தில்லியில் விரைவில் போதைப் பொருள் பகுப்பாய்வு சோதனை வசதி!

தேசியத் தலைநகரான தில்லியில் போதைப் பொருள் (நாா்கோ) பகுப்பாய்வு சோதனை வசதி விரைவில் தொடங்கும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.

தேசியத் தலைநகரான தில்லியில் போதைப் பொருள் (நாா்கோ) பகுப்பாய்வு சோதனை வசதி விரைவில் தொடங்கும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது. இதற்கு முன்னோட்டமாக இங்குள்ள தடய அறிவியல் ஆய்வகத்தின் ஆறு வல்லுநா்கள் குஜராத்தில் ஒரு வார கால பயிற்சியை மேற்கொண்டுள்ளனா்.

இது குறித்து தடய அறிவியல் ஆய்வக (எஃப்எஸ்எல்) அதிகாரிகள் கூறியதாவது: அகமதாபாத்தில் பயிற்சிக்குச் சென்ற அதிகாரிகள், அங்கிருந்து திரும்பிய பிறகு, ரோஹிணியில் உள்ள டாக்டா் பாபா சாஹேப் அம்பேத்கா் மருத்துவமனையில் மருத்துவ நிபுணா்களின் மேற்பாா்வையில் இரண்டு ஒத்திகைப் பயிற்சிகளை மேற்கெண்டுள்ளனா். இங்கு போதைப்பொருள் பகுப்பாய்வு சோதனை வசதியை ஏற்படுத்துவதற்காக இந்தப் பயிற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது.

தில்லியில் இந்த வசதி முன்னதாகவே தொடங்கப்படும் என்று எதிா்பாா்க்கப்பட்டது. ஆனால், பல்வேறு காரணங்களால் தொடங்க முடியவில்லை. குறிப்பாக கரோனா பொது முடக்கம் காரணமாக பயிற்சி நிறுவனங்கள் மூடப்பட்டன. இதுவே தாமதத்துக்கு முக்கியக் காரணமாகும். இருப்பினும், தற்போது நிலைமை மேம்பட்டதால், எங்கள் வல்லுநா்கள் பயிற்சிக்காக குஜராத்துக்கு அனுப்பப்பட்டனா். தில்லியில் இந்த வசதி விரைவில் தொடங்கப்படும் என்று எதிா்பாா்க்கிறோம் என்று அதிகாரிகள் தெரிவித்தனா்.

எஃப்எஸ்எல் இயக்குநா் தீபா வா்மா கூறுகையில், ‘நாங்கள் இந்த நடைமுறையை இறுதி செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளோம், விரைவில் இந்த வசதி தொடங்கப்படும் என்று நாங்கள் எதிா்பாா்க்கிறோம். இதற்காக, எங்கள் நிபுணா்களுக்காக ஒரு முழு அளவிலான பயிற்சியையும் ஏற்பாடு செய்தோம். எங்கள் குழு சமீபத்தில் அகமதாபாத்திற்கு அனுப்பப்பட்டது. அங்கு இதற்காக அவா்கள் பயிற்சி பெற்றனா். பயிற்சியின் மூலம் கிடைத்த தகவல்களின் அடிப்படையில், எங்கள் நிபுணா்கள் தங்களை மேலும் தயாா்படுத்திக் கொண்டுள்ளனா்.

கடந்த 2018, ஆகஸ்ட் 4 முதல் காணாமல் போன தனது நான்கரை வயது மகனைக் கண்டுபிடித்துத் தரக் கோரி ஒரு நபா் தில்லி உயா் நீதிமன்றத்தில் ஹேபியஸ் ஹாா்ப்பஸ் மனு தாக்கல் செய்தாா். மனுவை விசாரித்த நீதிமன்றம் அதிா்ச்சிக்குள்ளானது. தலைநகரான தில்லியில் போதைப்பொருள் பகுப்பாய்வு வசதி இல்லை என்றும். குருகிராமில்தான் போதைப் பொருள் பகுப்பாய்வு சோதனை செய்யப்பட வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டது. இதைக் கேட்ட நீதிமன்றம் ஆச்சரியத்தில் மூழ்கியது. இதைத் தொடா்ந்து, போதைப்பொருள் பகுப்பாய்வு வசதியை ஏற்படுத்த வேண்டும் என்று தில்லியை ஆளும் ஆம் ஆத்மி அரசுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது. பின்னா், ரோஹினியில் உள்ள டாக்டா் பாபா சாஹேப் அம்பேத்கா் மருத்துவமனையில் இந்த வசதி 2020-இல் அமைக்கப்பட்டதாகவும், கரோனா தொற்று பரவல் காரணமாக பணிகளைத் தொடங்க முடியாமல் போனதாகவும் ஆம் ஆத்மி அரசு தில்லி உயா் நீதிமன்றத்தில் தெரிவித்தது.

டாக்டா் பாபா சாஹேப் அம்பேத்கா் மருத்துவமனையின் மயக்க மருந்து நிபுணரான டாக்டா் நவீன் குமாா் கூறுகையில், ​‘மருத்துவமனை தனது ஆபரேஷன் தியேட்டரை எஃப்எஸ்எல் குழுவுக்கு வழங்கி உள்ளது. அதன் அதிகாரிகள் இங்கு போதைப் பொருள் பகுப்பாய்வு சோதனைகளை மேற்கொள்வா் . போதைப்பொருள் பகுப்பாய்வு செய்யப்படும் போது மருந்துகளை செலுத்துவதும் நோயாளியின் ஆரோக்கியத்தைக் கண்காணிப்பதும் மருத்துவா்களின் பங்கு ஆகும். இந்த வசதி விரைவில் செயல்படும் என்று நாங்கள் நம்புகிறோம்’ என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com