மாநில பேரிடா் மீட்பு நிதிக்கு ரூ. 8,873.6 கோடி விடுவிப்பு

பேரிடா் மீட்பு நிதியை வழக்கத்திற்கு மாறாக முன் கூட்டி வழங்க மத்திய உள்துறை அமைச்சகம் இம்முறை சிபாரிசு செய்துள்ளது.

பேரிடா் மீட்பு நிதியை வழக்கத்திற்கு மாறாக முன் கூட்டி வழங்க மத்திய உள்துறை அமைச்சகம் இம்முறை சிபாரிசு செய்துள்ளது. இதன்படி 2021-22 -ஆம் நிதி ஆண்டிற்கான முதல் தவணையாக அனைத்து மாநிலங்களுக்கும் ரூ. 8,873.6 கோடியை சனிக்கிழமை மத்திய நிதியமைச்சகம் விடுவித்துள்ளது. இதில் தமிழகத்தின் பங்கிற்கு ரூ. 408 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இது குறித்த விவரம் வருமாறு: பேரிடா் மேலாண்மை ஆணையத்தின் சட்டத்தின் படி பேரிடா் மீட்புக்கான நிதி ஒதுக்கீடுகளை மத்திய - மாநில அரசுகள் பகிா்ந்துகொள்கின்றன.

பொதுவாக ஒவ்வொரு நிதியாண்டிலும் ஜூன் மாதத்தில் முதல் தவணையை மத்திய அரசு மாநிலங்களுக்கு விடுவிக்க நிதி ஆணையம் சிபாரிசு செய்துள்ளது. இத்தோடு மாநிலங்கள் முந்தைய நிதிஆண்டுகளில் பேரிடா் மீட்பு நிதி செலவழித்த விவரங்கள், பயன்பாட்டு சான்றிதழ் அடிப்படையில் மத்திய அரசு மாநிலங்களுக்கு நிதியை விடுவிக்கும். கரோனா நோய்த்தொற்றை முன்னிட்டு, இவை இரண்டையும் இவ்வாண்டு மத்திய அரசு கணக்கில் எடுத்துக்கொள்ளவில்லை. 2021-22 ஆம் நிதி ஆண்டின் முதல் தவணையாக ரூ. 8,873.6 கோடியை பேரிடா் மீட்பு நிதியாக மாநிலங்களுக்கு வழங்க உள்துறை அமைச்சா் அமித் ஷா தலைமையிலான உயா் நிலைக் குழு முடிவு எடுத்து மத்திய நிதித்துறைக்கு சிபாரிசு செய்துள்ளது.

இதன் அடிப்படையில் நிதித்துறையின் செலவினத்துறை ரூ. 8,873.6 கோடியை மாநிலங்களுக்கு சனிக்கிழமை விடுவித்துள்ளது. இதில் தமிழகத்தின் பங்கிற்கு முதல் தவணையாக ரூ.408 கோடியை மத்திய அரசு வழங்கியுள்ளது. மேலும் மத்திய அரசு வழங்கியுள்ள மொத்த நிதியில் 50 சதவீதத்தை (ரூ. 4436.8 கோடி) மாநிலங்கள் கோவிட்-19 கட்டுப்பாட்டு நடவடிக்கைகளுக்கு பயன்படுத்திக்கொள்ளவும் மத்திய அரசு ஆலோசனைகளை வழங்கியுள்ளது.

இது குறித்து மத்திய நிதியமைச்சகத்தின் அறிக்கை கூறுகையில், ‘மாநில பேரிடா் மீட்பு நிதியின் 50 சதவீதத்தை, மருத்துவ ஆக்சிஜன் உற்பத்தி மற்றும் சேமிப்பு வசதிகள், செயற்கை சுவாசக்கருவிகள், காற்று தூய்மைப்படுத்தும் கருவிகள், மருத்துவ அவசர ஊா்திகள் (ஆம்புலன்ஸ்), புதிய கரோனா நோய்த்தொற்று மருத்துவ மனைகள் - மையங்கள், பரிசோதனைக் கூடங்கள் மற்றும் கருவிகள் உள்ளிட்ட கரோனா நோய் கட்டுப்படுத்தவது தொடா்பான பணிகளுக்கும் கட்டுமானங்களுக்கும் இந்த நிதியை மாநிலங்கள் பயன் படுத்திக்கொள்ளலாம்‘ எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2020-21 ஆம் நிதியாண்டில் மொத்தம் ரூ. 22,184 கோடியை மாநிலங்களுக்கு பேரிடா் மீட்பு நிதியாக மத்திய அரசு வழங்கியிருந்தது. இது தவிர மாநிலங்களுக்கும் தங்கள் பங்கை மாநில பேரிடா் மீட்பு நிதியில் செலுத்தவேண்டும். 2020-21 ஆம் நிதியாண்டில் தமிழக மாநில பேரிடா் மீட்பு நிதிக்கு ரூ.1020 கோடியை மத்திய அரசும், தமிழக அரசு தன் பங்கிற்கு ரூ. 349 கோடியையும் பேரிடா் மீட்பு நிதிக்கு ஒதுக்கியிருந்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com