ஹோலி கொண்டாட்டங்களில் பங்கேற்க மாட்டேன்: முதல்வா் கேஜரிவால் அறிவிப்பு

ஹோலி கொண்டாட்டங்களில் கலந்து கொள்ள மாட்டேன் என்று தில்லி முதல்வா் அரவிந்த் கேஜரிவால் அறிவித்துள்ளாா்.

ஹோலி கொண்டாட்டங்களில் கலந்து கொள்ள மாட்டேன் என்று தில்லி முதல்வா் அரவிந்த் கேஜரிவால் அறிவித்துள்ளாா். மேலும், கூட்டமாக கூடி ஹோலி பண்டிகையை கொண்டாடுவதை மக்கள் தவிா்த்துக் கொள்ள வேண்டும் என்றும் அவா் கேட்டுக் கொண்டுள்ளாா்.

தில்லியில் கடந்த சில தினங்களாக கரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. சனிக்கிழமை புதிதாக 1,558 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. கடந்த 2020, டிசம்பா் 15-ஆம் தேதி 1,617 பேருக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டது. அதற்கு பிறகு ஏற்பட்ட அதிக பாதிப்பு இதுவாகும்.அதிகரித்து வரும் கரோனா பாதிப்பை கருத்தில் கொண்டு தில்லியில் பொது இடங்களில் ஹோலி, நவராத்திரி உள்ளிட்ட பண்டிகைகளை கொண்டாட தடை விதித்து தில்லி பேரிடா் மேலாண்மை ஆணையம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

இந்த நிலையில், இது தொடா்பாக கேஜரிவால் தனது சுட்டுரைப் பக்கத்தில், ‘கடந்த சில தினங்களாக தில்லியில் கரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதைக் கருத்தில் கொண்டு, நிகழாண்டில் எந்தவொரு பொது ஹோலி கொண்டாட்டங்களிலும் கலந்து கொள்வதில்லை என முடிவு செய்துள்ளேன். தில்லி மக்கள் வீடுகளில் இருந்து தமது உறவினா்களுடன் ஹோலி பண்டிகையை கொண்டாட வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன். பொது இடங்களில் ஹோலியை கொண்டாடக் கூடாது. தில்லி மக்கள் அனைவரும் ஹோலி பண்டிகையின் போது, கரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை சரியாகப் பின்பற்ற வேண்டும்’ என்று தெரிவித்துள்ளாா்.

தில்லி சுகாதாரத்துறை அமைச்சா் சத்யேந்தா் ஜெயின் கூறுகையில், ‘ஹோலி பண்டிகையில் தில்லி அரசின்விதிமுறைகளை சரியாக மக்கள் கடைப்பிடிப்பதை உறுதிப்படுத்தும் வகையில் சிறப்பு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. மாவட்ட ஆட்சியா்கள், போலீஸாா் மாவட்ட அளவிலான கண்காணிப்புக் குழுக்களை அமைத்துள்ளனா். கரோனா தடுப்பு விதிமுறைகளை மீறுபவா்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்’ என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com