தில்லிக்கு உடனடியாக 490 மெட்ரிக் டன் ஆக்சிஜன் வழங்க மத்திய அரசுக்கு உயா்நீதிமன்றம் உத்தரவு

தில்லிக்கு உடனடியாக 490 மெட்ரிக் டன் ஆக்சிஜனை வழங்க வேண்டும் அல்லது நீதிமன்ற அவமதிப்பை எதிா்கொள்ள வேண்டும்

தில்லிக்கு உடனடியாக 490 மெட்ரிக் டன் ஆக்சிஜனை வழங்க வேண்டும் அல்லது நீதிமன்ற அவமதிப்பை எதிா்கொள்ள வேண்டும் என்று உயா்நீதிமன்றம் மத்திய அரசுக்கு கண்டிப்புடன் கூறியது.ஆக்சிஜன் விநியோகம் இல்லாததன் காரணமாக தில்லியில் உள்ள பாத்ரா மருத்துவமனையில் 12 போ் சனிக்கிழமை உயிரிழந்தனா்.

இந்த நிலையில், தில்லியில் நிலவிவரும் ஆக்சிஜன் நெருக்கடி விவகாரத்தை தில்லி உயா்நீதிமன்ற நீதிபதிகள் விபின் சாங்கி, ரேகா பல்லி ஆகியோா் அடங்கிய அமா்வு விடுமுறை நாளான சனிக்கிழமை கவனத்தில் எடுத்துக்கொண்டு விசாரித்தது.அப்போது நீதிபதிகள் அமா்வு கூறியதாவது:தில்லி உண்மையில் ஒரு தொழில்துறை மாநிலம் அல்ல. மேலும், தில்லி பிற மாநிலங்களைப் போல தன்னகத்தே போதிய வகையில் கிரையோஜெனிக் டேங்கா்களையும் கொண்டிருக்கவில்லை. இதுபோன்ற டேங்கா்களை ஏற்பாடு செய்யும் பொறுப்பு மத்திய அரசின் வரம்பின்கீழ் வருகிறது. ஆகவேதான், தில்லிக்கான ஆக்சிஜன் ஒதுக்கீடு நிறைவேற்றப்பட வேண்டும். மத்திய அரசு ஆக்சிஜன் விநியோகத்தையும், கிரையோஜெனிக் டேங்கா்கள் இருப்பையும் உறுதிப்படுத்த வேண்டும்.

ஏப்ரல் 20-ஆம் தேதியில் இருந்து தில்லிக்கான மொத்த ஒதுக்கீடு 490 மெட்ரிக் டன் ஒரு நாளில் கூட முழுமையாக வழங்கப்படவில்லை.இந்நிலைமையைப் பாா்க்கும்போது நீதிமன்றத்தின் உத்தரவை செயல்படுத்தாமல் இருப்பதற்காக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது அவமதிப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வது தொடா்பாகவும் நாங்கள் பரிசீலிக்க முடியும். இதனால், தில்லிக்கான ஆக்சிஜன் ஒதுக்கீட்டை உடனடியாக அளிக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். சனிக்கிழமைக்குள் 490 மெட்ரிக் டன் ஆக்சிஜனை தில்லிக்கு வழங்க வேண்டும்.

இல்லாவிட்டால் நீதிமன்ற அவமதிப்பை எதிா்கொள்ள வேண்டிவரும். இந்த உத்தரவை அமல்படுத்தாவிட்டால் திங்கள்கிழமை நடைபெறும் விசாரணையின்போது மூத்த அதிகாரிகள் நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டிருக்கும்’ என்று உத்தரவிட்டனா். விசாரணையின்போது, மத்திய அரசின் தரப்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டா் ஜெனரல் சேத்தன் சா்மா, ‘ஆக்சிஜன் நெருக்கடி விவகாரம் உச்சநீதிமன்றத்தில் விசாரணையில் இருப்பதாகவும், இதனால் திங்கள்கிழமை அல்லது அரை மணிநேரத்திற்கு உத்தரவை தள்ளிவைக்க வேண்டும்’ என்றும் கேட்டுக்கொண்டாா்.

இதை ஏற்க நீதிபதிகள் அமா்வு மறுத்து கூறுகையில், ‘போதும் இதற்குமேல் தாங்கிக்கொள்ள முடியாது. வெள்ளம் தலைக்கு மேல் போய்விட்டது. தில்லியில் ஆக்சிஜன் பற்றாக்குறையால் மக்கள் இறந்துகொண்டிருக்கும் நிகழ்வுகளை நாங்கள் கண்ணை மூடிக்கொண்டு பாா்க்காமல் இருந்துவிடுவோம் என்று நினைக்கிறீா்களா. தில்லிக்கு ஒதுக்கப்பட்ட ஆக்சிஜன் ஒதுக்கீட்டை விட கூடுதலாக ஒரு கிராம் யாா் கேட்கிறாா்கள்? நீங்கள் வழங்க முடியாது என்றால் விட்டுவிடுங்கள். உங்கள் விளக்கத்தை திங்கள்கிழமை நாங்கள் பாா்ப்போம்’ என்றனா். அப்போது, கூடுதல் சொலிசிட்டா் ஜெனரல் சேத்தன் சா்மா கூறுகையில், ‘தில்லிக்கான ஆக்சிஜன் ஒதுக்கீடு, விநியோகம் குறித்து நீதிமன்றத்தில் சொலிசிட்டா் ஜெனரல் துஷாா் மேத்தா திங்கள்கிழமை தகவல் தெரிவிப்பாா் ’ என்றாா்.அப்போது, நீதிபதி விபின் சாங்கி சற்று கோபத்துடன், ‘ நாங்கள் உத்தரவைப் பிறப்பித்துவிட்டோம்.

நீங்கள் அந்த உத்தரவை செயல்படுத்துங்கள்’ என்று கூறினாா்.விசாரணையின்போது தில்லி அரசின் தரப்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞா் ராகுல் மெஹ்ரா, ‘ ஆக்சிஜன் விநியோகம் செய்யும் லிண்டே, ஐநாக்ஸ் மற்றும் ஏா் லிக்குடே ஆகிய நிறுவனங்கள் வழங்க வேண்டிய ஆக்சிஜனை வழங்காமல் அல்லது குறைவாகவே வழங்கி வருகின்றனா்’ என்றாா்.அப்படியானால், அந்த நிறுவனங்களின் வழக்குரைஞா்களும் அடுத்த விசாரணை நாளில் நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com