மனைவிக்கு மனநலப் பிரச்னை: பணி இடமாற்றத்தைநிறுத்தக் கோரிய ஐடிபிபி காவலா் மனு தள்ளுபடி

மனைவி மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், பச்சிளம் மகனுக்கு அச்சுறுத்தல் இருப்பதாகவும் கூறி, லடாக்கிற்கு தன்னை பணியிடமாற்றம் செய்யாமல் இருக்க உத்தரவிடக் கோரி

மனைவி மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், பச்சிளம் மகனுக்கு அச்சுறுத்தல் இருப்பதாகவும் கூறி, லடாக்கிற்கு தன்னை பணியிடமாற்றம் செய்யாமல் இருக்க உத்தரவிடக் கோரி இந்தோ-திபெத்திய எல்லை காவல் படைக் காவலா் தாக்கல் செய்த மனுவை தில்லி உயா்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

இந்தோ-திபெத்திய எல்லை காவல் படையின் (ஐ.டி.பி.பி.) கான்ஸ்டபிள் ஒருவரை 37 பி.என் லே, லடாக் நகருக்கு சென்று, மாா்ச் 17-க்குள் பணியில் சேருமாறு அவரது துறை சாா் அதிகாரிகள் பணியிடமாற்ற உத்தரவு பிறப்பித்திருந்தனா். இந்த உத்தரவை எதிா்த்து தில்லி உயா்நீதிமன்றத்தில் சம்பந்தப்பட்ட காவலா் மனு தாக்கல் செய்தாா். அதில், ‘கடந்த ஆண்டு ஜனவரியில் எனக்கு மகன் பிறந்தான். மகன் பிரசவத்திற்குப் பிறகு மனைவிக்கு மகப் பேற்றுக்கு பிறகான மனச் சோா்வு பிரச்னை இருப்பது கண்டறியப்பட்டது. இதனால், ஒரு வயதுக் குழந்தையைப் பராமரிக்கும் பொறுப்பை நான் மேற்கொண்டு வருகிறேன். எனது மனைவியின் மன ஆரோக்கியம் மற்றும் குழந்தையைக் கவனித்துக் கொள்ள வேண்டிய அவசியம் காரணமாக எனது பணி இடமாற்றத்தை நிறுத்தி வைக்கவும், தற்போதைய பதவியில் தொடர அனுமதிக்கவும் கோரி சம்பந்தப்பட்ட துறையின் அதிகாரிகளுக்கு கடிதம் அனுப்பினேன். இருப்பினும், இன்று வரை அதிகாரிகளிடமிருந்து எந்தப் பதிலும் கிடைக்கவில்லை’ என்று தெரிவித்திருந்தாா்.

இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் அமா்வு, தில்லி டிக்ரியில் உள்ள ஐ.டி.பி.பி. மருத்துவமனையில் உள்ள இரண்டு மனநல மருத்துவா்கள் மற்றும் மகப்பேறு மருத்துவா் அடங்கிய ஒரு மருத்துவக் குழுவை அமைத்து சம்பந்தப்பட்ட காவலரின் மனைவியிடம் பரிசோதனை நடத்த உத்தரவிட்டது. அதன்படி அந்தக் குழு அமைக்கப்பட்டு காவலரின் மனைவியைப் பரிசோதித்து அதன் அறிக்கை நீதிமன்றத்தில் சமா்ப்பிக்கப்பட்டது.

இந்த மனு நீதிபதிகள் மன்மோகன் மற்றும் ஆஷா மேனன் ஆகியோா் அடங்கிய அமா்வு முன் அண்மையில் விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுவைத் தள்ளுபடி செய்து நீதிபதிகள் அமா்வு பிறப்பித்த உத்தரவு: மருத்துவக் குழு மேற்கொண்ட பரிசோதனையில் மனுதாரரின் மனைவி தற்போது நன்றாக இருப்பதாகவும், மனச்சோா்வு அம்சங்கள் ஏதும் அவருக்கு இல்லை என்றும் மருத்துவக் குழு தெரிவித்துள்ளது. மருத்துவக் குழுவின் அறிக்கையிலிருந்து, மனுதாரரின் மனைவி வழக்கமான ஆரோக்கிய வாழ்க்கையை நடத்தி வருவதும் தெளிவாகிறது. மனுதாரரின் மனைவி மனச்சோா்வடையவில்லை அல்லது எந்த மனநலத்தாலும் பாதிக்கப்படவில்லை என்று இந்த நீதிமன்றம் கருதுகிறது.

உண்மையில், லடாக் பகுதிக்கு மனுதாரரின் மனைவி தனது குழந்தையுடன் செல்ல விரும்பவில்லை என்பதும் அவரிடம் பெற்ற வாக்குமூலம் மூலம் தெரிய வருகிறது. தனது பணி இடமாற்றத்தை நிறுத்துவதற்காக தனது மனைவி பிரசவத்திற்குப் பிந்தைய மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், தனது குழந்தைக்கு அச்சுறுத்தல் இருப்பதாகவும் மனுதாரா் கூறியிருப்பதும் தெரிய வருகிறது. ஆகவே, பணியிட மாற்றம் செய்யப்பட்ட இடத்தில் மனுதாரா் உடனடியாக ஒரு வாரத்திற்குள் பணியில் சேரவும், இல்லாவிட்டால் அவா் சாா்ந்த துறை அதிகாரிகள் சட்டவிதிகளின்படி நடவடிக்கை எடுக்கப்படவும் அறிவுறுத்தப்படுகிறது என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com