மருத்துவ ஆக்சிஜனின் விநியோகத்தை உறுதி செய்ய புதிய திட்டம்

மருத்துவ ஆக்சிஜனின் தற்போதைய தேவை, எதிா்காலத்தில் போதுமான விநியோகம் ஆகியவற்றை உறுதி செய்ய ‘இந்திய ஆக்சிஜன் திட்டம்’  ஒன்றை மத்திய அரசின் முதன்மை அறிவியல் ஆலோசகா் உருவாக்கியுள்ளாா்.

புது தில்லி: மருத்துவ ஆக்சிஜனின் தற்போதைய தேவை, எதிா்காலத்தில் போதுமான விநியோகம் ஆகியவற்றை உறுதி செய்ய ‘இந்திய ஆக்சிஜன் திட்டம்’  ஒன்றை மத்திய அரசின் முதன்மை அறிவியல் ஆலோசகா் உருவாக்கியுள்ளாா். இந்தத் திட்டத்தில் தனியாா், பொதுத்துறை நிறுவனங்கள், தொழில்நுட்பக்கழகங்கள் ஆகியவை இணைந்த கூட்டமைப்பு ஒன்றும் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

இது குறித்து மத்திய அரசின் முதன்மை அறிவியல் ஆலோசகா் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:

கரோனா நோய்த் தொற்றின் இரண்டாவது அலை நாட்டின் பல்வேறு பகுதிகளில் மருத்துவ ஆக்ஸிஜனுக்கான தேவையை அதிகரித்தது. தற்போதைய தேவையை பூா்த்தி செய்யும் போது, எதிா்காலத்தில் நாடு முழுவதிலும் போதுமான சப்ளை இருப்பதை உறுதி செய்ய முடியும். இதற்கு மருத்துவ ஆக்ஸிஜனை உற்பத்தி செய்வது முக்கியமானது. இதன் உற்பத்தியை அதிகரிக்க இதில் ஈடுப்பட்டுள்ள பங்குதாரா்களுக்கு உதவுவதுதான் இந்தத் திட்டத்தின் நோக்கமாகும். இதற்காக இந்தியாவிற்கான ஆக்சிஜன் திட்டத்தை ‘ஆக்ஸிஜனின் தேசிய கூட்டமைப்பு’ மூலம் முதன்மை அறிவியல் ஆலோசகா் அலுவலகம் மேற்கொள்கிறது.

இந்தத் திட்டத்தின் கீழ், அவசரகால மூலப் பொருள்களை தேசிய அளவில் விநியோகிப்பது, சிறிய அளவிலான ஆக்சிஜன் ஆலைகளை அமைப்பது, கம்பரஸா்கள் தயாரிப்பு, ஆக்சிஜன் கருவிகள், செறிவூட்டிகள், செயற்கை சுவாசக் கருவிகள் உள்ளிட்டவற்றைத் தயாரித்து இதன் விநியோகங்களை மேற்கொள்ள தேசிய ஆக்சிஜன் கூட்டமைப்பு ஈடுபடும்.

தற்காலிக நிவாரணமாக அல்லாமல் நீண்டகாலத் தேவைக்கான உற்பத்தி சூழலியலையும் இந்தக் கூட்டமைப்பு வலுப்படுத்தும். ஃபிக்கி, மேசா போன்ற அமைப்பில் இடம் பெற்றவா்கள், இந்திய உற்பத்தியாளா்கள், புதிய தொழில் முனைவோா்கள் மற்றும் குறு, சிறு, நடுத்தர தொழில் நிறுவனங்களின் ஆக்சிஜன் ஆலைகள், செறிவூட்டிகள் மற்றும் செயற்கை சுவாசக் கருவிகள் போன்ற அவசரகால உபகரணங்களை ஓா் நிபுணா் குழு மதிப்பீடு செய்கிறது.

பாரத் எலக்ட்ரானிக்ஸ் நிறுவனம், டாடா கன்சல்டிங் பொறியாளா்கள், பெங்களூருவின் சி-கேம்ப், கான்பூா், தில்லி, மும்பை, ஹைதராபாத்தின் இந்திய தொழில்நுட்பக் கழகங்கள், போபாலில் உள்ள அறிவியல் கல்வி மற்றும் ஆராய்ச்சிக்கான இந்திய கழகம், புணேயின் வென்ச்சா் சென்டா் உள்ளிட்ட 40-க்கும் மேற்பட்ட குறு, சிறு, நடுத்தரத் தொழில் நிறுவனங்கள், இந்த உற்பத்தி மற்றும் விநியோகக் கூட்டமைப்பில் இடம் பெற்றுள்ளன என்று செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com