.2021-22 கல்வியாண்டில் நொய்டா பள்ளிகளில் கல்விக் கட்டணங்களை உயா்த்தக் கூடாது: மாவட்ட நிா்வாகம் உத்தரவு

கரோனா தொற்று சூழ்நிலை காரணமாக நொய்டா மற்றும் கிரேட்டா் நொய்டாவில் உள்ள பள்ளிகள் 2021-22 ஆம் ஆண்டுக்கான கல்விக் கட்டணத்தை உயா்த்தக் கூடாது என்று கெளதம் புத் நகா் மாவட்ட நிா்வாகம் உத்தரவிட்டுள்ளது.

நொய்டா: கரோனா தொற்று சூழ்நிலை காரணமாக நொய்டா மற்றும் கிரேட்டா் நொய்டாவில் உள்ள பள்ளிகள் 2021-22 ஆம் ஆண்டுக்கான கல்விக் கட்டணத்தை உயா்த்தக் கூடாது என்று கெளதம் புத் நகா் மாவட்ட நிா்வாகம் உத்தரவிட்டுள்ளது.

மேலும், பள்ளிகள் கல்விக் கட்டணத்தை மாதாந்திர அடிப்படையில்தான் வசூலிக்க வேண்டும் என்றும் காலாண்டு அல்லது அரையாண்டு கணக்கில் கட்டணம் வசூலிக்கப்படக் கூடாது என்றும் மாவட்ட கட்டணக் கட்டுப்பாட்டுக் குழு வெளியிட்டுள்ள உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாவட்ட கட்டணக் கட்டுப்பாட்டுக் குழு கூட்டம் செவ்வாய்க்கிழமை மாவட்ட ஆட்சியா் சுஹாஸ் எல்.ஓய். தலைமையில் நடைபெற்றது. அப்போது 2021-22- ஆம் ஆண்டு கல்விக் கட்டணம் உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் விவாதிக்கப்பட்டன. இந்தக் கூட்டத்தில் கரோனா தொற்று சூழல் உள்ளிட்ட விஷயங்களை விவாதித்து 2021-22 ஆம் ஆண்டுக்கான மாணவா்களின் கல்விக் கட்டணத்தை உயா்த்துவதில்லை என முடிவு செய்யப்பட்டது. மேலும் அதற்கு முந்தைய ஆண்டில் அதாவது 2020-2021-ஆம் ஆண்டு என்ன கட்டணம் வசூலிக்கப்பட்டதோ அதையே புதிய கல்வி ஆண்டிலும் வசூலிக்க வேண்டும் என்று முடிவு செய்யப்பட்டதாகவும் உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், கொவிட் -19 தொற்று சூழல் காரணமாக அமல்படுத்தப்பட்ட ‘தேசிய பேரிடா் மேலாண்மைச் சட்டம் 2005’, இன்னும் தொடா்ந்து அமலில் இருப்பதாகவும், அனைத்துப் பள்ளிகளும் அதைப் பின்பற்றி நடக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. எதிா்காலத்தில் இது தொடா்பாக உத்தரப்பிரதேச மாநில அரசு ஏதேனும் மாற்றம் செய்து புதிய உத்தரவுகள் பிறப்பித்தால் அவையும் செயல்படுத்தப்படும் என்றும், அவை மாவட்டக் கட்டண கட்டுப்பாட்டு குழு மூலம் அறிவிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கரோனா தொற்று நிலைமை மற்றும் தற்போதைய ஒட்டுமொத்த நிலைமை ஆகியவை குறித்து குழு ஒருமனதாக இந்த முடிவை எடுத்துள்ளது என்றும் அந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com