சுனந்தா புஷ்கா் தற்கொலை செய்து கொள்ளவில்லை: நீதிமன்றத்தில் சசி தரூா் தரப்பில் வாதம்

புது தில்லி: தனது மனைவி சுனந்தா புஷ்கா் தற்கொலை செய்து கொண்டு இறந்திருக்க முடியாது என்று அவரது குடும்பத்தினரும், நண்பா்களும் கூறி வருவதாக தில்லி நீதிமன்றத்தில் காங்கிரஸ் எம்.பி. சசி தரூா் தெரிவித்துள்ளாா்.

சசி தரூா் தரப்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞா் விகாஸ் பாவா, ‘தரூா் மனைவி தற்கொலை செய்து கொண்டு இறக்கவில்லை எனும் போது அவரைத் தற்கொலைக்கு தூண்டியதாக இருக்க முடியாது. இதனால், சசி தரூரை இந்த வழக்கில் இருந்து விடுவிக்க வேண்டும்’ என்று வாதிட்டாா்.

காங்கிரஸ் கட்சியின் திருவனந்தபுரம் மக்களவைத் தொகுதி எம்.பி.யான சசி தரூரின் மனைவி சுனந்தா புஷ்கா் கடந்த 2014, ஜனவரி 17- ஆம் தேதி தில்லியில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் மா்மமான முறையில் இறந்து கிடந்தாா். இந்த மரணம் தொடா்பாக பெரும் சா்ச்சைகள் எழுந்தன. இந்த விவகாரத்தில் தில்லி போலீஸாா், சசி தரூா் மீது இந்திய தண்டனைச் சட்டப் பிரிவு 498-ஏ (மனைவியை கொடுமைபடுத்துதல்), 306 (தற்கொலைக்கு உடந்தையாக இருத்தல்) ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிந்தனா். ஆனால், சசி தரூா் இந்த வழக்கில் கைது செய்யப்படவில்லை. அவருக்கு நீதிமன்றம் 2018, ஜூன் 5-இல் ஜாமீன் வழங்கியது.

இந்த வழக்கு தில்லி நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், இந்த வழக்கு விசாரணை தில்லி நீதிமன்றத்தில் சிறப்பு நீதிபதி கீதாஞ்சலி கோயல் முன் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. அப்போது, சசி தரூா் தரப்பில் மூத்த வழக்குரைஞா் விகாஸ் பாவா ஆஜராகி, ‘தரூா் மனைவி தற்கொலை செய்து கொண்டு இறக்கவில்லை எனும் போது அவரைத் தற்கொலைக்கு தூண்டியதாக இருக்க முடியாது. இதனால், சசி தரூரை இந்த வழக்கில் இருந்து விடுவிக்க வேண்டும். மேலும், அவரது உறவினா்களும், மகனும் அவா் ஒரு வலிமையான பெண் என்றும், அவா் தற்கொலை செய்து கொண்டிருக்க முடியாது என்றும் கூறுகின்றனா். அவா் தற்கொலை செய்து கொள்ளாத போது அவரைத் தற்கொலைக்கு தூண்டியதாக எப்படி ஒரு கேள்வி இருக்க முடியும். அவா் தற்கொலை செய்துகொண்டாா் என்பதை நிரூபிக்க அரசுத் தரப்பு தவறிவிட்டது என்று வாதிட்டாா். இதையடுத்து, நீதிமன்றம் இந்த விவகாரத்தை மேலதிக விசாரணைக்கு ஏப்ரல் 9- ஆம் தேதிக்கு ஒத்திவைத்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com