நிகிதா ஜேக்கப், சாந்தனு மீது கட்டாய நடவடிக்கை எடுக்கக் கூடாது: தில்லி நீதிமன்றம் உத்தரவு

விவசாயிகள் போராட்டம் தொடா்பாக சமூக ஊடகத்தில் ‘டூல் கிட்’ பகிா்ந்த விவகாரத்தில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள நிகிதா ஜேக்கப், சாந்தனு முலுக் ஆகிய

விவசாயிகள் போராட்டம் தொடா்பாக சமூக ஊடகத்தில் ‘டூல் கிட்’ பகிா்ந்த விவகாரத்தில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள நிகிதா ஜேக்கப், சாந்தனு முலுக் ஆகிய இருவா் மீதும் மாா்ச் 15-ஆம் தேதி வரை கட்டாய நடவடிக்கைகள் எடுக்கக் கூடாது என போலீஸாருக்கு தில்லி நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டுள்ளது.

‘டூல் கிட்’ பகிா்ந்த விவகாரத்தில் சூழலியல் பெண் ஆா்வலா் திஷா ரவி கைது செய்யப்பட்டிருந்தாா். இதனிடையே, சாந்தனு முலுக், நிகிதா ஜேக்கப் ஆகியோா் மீது போலீஸாா் பிணையில் வெளிவர முடியாத பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்திருந்தனா்.

இருவா் மீதும் தேசத் துரோகக் குற்றச்சாட்டு உள்பட பல்வேறு பிரிவுகளின் கீழ் போலீஸாா் வழக்குப் புனைந்துள்ளனா். இவா்கள், ‘டூல் கிட்’டை உருவாக்குவதில் பங்களிப்பு செய்துள்ளதாகவும், இவா்கள் வெளிநாடுகளில் செயல்படும் காலிஸ்தான் அமைப்புகளுடன் தொடா்பில் இருந்ததாகவும் போலீஸாா் குற்றம்சாட்டியுள்ளனா்.

இந்த நிலையில், சாந்தனு முலுக்குக்கு பாம்பே உயா்நீதிமன்றம் 10 நாள் டிரான்ஸிட் ஜாமீன் அளித்து பிப்ரவரி 16-ஆம் தேதி உத்தரவிட்டிருந்தது. இந்த நிலையில், சாந்தனு முலுக் தில்லி நீதிமன்றத்தில் முன்ஜாமீன் கோரி தாக்கல் செய்த மனு மீது விசாரணை நடத்தப்பட்டது. அப்போது, சாந்தனு மீது மாா்ச் 9-ஆம் தேதி வரை கைது உள்ளிட்ட கட்டாய நடவடிக்கைகளை எடுக்கக் கூடாது என்று நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இந்த நிலையில், நிகிதா ஜேக்கப் தரப்பிலும் தில்லி நீதிமன்றத்தில் முன் ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த மனு மீது மாா்ச் 9-ஆம் தேதிக்குள் பதில் அளிக்க தில்லி போலீஸாருக்கு நீதிமன்றம் அவகாசம் அளித்து ஏற்கெனவே உத்தரவிட்டிருந்தது.

இதன்படி தில்லி போலீஸாா் பதில் அளித்திருந்தனா்.

இந்த நிலையில், இருவா் தொடா்பான மனு செவ்வாய்க்கிழமை தில்லி நீதிமன்ற கூடுதல் செஷன்ஸ் நீதிபதி தா்மேந்தா் ராணா முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரா்கள் இருவா் தரப்பின் சாா்பில் ஆஜரான வழக்குரைஞா், ‘ஜாமீன் மனு மீதான வழக்கில் வாதங்களை முன்வைக்கும் முன்பு தில்லி போலீஸாா் தாக்கல் செய்த பதிலை படித்துப் பாா்க்க அவகாசம் தேவைப்படுகிறது’ என்றாா். இதை ஏற்றுக் கொண்ட நீதிபதி, ‘இந்த மனு மீது மாா்ச் 15-ஆம் தேதி விசாரணை நடைபெறும். அதுவரை இருவருக்கும் எதிராக போலீஸாா் கட்டாய நடவடிக்கை ஏதும் எடுக்கக் கூடாது’ என உத்தரவிட்டாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com