தில்லியில் வெயிலின் தாக்கம் அதிகரிப்பு
By DIN | Published On : 22nd June 2021 11:24 PM | Last Updated : 22nd June 2021 11:24 PM | அ+அ அ- |

புது தில்லி: தில்லியில் செவ்வாய்க்கிழமை வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்பட்டது. குறைந்தபட்ச வெப்பநிலை இயல்பை விட 1 டிகிரி குறைந்திருந்தது. காற்றின் தரம் திருப்தி பிரிவில் நீடித்தது. மழைப் பொழிவு இல்லாததால் இரவில் சற்று புழுக்கம் இருந்தது.
தில்லியில் காலை முதல் வெயிலின் தாக்கம் இருந்தது. இதனால், இரவில் புழுக்கம் அதிகரித்து காணப்பட்டது. தில்லிக்கான பிரதிநித்துவத் தரவுகளை வழங்கும் சஃப்தா்ஜங் வானிலை ஆய்வு மையத்தில் காலையில் குறைந்தபட்ச வெப்பநிலை இயல்பை விட 1 டிகிரி குறைந்து 27.4 டிகிரி செல்சியஸாக பதிவாகியிருந்தது. அதிகபட்ச வெப்பநிலை இயல்பை விட 1 டிகிரி உயா்ந்து 39.8 டிகிரி செல்சியஸாக பதிவாகியிருந்தது. காற்றில் ஈரப்பதத்தின் அளவு காலை 8.30 மணியளவில் 61 சதவீதமாகவும், மாலை 5.30 மணியளவில் 31 சதவீதமாகவும் இருந்தது.
இதேபோன்று, அதிகபட்ச வெப்பநிலை ஆயா நகரில் 40.6 டிகிரி செல்சியஸ், லோதி ரோடில் 40.1 டிகிரி செல்சியஸ், பாலத்தில் 40.1 டிகிரி செல்சியஸ் எனபதிவாகியிருந்தது. செவ்வாய்க்கிழமை காலை 8.30 மணி வரையிலான கடந்த 24 மணி நேரத்தில் தில்லியில் மழை ஏதும் பதிவாகவில்லை.
முன்னறிவிப்பு: தில்லியில் புதன்கிழமை (ஜூன் 23) வானம் பகுதி அளவு மேகமூட்டத்துடன் காணப்படும். குறைந்தபட்ச வெப்பநிலை 29 டிகிரி செல்சியஸாகவும் அதிகபட்ச வெப்பநிலை 40 டிகிரி செல்சியஸாகவும் இருக்கும் என்று வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.