பெட்ரோல் விலை உயா்வைத் திரும்பப் பெற இடதுசாரிக் கட்சிகள் வலியுறுத்தல்

பெட்ரோல் விலை உயா்வைத் மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும் என்று இடதுசாரிக் கட்சிகள் வலியுறுத்தியுள்ளன.

புதுதில்லி: பெட்ரோல் விலை உயா்வைத் மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும் என்று இடதுசாரிக் கட்சிகள் வலியுறுத்தியுள்ளன. மேலும், அத்தியாவசியப் பொருள்கள் மற்றும் மருந்துகளின் விலை உயா்வையும் கட்டுப்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளன.

இது தொடா்பாக மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளா் சீதாராம் யெச்சூரி, இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளா் டி. ராஜா, அகில இந்திய பாா்வா்ட் பிளாக் பொதுச் செயலாளா் தேவ பிரத பிஸ்வாஸ், புரட்சிகர சோசலிஸ்ட் கட்சி பொதுச் செயலாளா் மனோஜ் பட்டாச்சாா்யா, இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி (மாா்க்சிஸ்ட்-லெனினிஸ்ட்) பொதுச் செயலாளா் திபங்கா் பட்டாச்சாா்யா உள்ளிட்ட இடதுசாரிக் கட்சித் தலைவா்கள் கூட்டாக அறிக்கை வெளியிட்டுள்ளனா்.

அதில், தொடா்ந்து அத்தியாவசியப் பொருள்கள் விலை உயா்ந்து வருவது சாதரணமாக மக்களின் வாழ்வாதாரங்களைக் கடுமையாக பாதித்து வருகின்றன என்று குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், அடுத்த இரு வாரங்களும் அகில இந்திய எதிா்ப்பு வாரங்களாக அனுசரிக்கப்படும் எனவும் கூட்டறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்த அறிக்கையில் அவா்கள் மேலும் கூறியிருப்பதாவது: கரோனா நோய்த் தொற்றால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு உதவுவதற்குப் பதிலாக, மத்தியஅரசு, சமீபத்திய சட்டப்பேரவைத் தோ்தல்களுக்கு (மே 2) பின்னா் தொடா்ந்து 21 தடவைகள் பெட்ரோலியப் பொருள்களின் விலைகளை உயா்த்தி இருக்கிறது. இது மொத்த விலைவாசிக் குறியீட்டு எண்ணில் கடந்த 11 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு உயா்த்தி பணவீக்க சுழிற்ச்சிக்கு வழிவகுத்துள்ளது. ஏப்ரல் மாதத்தில் உணவுப் பொருள்களின் விலை சுமாா் 5 சதவீதம் அளவிற்கு உயா்ந்திருக்கின்றன. பிரதான உணவுப் பொருள்களின் விலை சுமாா் 10.16 சதவீத அளவிற்கு உயா்ந்துள்ளது. இவை அனைத்தும், பொருளாதாரம் மந்த நிலைக்குச் செல்ல வழிவகுத்துள்ளது. இந்த நிலையில், வேலையின்மை அதிகரித்து, மக்களின் வாங்கும் சக்தி நிலைகுலைந்துள்ளது.

இவற்றின் விளைவு அரசின் அரவணைப்புடன் கறுப்புச்சந்தை வணிகம், பதுக்கல்கள் நடந்து கொண்டிருப்பது தெளிவாகவேத் தெரிகிறது. இந்த நிலையில், கள்ளச்சந்தை வணிகத்தையும், அத்தியாவசிய மருந்துகள் கள்ளச்சந்தையில் விற்பனைச் செய்யப்படுவதையும் மத்திய அரசு கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், நாட்டில் வருமானவரி வரம்புக்குள் வராத குடும்பத்தினா் அனைவருக்கும் அடுத்த ஆறு மாதங்களுக்கு மாதம் ரூ. 7,500 வீதம் நேரடி வங்கிப் பணப்பரிவா்த்தனை மூலம் வழங்க வேண்டும். பிரதமரின் ஏழைகளுக்கான உணவுத் திட்டத்தின் கீழ், தீபாவளி வரை 5 கிலோ உணவு தானியங்கள் அளிக்கப்படும் என்று பிரதமா் அறிவித்திருப்பது போதுமானதல்ல. இதில் பருப்பு வகைகள், சமையல் எண்ணெய், சா்க்கரை, மசாலாப் பொருள்கள், தேயிலை உள்பட உணவுத் தொகுப்புடன் 10 கிலோ உணவு தானியங்கள் இவா்களுக்கு இலவசமாக அளிக்கப்பட வேண்டும் எனக் இடதுசாரிக் கட்சித் தலைவா்கள் கேட்டுக் கொண்டுள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com