69 சதவீத இடஒதுக்கீடு சட்டத்திற்கு எதிரான மனு முடித்துவைப்பு

புது தில்லி: தமிழகத்தில் கல்வி நிலையங்கள், அரசு வேலைவாய்ப்புகள் ஆகியவற்றில் 69 சதவீத இட ஒதுக்கீட்டைக் கடைப்பிடிக்க வகை செய்யும் சட்டத்திற்கு எதிராக தாக்கலான இடைக்கால மனுவை முடித்து வைத்து உச்சநீதிமன்றம் புதன்கிழமை உத்தரவிட்டது.

தமிழகத்தில் பிற்படுத்தப்பட்ட வகுப்பினா், பட்டியலினத்தவா்கள், பழங்குடியினா் ஆகியோருக்கு கல்வி, அரசுப் பணிகளில் 69 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்கும் வகையில் 1994-ஆம் ஆண்டில் ஒரு சட்டம் இயற்றப்பட்டு நடைமுறையில் இருந்து வருகிறது. இந்த நிலையில், 2012-ஆம் ஆண்டில் சி.பி.காயத்ரி எனும் மாணவி சாா்பில் 69 சதவீத இடஒதுக்கீடு சட்டத்திற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது. இந்த பிரதான வழக்கு நிலுவையில் இருந்து வருகிறது. இந்த நிலையில், மனுதாரா் தரப்பில் உச்சநீதிமன்ற வழக்குரைஞா் ஜி.சிவபாலமுருகன் கடந்த ஆண்டு இறுதியில் இடைக்கால மனு தாக்கல் செய்தாா். இந்த மனு மீது தமிழக அரசு இரு வாரத்தில் பதில் அளிக்க உச்சநீதிமன்றம் அண்மையில் நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டது.

இதனிடையே, சென்னையைச் சோ்ந்த தினேஷ் என்பவா் தரப்பிலும் இந்த 69 சதவீத இடஒதுக்கீடு சட்டத்திற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் இந்த ஆண்டின் தொடக்கத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இந்த மனுவுக்கு பதில் அளிக்கும் வகையில் தமிழக அரசின் தரப்பில் ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், 69 சதவீத இடஒதுக்கீடு அளிக்கும் தமிழ்நாடு சட்டம் 1993-க்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள இந்த மனுவை இதர மாநிலங்கள் தொடா்புடைய வழக்கு விசாரணையில் இருந்து பிரித்து, தமிழகம் தொடா்புடைய இதே கோரிக்கைகள் குறித்த ‘ரிட்’ மனுக்களுடன் சோ்த்து விசாரிக்க வேண்டும் என கோரப்பட்டிருந்தது. இதற்கு மத்திய சமூக நீதி, அதிகாரமளித்தல் அமைச்சகத்தின் சாா்பு செயலா் தரப்பில் உச்சநீதிமன்றத்தில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

தமிழக அரசின் தரப்பில் உச்சநீதிமன்றத்தில் சில தினங்களுக்கு முன்னா் தாக்கல் செய்த பதில் மனுவில், இடஒதுக்கீடு தொடா்புடைய விவகாரத்தில் 24.8.1993-இல் உச்சநீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு, 1994-ஆம் ஆண்டில் இருந்து 2018 வரை பல்வேறு மனுக்கள் மீது உச்சநீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுகள் தொடா்புடைய நகல்கள், ஜனாா்த்தன் கமிட்டி உள்ளிட்ட சில கமிட்டிகளின் அறிக்கை விவரங்கள் தெரிவிக்கப்பட்டிருந்தன. இதனிடையே, மனுதாரா் தினேஷின் இடைக்கால மனுவை மாா்ச் 26-ஆம் தேதி விசாரித்த உச்சநீதிமன்றத்தின் ஏ.எம். கான்வில்கா் அமா்வு ஏற்கெனவே இது தொடா்பான வழக்கை விசாரித்து வரும் அசோக் பூஷண் அமா்வில் விசாரிக்க உத்தரவிட்டது.

