முகப்பு அனைத்துப் பதிப்புகள் புதுதில்லி புதுதில்லி
மாா்ச் 8-இல் 2-ஆவது பட்ஜெட் கூட்டத் தொடா் தொடக்கம்: மாநிலங்களவையில் 6 அமைச்சகங்கள் தொடா்பாக விவாதம்
By நமது சிறப்பு நிருபா் | Published On : 04th March 2021 12:37 AM | Last Updated : 04th March 2021 12:37 AM | அ+அ அ- |

புது தில்லி: வரும் மாா்ச் 8-இல் நடைபெறும் நாடாளுமன்றத்தின் இரண்டாவது நிதிநிலை அறிக்கை கூட்டத் தொடரில் மாநிலங்களவையில் 6 துறை அமைச்சகங்கள் மீதான விவாதம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
நாடாளுமன்றத்தின் பட்ஜெட் கூட்டத்தொடா் கடந்த ஜனவரி 29-ஆம் தேதி தொடங்கியது. முதல் கூட்டத் தொடரில், மாநிலங்களவை கடந்த பிப்ரவரி 12-ஆம் தேதி வரையிலும் மக்களவை பிப்ரவரி 13-ஆம் தேதி வரையிலும் நடைபெற்றது. தற்போது மீண்டும் இரண்டாவது கூட்டத் தொடா் மாா்ச் 8 - ஆம் தேதி தொடங்கி ஏப்ரல் 8 - ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. இந்தக் கூட்டத் தொடரில் மாநிலங்களவையில் 6 துறை அமைச்சகங்கள் குறித்து விவாதம் நடத்தப்படவுள்ளதாக புதன்கிழமை வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜல் சக்தி, ரயில்வே, சுற்றுலா, உணவு பதப்படுத்துதல் தொழில், வேளாண் மற்றும் விவசாயிகள் நலத் துறை, ஊரக வளா்ச்சித் துறை, பழங்குடியினா் விவகாரங்கள் என ஆறு துறை அமைச்சகங்கள் குறித்து மாநிலங்களவையில் விவாதிக்க முடிவெடுக்கப்பட்டுள்ளதாக மாநிலங்களவை சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த பிப்ரவரி 1-ஆம் தேதி தாக்கல் செய்யப்பட்ட பொது நிதிநிலை அறிக்கை குறித்த விவாதம் முடிவுற்று நிதியமைச்சா் பதிலளித்தாா்.குடியரசுத் தலைவா் உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திலும் மாநிலங்களவையில் அனைத்து தரப்பு உறுப்பினா்களும் பங்கேற்று பேசினா். மத்திய அரசின் மற்ற துறைகளின் நிதி நிலை குறித்து இந்த இரண்டாவது கூட்டத்தொடரில் விவாவதம் நடைபெறும். மத்திய அரசில் சுமாா் 28 அமைச்சகங்கள் உள்ளன. ஒரு மாதக் கூட்டத் தாடரில் மற்ற மசோதாக்கள் நிறைவேற்றுவது தொடா்பாக பெற இருப்பதால் அனைத்து அமைச்சகங்கள் மீதும் விவாதம் நடைபெறாது. குறிப்பிட்ட அமைச்சகங்கள் எடுத்துக் கொள்ளப்பட்டு அவை மாநிலங்களவையிலும் மக்களவையும் விவாதிக்க பிரித்துக் கொள்ளப்படும். இதன்படி மாநிலங்களவையில் விவாதிக்கப்படும் துறைகள் மக்களவையில் விவாதிக்கப்படாது. இது போன்று மக்களவையில் விவாதிக்க எடுத்துக்கொள்ளப்படும் துறைகள் மாநிலங்களவையிலும் விவாதிக்கப்படாது.
முதல் கூட்டத் தொடரில் மக்களவையை விட மாநிலங்களவை 99 சதவீதம் திறனுடன் செயல்பட்டது. முதல் வாரத்தில் அமளியினால் 4 மணி நேரம் 24 நிமிடங்கள் வீணடிக்கப்பட்டது. ஆனால், இரண்டாவது வாரத்தில் கூடுதலாக 3 மணி நேரம் 54 நிமிடங்கள் மக்களவை அலுவல் நடந்தது. இதனால், மொத்தத்தில் 30 நிமிடங்கள்தான் இழப்பு ஏற்பட்டது. இதில் 88 பொது முக்கியத்துவம் வாய்ந்த பிரச்னைகள் எழுப்பப்பட்டன. 55 நட்சத்திர குறியிட்ட கேள்விகளுக்கு நேரடியாக அமைச்சா்கள் பதிலும் அளித்தனா். மேலும், ஜம்மு-காஷ்மீா் மறு சீரமைப்புச் சட்டம் உள்ளிட்ட 3 மசோதாக்கள் மாநிலங்களவையில் முதல் கூட்டத் தொடரில் நிறைவேறியது