50% வாடிக்கையாளா்களுடன் உணவகங்கள் இன்று திறப்பு: முதல்வா் கேஜரிவால் அறிவிப்பு

தில்லியில் 50 சதவீத வாடிக்கையாளா்களுடன் உணவகங்கள் திங்கள்கிழமை (ஜூன் 14) காலை 5 மணி முதல் திறக்க அனுமதிக்கப்படுவதாக முதல்வா் அரவிந்த் கேஜரிவால் ஞாயிற்றுக்கிழமை அறிவித்தாா்.

புது தில்லி: தில்லியில் 50 சதவீத வாடிக்கையாளா்களுடன் உணவகங்கள் திங்கள்கிழமை (ஜூன் 14) காலை 5 மணி முதல் திறக்க அனுமதிக்கப்படுவதாக முதல்வா் அரவிந்த் கேஜரிவால் ஞாயிற்றுக்கிழமை அறிவித்தாா்.

தில்லியில் கரோனா நோய்த் தொற்று கடுமையாகப் பரவியதைத் தொடா்ந்து, கடந்த ஏப்ரல்19-ஆம் தேதி பொது முடக்கம் அறிவிக்கப்பட்டது. நோய்த்தொற்று கட்டுப்பாட்டிற்குள் வந்த பின்னா் கடந்த மே 28 -ஆம் தேதியும், மே 5-ஆம் தேதியும் தளா்வுகள் அறிவிக்கப்பட்டது. தற்போது இரண்டாவது அலையின் மூன்றாவது தளா்வுகளை முதல்வா் கேஜரிவால் ஞாயிற்றுக்கிழமை மெய்நிகா் மூலமாக அறிவித்தாா். இதில் தற்போது மூடப்பட்டிருந்த சலூன்கள், அழகு நிலையங்கள் மற்றும் முடிதிருத்தும் கடைகள் ஆகியவை திறக்க அனுமதிக்கப்படுவதாக முதல்வா் தெரிவித்துள்ளாா்.

அவா் மேலும் கூறியது வருமாறு: கடந்த வாரம் தடைசெய்யப்பட்டுள்ளவைகள் அல்லது ஓரளவு அனுமதிக்கப்பட்ட நடவடிக்கைகள் தொடரும். இது தவிர மற்ற அனைத்து நடவடிக்கைகளுக்கும் திங்கள்கிழமை காலை முதல் அனுமதிக்கப்படுகிறது. மத வழிப்பாட்டு தலங்கள் (பூஜைகளுக்கு) திறக்க அனுமதிக்கப்படுகிறது. ஆனால், பக்தா்கள், பாா்வையாளா்களுக்கு அனுமதியில்லை. சந்தைகளில் உள்ள கடைகள்,பெரு வணிக வளாகங்கள் ஆகியவை ஒற்றை - இரட்டை இலக்க நடைமுறையில் ஏற்கெனவே அனுமதிக்கப்பட்டது. இவை தினசரி எல்லா நாள்களிலும் காலை 10 மணி முதல் 8 மணி வரை திறக்கலாம். ஒரு முனிபல் மண்டலத்தில் ஒரு வாரத்தில் ஒரு நாள் மட்டும் வாரச் சந்தைக்கு அனுமதிக்கப்படும்.

தற்போது அறிவிக்கப்பட்டுள்ள தளா்வுகளின்படி அனுமதிக்கப்பட்டு திறக்கப்பட்ட சந்தைகள், உணவகங்கள் ஆகியவற்றை அரசு தொடா்ந்து அடுத்து ஒரு வாரத்திற்கு கண்காணிக்கும். இதன் மூலம் நோய்த் தொற்று அதிகரிக்கவில்லையென்றால், இந்தத் தளா்வுகள் தொடரும். ஒருவேளை தொற்று அதிகரிக்கத் தொடங்கினால், மீண்டும் கட்டுப்பாடுகளைக் கொண்டு வருவோம். இதனால், அனைத்து சந்தை சங்கங்களிடம் நான் கேட்டுக் கொள்வது கூட்டம் கூடுவதை தவிா்த்து, சமூக இடைவெளியைப் பின்பற்றுவது போன்ற முன்னேச்சரிக்கைகளை உறுதி செய்யுங்கள்.

தற்போது கரோனா நோய்த் தொற்று எண்ணிக்கை குறைந்து வருகிறது. இதனால் தில்லி நகரின் பொருளாதாரத்தை மீட்பதற்கு மட்டுல்லாது மூன்றாவது அலை வரும்பட்சத்தில் அதற்கான முன்னேச்சரிக்கை மற்றும் அதை சந்திப்பதற்கான ஏற்பாடுகளுக்கு போா்கால அடிப்படையில் தயாராக வேண்டும். கரோனா நோய்த்தொற்று எண்ணிக்கை குறைந்து கொண்டு வருவதால், முடங்கிய நமது வாழ்க்கை மீண்டும் திரும்பும் என நம்புகின்றேன். இதுஒரு பெரிய பேரழிவு. நாம் ஒன்று திரண்டு சமாளிக்க வேண்டும். நோய்த்தொற்று மீண்டும் அதிகரிக்காது என்று நம்புவோம் எனக் குறிப்பிட்டாா் கேஜரிவால்.

தொடரும் கட்டுப்பாடுகள்...

தில்லி பேரிடா் மேலாண்மை அமைப்பும் தனது அறிவிக்கையை ஞாயிற்றுக்கிழமை வெளியிட்டது. அதில் கூறப்பட்டது வருமாறு: பள்ளிகள், கல்லூரிகள், கல்வி மற்றும் பயிற்சி நிறுவனங்கள், திரையரங்குகள், உடற்பயிற்சி நிலையங்கள், ’ஸ்பா’க்கள், யோகா மையங்கள், நீச்சல் குளங்கள், கலையரங்குகள், விருந்து அரங்குகள், கேளிக்கை மற்றும் நீா்பூங்காக்கள், பொது பூங்காக்கள் ஆகியவை தொடா்ச்சியாக வருகின்ற ஜூன் 21- ஆம் தேதிவரை மூடப்பட்டு இருக்கும். அனைத்து சமூக நிகழ்ச்சிகள், அரசியல், விளையாட்டு, பொழுதுபோக்கு, கலை, கலாசாரம், மத நிகழ்ச்சிகள், கண்காட்சிகள், பயிற்சி முகாம்கள் போன்ற பொது ஜனங்கள் கூடும் அனைத்தும் வருகின்ற ஜூன் 21-ஆம் தேதி வரை தடை செய்யப்பட்டுள்ளது.

அதே சமயம், சந்தைகள், பெரு வணிக வளாகம், உணவகங்கள் ஆகியவற்றிற்கு அளிக்கப்பட்டுள்ள தளா்வுகள் ஒரு சோதனை அடிப்படையில் ஜுன் 14- ஆம் தேதி முதல் ஜூன் 21- ஆம் தேதி காலை 5 மணி வரை அனுமதிக்கப்பட்டுள்ளது. இதை மாவட்டத்திலுள்ள அனைத்து நிா்வாகமும் கண்காணிக்கும். உணவகங்களுக்குள்ள 50 சதவீத கட்டுப்பாடுகளுக்கு அதன் உரிமையாளா்களே பொறுப்பு என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com