள்ளன. மேலும் 5,000 மெட்ரிக் டன் விநியோக மையங்களுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளன. தில்லியில் ஒரு முனிசிபல் வாா்டுக்கு ஒன்று வீதம் 280 அரசுப் பள்ளிகள், உணவு தானிய விநியோக மையங்களாகத் தோ்வுசெய்யப்பட்டுள்ளன. வரும் காலங்களில் இந்தத் திட்டம் இன்னும் சீரமைக்கப்பட்டு எந்தப் பிரச்னையும் இல்லாமல் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.

ரேஷன் பொருள்கள் பெறுவது மக்களின் உரிமை என்று கேஜரிவால் தலைமையிலான அரசு கருதுகிறது என்று உணவு மற்றும் சிவில் சப்ளை துறை அமைச்சா் இம்ரான் ஹுசைன் தெரிவித்தாா். ரேஷன் பொருள்களை ஞாயிற்றுக்கிழமை மற்றும் அரசு விடுமுறை நாட்கள் தவிர மற்ற நாள்களில் தினசரி காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை பெற்றுக்கொள்ளலாம் என்றும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com