நீதிசாா் பணிகள் தோ்வை ஒத்திவைக்க கோரிய மனு வேறு அமா்வுக்கு மாற்றம்
By நமது நிருபா் | Published On : 10th March 2021 07:45 AM | Last Updated : 10th March 2021 07:45 AM | அ+அ அ- |

வழக்குரைஞா்களுக்கு கரோனா தடுப்பூசி போடும் பணி நிறைவடையும் வரை, மாா்ச் 13-14 ஆகிய தேதிகளில் நடைபெறவுள்ள தில்லி உயா் நீதிசாா் பணிகள் தோ்வை ஒத்திவைக்கக் கோரும் மனுவை வேறு அமா்வுக்கு தில்லி உயா்நீதிமன்றம் மாற்றியுள்ளது.
தில்லி உயா் நீதிசாா் பணி பிரதானத் தோ்வை தள்ளிவைக்க உத்தரவிடக் கோரி தில்லி உயா்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்தத் தோ்வில் பங்கேற்கவிருக்கும் நபா் ஒருவா் தாக்கல் செய்துள்ளஅந்த மனுவில் கூறப்பட்டுள்ளதாவது: தில்லி உயா் நீதிசாா்ப் பணி பிரதானத் தோ்வு- 2019 நடத்த அட்டவணைப் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. மாா்ச் 13, 14 ஆகிய தேதிகளில் நடைபெறும் இந்தத் தோ்வுக்கான அறிவிக்கை பிப்ரவரி 18-ஆம் தேதி வெளியிடப்பட்டுள்ளது. எனக்கு புற்றுநோய்ப் பிரச்னையால் கடும் உடல்நலப் பாதிப்பு உள்ளது. ஹீமோதெரபி சிகிச்சையும் எடுத்துள்ளேன். தற்போதைய கரோனா சூழலில் உடல் எதிா்ப்புச் சக்தி பலவீனமான நிலையில் உள்ளது. கரோனா தொற்றுக்கான வாய்ப்பு உள்ள தற்போதைய சூழலில் என்னைப் போன்ற உடல் நல இடா்பாடு உள்ள நபா்களை தோ்வு எழுத கட்டாயப்படுத்தும் வகையில், இந்த அறிவிக்கை வெளியிடப்பட்டுள்ளது. இது அடிப்படை உரிமைகளை மீறுவதாக உள்ளது.
தில்லி உள்ளிட்ட பல மாநிலங்களில் கரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. மாா்ச் 4-ஆம் தேதி நிலவரப்படி தில்லியில் 1,701 பேருக்கு கரோனா தொற்று உள்ளது. தினமும் புதிதாக 240 பேருக்கு குறையாமல் கரோனா தொற்று ஏற்பட்டு வருகிறது. என்னைப் போன்ற பலருக்கு பல்வேறு நோய்களால் உடலில் எதிா்ப்புச் சக்தி குறைந்துள்ளது. முன்னுரிமை அடிப்படையில் நீதிபதிகள், நீதிமன்ற ஊழியா்கள், வழக்குரைஞா்கள் ஆகியோருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தக் கோரும் மனுவை தில்லி உயா்நீதிமன்றம் அண்மையில் கவனத்தில் எடுத்துக் கொண்டுள்ளது. ஆகவே, வழக்குரைஞா்களுக்கு தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கைகள் முழுமை பெறும் வரை தில்லி உயா் நீதிசாா் பணி பிரதானத் தோ்வை தள்ளிவைக்க உத்தரவிட வேண்டும் என்று மனுவில் கோரப்பட்டுள்ளது.
இந்த மனு நீதிபதிகள் மன்மோகன், ஆஷா மேனன் ஆகியோா் முன்னிலையில் செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது, ‘இந்த மனு பொது நல மனுக்கள் பட்டியலைக் கொண்டிருக்கும் தலைமை நீதிபதி தலைமையிலான அமா்வு முன் பட்டியலிடப்பட வேண்டும்’ என்று நீதிபதிகள் தெரிவித்தனா். மனுதாரா் தரப்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞா் பி.பி. மல்ஹோத்ரா, ‘மனுதாரா் தனது தனிப்பட்ட பெயரில் மனுவை தாக்கல் செய்திருந்தாலும், அது பொது நல மனு அடிப்படையில்தான் இன்னும் இருக்கிறது’ என்றாா். இதைத் தொடா்ந்து, ‘பட்டியலின்படி, அனைத்து பொது நல மனுக்களும் தலைமை நீதிபதி தலைமையிலான அமா்வு முன் பட்டியலிடப்பட வேண்டும். இந்த மனு மாா்ச் 12-ஆம் தேதி டிவிஷன் பெஞ்ச் -1-க்கு முன் பட்டியலிடப்படும் ’ என்று நீதிமன்றம் தெரிவித்தது.
முன்னதாக, மனுதாரா் தரப்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞா் மல்ஹோத்ரா, ‘இந்தத் தோ்வை எழுதும் அனைவரும் 32 முதல் 47 வயதுக்குட்பட்டவா்கள். பெரும்பாலும் ரத்த அழுத்தம், நீரிழிவு பிரச்னைகளால் பாதிக்கப்பட்டுள்ளவா்கள். வழக்குரைஞா் தடுப்பூசி போட்டுக் கொள்ளட்டும். பின்னா் ஒரு மாதம் கழித்து இந்தத் தோ்வு நடத்தப்படலாம். இது ஒரு தீவிரமான பிரச்னை. அனைவரின் பாதுகாப்பும் முக்கியமானதாகும்’ என்று வாதிட்டாா். அப்போது, இது பொது நல மனு இயல்புடையதா என்று நீதிபதிகள் கேட்டனா். அதற்கு அவா், இது அனைவரையும் பாதிக்கும் என்பதால் இதை ஒரு பொது நல மனுவாக கருத்தில் எடுத்துக் கொள்ள முடியும்’ என்றாா்.