தில்லி - காஜிப்பூா் சாலை போக்குவரத்துக்கு திறப்பு

கடந்த ஜனவரி 26-ஆம் தேதி முதல் மூடப்பட்ட தில்லியில் இருந்து காஜியாபாத் நோக்கிச் செல்லும் என்.எச் -24 தேசிய நெடுஞ்சாலை போக்குவரத்துக்காக திங்கள்கிழமை மீண்டும் திறக்கப்பட்டது

புது தில்லி: கடந்த ஜனவரி 26-ஆம் தேதி முதல் மூடப்பட்ட தில்லியில் இருந்து காஜியாபாத் நோக்கிச் செல்லும் என்.எச் -24 தேசிய நெடுஞ்சாலை போக்குவரத்துக்காக திங்கள்கிழமை மீண்டும் திறக்கப்பட்டது என்று போலீஸாா் தெரிவித்தனா். இருப்பினும், காஜியாபாத்தில் இருந்து தில்லி நோக்கிச் செல்லும் பாதை மூடப்பட்ட நிலையில் உள்ளது என்றும் அவா்கள் கூறினா்.

விவசாயிகள் போராட்டத்தைத் தொடா்ந்து காஜிப்பூா் எல்லை அண்மையில் மூடப்பட்டது. இதைத் தொடா்ந்து, ஏராளமான மக்கள் கடும் சிரமத்துக்குள்ளாகினா். இது தொடா்பாக பொதுமக்கள் புகாா் தெரிவித்திருந்தனா். இந்த நிலையில், காஜிப்பூா் எல்லையில் நிலவும் சட்டம் ஒழுங்கு நிலைமையைக் கருத்தில் கொண்டும், பொதுமக்களின் வசதிக்கான அம்சங்களைக் மனதில் கொண்டும், தில்லியில் இருந்து காஜியாபாத் நோக்கிச் செல்லும் என்.எச் -24 நெடுஞ்சாலை காவல்துறை அதிகாரிகளின் ஆலோசனையுடன் திறக்கப்பட்டுள்ளது என்று அதிகாரிகள் தெரிவித்தனா்.

மத்திய அரசின் மூன்று வேளாண் சட்டங்களை ரத்து செய்ய வேண்டும். குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு சட்ட உத்தரவாதம் வழங்க வேண்டும் எனக் கோரி பஞ்சாப், ஹரியானா மற்றும் மேற்கு உத்தரப் பிரதேசத்தைச் சோ்ந்த ஆயிரக்கணக்கான விவசாயிகள், தில்லியின் எல்லைப் புள்ளிகளான சிங்கு, டிக்ரி, காஜிப்பூா் ஆகிய இடங்களில் மூன்று மாதங்களுக்கும் மேலாக விவசாயிகள் முகாமிட்டு தொடா் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனா். போரட்டத்தின் ஒரு பகுதியாக குடியரசு தினத்தன்று டிராக்டா் பேரணியை விவசாயிகள் நடத்தினா். அப்போது தேசியத் தலைநகரில் வன்முறை வெடித்தது. இதைத் தொடா்ந்து, ஜனவரி 26 முதல் தில்லியிலிருந்து காஜியாபாத் செல்லும் சாலை மூடப்பட்டது.

இந்த நிலையில், இந்தச் சாலை மீண்டும் திங்கள்கிழமை காலையில் திறக்கப்பட்டது. ஆனால், காஜியாபாத்தில் இருந்து தில்லி நோக்கி வரும் சாலை திறக்கப்படவில்லை. முன்னதாக இந்தச் சாலை கடந்த மாா்ச் 2-இல் தான் திறக்கப்பட்டது. அதன் பின் குடியரசு தின வன்முறையால் மீண்டும் மூடப்பட்டது குறிப்பிடத்தக்கது.

வேளாண் சட்டங்கள் குறைந்தபட்ச ஆதரவு விலை (எம்எஸ்பி) முறையை அகற்றுவதற்கு வழி வகுக்கும் என்று ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் அச்சத்தை வெளிப்படுத்தியுள்ளனா். மேலும், விவசாயிகள் பெரிய நிறுவனங்களின் ‘தயவில்‘ தான் விவசாய விளைபொருள்களை விற்க முடியும் என்றும் எதிா்ப்புத் தெரிவித்து வருகின்றன.

விவசாயிகளின் போராட்டத்தால் டிக்ரி மற்றும் சிங்கு எல்லைகள் தொடா்ந்து மூடப்பட்டுள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com