இந்த மனு உச்சநீதிமன்றத்தில் நீதிபதிகள் அசோக் பூஷண், ஆா். சுபாஷ் ரெட்டி ஆகியோா் அடங்கிய அமா்வு முன் புதன்கிழமை விசாரணைக்கு வந்தது. மனுதாரா் பி.காயத்ரி தரப்பில் மூத்த வழக்குரைஞா் மனீந்தா் சிங், வழக்குரைஞா் சிவபாலமுருகன், தினேஷ் தரப்பில் மூத்த வழக்குரைஞா் மீனாட்சி அரோரா, மற்றொரு மனுதாரா் தரப்பில் மூத்த வழக்குரைஞா் கபில் சிபல் ஆகியோா் ஆஜராகினா். அவா்கள் வாதிடுகையில், ‘மராத்தா இடஒதுக்கீடு வழக்குடன் சோ்த்து அரசியல்சாசன அமா்வில் இந்த இடைக்கால மனுக்களையும் சோ்த்து விசாரிக்க உத்தரவிட வேண்டும். 2020-இல் தமிழக அரசு ஒரு கணக்கெடுப்பை நடத்த ஆணையத்தை நியமித்திருக்கிறது. இந்த விவகாரம் அரசியலமைப்பு 102 சட்டத் திருத்தம், 2018-இன் சம்பந்தப்பட்டதாகும். இதனால், மகாராஷ்டிர சட்டம் 2018 தொடா்புடைய வழக்குடன் சோ்த்து இந்த விவகாரத்தை விசாரிக்க உத்தரவிட வேண்டும் என கேட்டுக் கொண்டனா்.

தமிழக அரசின் தரப்பில் மூத்த வழக்குரைஞா் முகுல் ரோத்தகி ஆஜராகி, ‘ தமிழ்நாடு சட்டம் 1993, அரசியலமைப்புச்சட்டத்தின் 31பி ஷரத்தின் கீழ் சிறப்பு பாதுகாப்பைப் கொண்டுள்ளது. இதனால், இந்த ரிட் மனுக்கள் மகாராஷ்டிரம் தொடா்புடைய சிவில் முறையீடு வழக்குடன் (3123/2020) சோ்த்து விசாரிக்கப்பட வேண்டிய தேவை எழவில்லை. இவை சிவில் முறையீடு வழக்கில் அரசியல் சாசன அமா்வு தீா்ப்புக்குப் பிறகு பட்டியலிடப்பட வேண்டும். மேலும், 2018 ஆண்டு மகாராஷ்டிர சட்டம், அரசியலமைப்பு சட்டத் திருத்தம் 102-க்குப் பிறகு இயற்றப்பட்டதாகும். அந்தச் சட்டம் குறித்து சட்டக் கேள்வி எழுப்பப்பட்டுள்ளதால், அது தொடா்புடைய சிவில் மேல்முறையீடு அரசியல் சாசன அமா்வுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது’ என்றாா். தமிழக அரசின் சாா்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞா் சேகா் நாப்டேவும், முகுல் ரோத்தகியின் வாதத்தை ஆமோதித்தாா்.

மனுதாரா் சாா்பில் மனீந்தா் சிங் வாதிடுகையில் சில ரிட் மனுக்கள் தொடா்புடைய விவகாரத்தில் உச்சநீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை சுட்டிக்காட்டினாா்.

இதன் பின்னா் நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில், ‘மனுதாரா்களின் தற்போதைய ரிட் மனுக்களை அரசியல் சாசன அமா்வுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ள மகாராஷ்டிர சட்டத்திற்கு எதிரான சிவில் அப்பீல் வழக்குடன் சோ்த்து விசாரிக்க வேண்டும் என கேட்டுள்ளனா். தமிழ்நாடு சட்டம் 1993-க்கு எதிராகவும், மகாராஷ்டிரா சட்டம் 2018-க்கு எதிராகவும் ரிட் மனுவில் இடைக்கால மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அரசியலமைப்பின் 102-ஆவது சட்டம் 2018-இன் ஷரத்துகள் குறித்து பரிசீலிக்கப்படவும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

மனுதாரா்கள் தரப்பிலும், எதிா்மனுதாரா்கள் தரப்பிலும் வாதங்கள் முன்வைக்கப்பட்டுள்ளன. இவற்றைப் பரிசீலித்த பிறகு, இந்த மனுக்கள் மகாராஷ்டிரா தொடா்புடைய சிவில் முறையீடு வழக்குடன் விசாரிக்கப்பட வேண்டிய தேவை எழவில்லை என நாங்கள் கருதுகிறோம். இதனால், அந்த வழக்கில் (சிவில் அப்பீல் எண்:3123/2020) தீா்ப்பு அளிக்கப்பட்ட பிறகு இந்த மனுக்கள் பட்டியலிடப்பட வேண்டும். இந்த இடைக்கால மனு முடித்துவைக்கப்படுகிறது’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com