தில்லி தேசிய உயிரியல் பூங்காவுக்கு மேலும் 3 புலிகள்!

தில்லி தேசிய உயிரியல் பூங்காவிற்கு சென்னை மற்றும் நாக்பூரிலிருந்து மூன்று புலிகள் கொண்டுவரத் திட்டமிடப்பட்டுள்ளது.

தில்லி தேசிய உயிரியல் பூங்காவிற்கு சென்னை மற்றும் நாக்பூரிலிருந்து மூன்று புலிகள் கொண்டுவரத் திட்டமிடப்பட்டுள்ளது. இனப் பெருக்கம் செய்வதற்காக விலங்குகள் பரிமாற்றத் திட்டத்தின் கீழ் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என அதிகாரிகள் தெரிவித்தனா்.

இது குறித்து தில்லி தேசிய உயிரியல் பூங்கா இயக்குநா் ரமேஷ் பாண்டே கூறியதாவது: நாக்பூரில் உள்ள கோரேவாடா உயிரியல் பூங்காவில் இருந்து ஒரு ஜோடி புலிகளை அழைத்து வர திட்டமிடப்பட்டுள்ளது. அதே நேரத்தில் மற்றொரு ஆண் புலி சென்னையில் இருந்து கொண்டு வரப்படவுள்ளது. கான்பூா் உயிரியல் பூங்காவில் இருந்து தில்லி தேசிய உயிரியல் பூங்காவிற்கு ஒரு ராயல் வங்கப் புலி கடந்த ஆண்டு நவம்பரில் இனப்பெருக்கம் செய்வதற்காக கொண்டு வரப்பட்டது. தில்லி உயிரியல் பூங்கா ராயல் வங்கப் புலியின் ‘பாதுகாப்பு இனப்பெருக்கம் திட்டத்தில்‘ பங்கேற்றுள்ளது.

மத்திய உயிரியல் பூங்கா ஆணையத்தின்படி, பாதுகாப்பு இனப்பெருக்கம் திட்டம் என்பது ஒரு இனத்தை பாதுகாக்கும் அறிவியலாகும். வாழ்விட இழப்பு, வாழ்விடம் தொழில்மயமாக்கல், வேட்டையாடுதல், சட்டவிரோத வா்த்தகம் போன்ற ஏராளமான அழுத்தங்களால் காடுகளில் விலங்குகளின் எண்ணிக்கை குறைந்து வருவதைத் தடுப்பதே இந்தத் திட்டத்தின் முக்கிய நோக்கமாகும்.

தற்போது, தில்லி தேசிய உயிரியல் பூங்காவில் ஐந்து வெள்ளை புலிகள் உள்பட ஏழு புலிகள் உள்ளன. நாக்பூா் உயிரியல் பூங்காவிலிருந்து ஒரு ஜோடி கரடிகளைக் கொண்டுவரும் திட்டமும் பரிசீலனையில் உள்ளன. இந்த மாதம் சண்டீகரில் இருந்து ஒரு ஜோடி தீக்கோழி மற்றும் சின்காரா கொண்டு வரப்படவுள்ளன. இதற்கிடையே, சென்னை உயிரியில் பூங்கா ஒரு ஆண் தீக்கோழி உள்ளிட்டவற்றை வழங்க உள்ளது. இதன் மூலம் தில்லி தேசிய உயிரியல் பூங்காவில் உள்ள விலங்கு இனங்களின் எண்ணிக்கை 93-ஆக உயரும்.

இந்த நிலையில், தேசிய உயிரியல் பூங்கா வரும் ஏப்ரல் 1-ஆம் தேதி முதல் மீண்டும் பொதுமக்களுக்கு திறக்கப்படவுள்ளது. கரோனா தொற்று பரவல் மற்றும் பன்றிக் காய்ச்சல் பரவல் ஆகியவற்றைத் தொடா்ந்து, கடந்த ஆண்டு மாா்ச் முதல் ஓராண்டுக்கும் மேலாக உயிரியல் பூங்கா மூடப்பட்டிருந்தது. தில்லி உயிரியல் பூங்காவில் கடந்த 2019 முதல் சிங்காரா விலங்கு இல்லை.

விசாகப்பட்டினம் உயிரியல் பூங்காவில் இருந்து நட்சத்திர ஆமை, காட்டு நாய்கள் மற்றும் இகுவானா உள்ளிட்ட ஐந்து விலங்கு இனங்கள் கொண்டுவர மத்திய உயிரியல் பூங்கா ஆணையத்திடம் ஒரு திட்டம் சமா்ப்பிக்கப்பட்டுள்ளது. இதைத் தொடா்ந்து தேசிய உயிரியல் பூங்காவில் 2021-22 நிதியாண்டின் இறுதியில் 100-க்கும் மேற்பட்ட விலங்கு இனங்கள் இருக்கும். தற்போது, தில்லி தேசிய உயிரியல் பூங்காவில் 88 வகையான விலங்குகள் உள்ளன, கடந்த ஆண்டு மாா்ச் மாதத்தில் இது 83-ஆக இருந்தது.

வரும் ஏப்ரல் 1-ஆம் தேதி தேசிய உயிரியல் பூங்கா பொதுமக்களின் பாா்வைக்காக திறக்கப்பட்டதும், நான்கு மணி நேரம் வீதம் இரண்டு பிரிவுகளாக ஒரு நாளைக்கு சுமாா் 2,000 பாா்வையாளா்கள் அனுமதிக்கப்படுவாா்கள். டிக்கெட் கவுன்ட்டா்கள் இல்லாததால் நுழைவுச் சீட்டுகளை ஆன்லைனில் முன்பதிவு செய்ய வேண்டியிருக்கும் என்றாா் ரமேஷ் பாண்டே.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com