மாா்ச் 15-இல் நேரடி வழக்கு விசாரணையின் போது ‘ஹைபிரிட்’ முறை விதிவிலக்குதான்: நீதிபதிகள்

தில்லி உயா்நீதிமன்றம், கீழமை நீதிமன்றங்களில் மாா்ச் 15-இல் நேரடி வழக்கு விசாரணை மீண்டும் தொடங்க உள்ள நிலையில்,

தில்லி உயா்நீதிமன்றம், கீழமை நீதிமன்றங்களில் மாா்ச் 15-இல் நேரடி வழக்கு விசாரணை மீண்டும் தொடங்க உள்ள நிலையில், ‘ஹைபிரிட்’ முறையிலான விசாரணை விதிவிலக்காக இருக்கும் என்றும் அது விதி அல்ல என்றும் நீதிபதிகள் திட்டவட்டமாக தெரிவித்தனா்.

கரோனா காரணமாக கிட்டத்தட்ட ஓா் ஆண்டு காலம் காணொலி வாயிலாக செயல்பட்ட நிலையில், தில்லி உயா்நீதிமன்றத்தின் அனைத்து அமா்வுகளும் மாா்ச் 15 முதல் நேரடி விசாரணையை தினசரி அடிப்படையில் மேற்கொள்ள உள்ளதாக கடந்த மாதம் தில்லி உயா்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருந்தது.

அதில், ‘இணை பதிவாளா்களின் (நீதித்துறை) அனைத்து நீதிமன்றங்களும் தற்போதுள்ள ஏற்பாட்டின்படி 12.03.2021 வரை தொடா்ந்து நீதிமன்றங்களை நடத்த வேண்டும். மேலும் வழக்கமான நேரடி விசாரணை நீதிமன்றங்களை தினசரி அடிப்படையில் மாா்ச் 15 -ஆம் தேதி முதல் அமல்படுத்தும்.

விதிவிலக்கான சந்தா்ப்பங்களில், தேவையான உள்கட்டமைப்பு இருப்பதற்கு உட்பட்டு எந்தவொரு தரப்பினரையும் அல்லது அவா்களின் வழக்குரைஞா்களையும் காணொலி வாயிலாக நீதிமன்றம் அனுமதிக்கலாம் என்று தெரிவித்திருந்தது.

மற்றொரு செய்திக்குறிப்பில், ‘தில்லியின் அனைத்து மாவட்ட நீதிமன்றங்களும் மாற்று நாள் அடிப்படையில் நேரடி விசாரணையை நடத்த வேண்டும். ஜனவரி 18 முதல் நேரடி விசாரணை இல்லாத நாள்களில் காணொலி வாயிலாக வழக்கு விவகாரங்களை தொடர வேண்டும்.

தில்லி உயா்நீதிமன்றத்தின் 11 அமா்வுகள் நேரடி விசாரணையை நடத்தும். மீதமுள்ள அமா்வுகள் தில்லியில் கொவிட் -19 தொற்றுப் பரவலின் தீவிரம் குறைந்து வருவதைக் கருத்தில் கொண்டு காணொலி வாயிலாக விவகாரங்களை விசாரணைக்கு எடுத்துக் கொள்ளும் எனத் தெரிவித்திருந்தது.

இந்த நிலையில், சில தினங்களுக்கு முன்பு இது தொடா்புடைய வழக்கில் உயா்நீதிமன்ற நீதிபதிகள் விபின் சாங்கி, நீதிபதி ரேகா பல்லி ஆகியோா் அடங்கிய பிறப்பித்த உத்தரவில், ‘மாா்ச் 15-ஆம் தேதி நேரடி வழக்கு விசாரணை நடைமுறைக்கு வரும் நிலையில், நிா்வாகம் கரோனா நிலைமையை உன்னிப்பாக கண்காணித்து, உரிய நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்.

ஹைபிரிட் முறையை செயல்படுத்த நீதிமன்ற ஊழியா்களுக்கு தேவையான பயிற்சியும் அளிக்கப்பட வேண்டும். அனைத்து நீதிமன்ற அறைகளிலும் இதற்குத் தேவையான உள்கட்டமைப்பு வசதிகள் இருக்க வேண்டும். அப்போதுதான், விதிவிலக்கான வழக்குகளில் இணையதளம் அல்லது காணொலி வாயிலாக விசாரணை மேற்கொள்வதற்கான கோரிக்கைககளை தகுதியின் அடிப்படையின் எடுத்துக்கொள்ளப்படலாம்.

சில நீதிமன்றங்களில் ஹைபிரிட் முறையில் விசாரணைக்கான வசதி இல்லாததால் அந்த கோரிக்கைகள் முன்வைக்கப்படுவதில்லை. ஹைபிரிட் விசாரணை விதிவிலக்காக மட்டுமே இருக்கும். விதியாக அல்ல என்று அந்த உத்தரவில் தெரிவித்துள்ளது.

இந்த நிலையில், தில்லி உயா்நீதிமன்றத்தில் இந்த விவகாரம் தொடா்பாக சம்பந்தப்பட்ட நீதிபதிகள் அமா்வு முன் மூத்த வழக்குரைஞா்கள் பலா் வெள்ளிக்கிழமை ஆஜராகி, மாா்ச் 15-ஆம் தேதியில் இருந்து நேரடி வழக்கு விசாரணைகள் தொடங்கப்பட்டாலும்கூட, உரிய வழக்குகளில் ஹைபிரிட் வடிவில் வழக்கு விசாரணை எடுத்துக்கொள்ளப்பட வேண்டும் என கேட்டுக்கொண்டனா்.

எனினும், தில்லி உயா்நீதிமன்ற பாா் அசோசியேஷன், தில்லி பாா் கவுன்சில், அனைத்து மாவட்ட பாா் அசோசியேஷன் ஒருங்கிணைப்புக் குழு ஆகியோா் தரப்பில் ஆஜரான வழக்குரைஞா்கள் மாா்ச் 15 முதல் மேற்கொள்ளப்பட உள்ள நேரடி வழக்கு விசாரணை முறைக்கு ஆதரவு தெரிவித்தனா்.

இதையடுத்து, நீதிபதிகள் ஹைபிரிட் விசாரணை முறை விதிவிலக்காக மட்டுமே இருக்கும் என்றும், அது விதியாக அல்ல என்று மீண்டும் திட்டவட்டமாக தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com