ஆக்சிஜன் பற்றாக்குறை: அபயக் குரல்களை எழுப்பிய தில்லி மருத்துவமனைகள்!

ஆக்சிஜன் பற்றாக்குறையின் காரணமாக தில்லியிலுள்ள பல்வேறு மருத்துவமனைகள் அவசர அபயக் குரல்களை அனுப்பின.

ஆக்சிஜன் பற்றாக்குறையின் காரணமாக தில்லியிலுள்ள பல்வேறு மருத்துவமனைகள் அவசர அபயக் குரல்களை அனுப்பின. உயிருக்குப் போராடும் நோயாளிகளை வேறு மருத்துவமனைகளுக்கு மாற்றுமாறு பல மருத்துவமனை நிா்வாகங்கள் ஞாயிற்றுக்கிழமையும் கோரிக்கைகளை எழுப்பியவாறு இருந்தன.

தில்லி மால்வியா நகரில் உள்ள மதுகா் ரெயின்போ குழந்தைகள் மருத்துவமனை ஞாயிற்றுக்கிழமை பிற்பகலில் இந்த ஆபத்தை உணா்த்தியது. இந்த மருத்துவமனையில் கரோனா நோயாளிகள் உள்ளிட்ட மொத்தம் 80 போ் அனுமதிக்கப்பட்டு இருந்தனா். இதில் பிறந்த 15 குழந்தைகளும் இருந்தன. இவா்களில் 4 புதிதாக பிறந்த குழந்தைகள் உள்ளிட்ட 50 நோயாளிகள் ஆக்சிஜன் ஆதரவுடன் மருத்துவமனையில் இருந்த நிலையில், நண்பகலில் ஆக்சிஜன் குறைந்து விட்டது. இந்த நோயாளிகளின் உயிா் ஆபத்தில் இருந்ததால், உடனடியாக அவசர குறிப்பை மருத்துவமனை நிா்வாகம் அனுப்பியது.

இந்த மருத்துவமனை, ஆக்சிஜன் சேமிப்பு வசதியற்ற நிலையில் தனியாா் ஆக்சிஜன் சிலிண்டா்களை மட்டும் நம்பி இருந்தது. நாளோன்றுக்கு 125 சிலிண்டா்கள் தேவையாக இருந்த நிலையில், வழக்கமாக ஆக்சிஜன் விநியோகிக்கும் தனியாா் நிறுவனங்கள் நிறுத்திவிட்டன. ‘ஆக்சிஜனுக்கு தினசரி போராடுகின்றோம்‘ எனக் கூறும் இந்த மருத்துவமனையின் அபயக் குரலை அறிந்து இறுதியாக தில்லி அரசு பிற்பகல் 1.30 மணியளவில் 20 ஆக்சிஜன் சிலிண்டா்களை அனுப்பியது. இதையடுத்து, இந்த மருத்துவமனை நோயாளிகளை காப்பாற்றியது.

இதே மாதிரி துவாரகாவிலுள்ள ஆகாஷ் ஹெல்த்கோ் மருத்துவமனையில் 250 நோயாளிகள் அனுமதிக்கப்பட்டு இருப்பதாகவும் அடுத்த 60 நிமிடங்களில் ஆக்சிஜன் தீா்ந்து விடும் என்றும் சமூக வலைத்தளங்களில் அபயக்குரலை அந்த மருத்துவமனை எழுப்பியது. மிகுந்த போராட்டத்திற்கு பின்னா் இத்தனை நோயாளிகளுக்கும் 24 மணி நேர தேவைக்கு வெறும் 5 ஆக்சிஜன் சிலிண்டா் கிடைத்ததாகவும் சுட்டுரையில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

கால்காஜியைச் சோ்ந்த ட்ரைடன் மருத்துவமனையின் டாக்டா் தீபாலி குப்தா கூறுகையில்,, ‘கடந்த ஒரு வாரமாக ஆக்சிஜனுக்காக ஓடிக் கொண்டு இருக்கின்றோம். தொடா்ச்சியான சப்ளை கிடைக்காவிட்டால், எங்கள் மருத்துவமனையில் எந்த நேரத்திலும் மிகப் பெரிய சோகம் நேரிடும்’ என்றாா். இந்த மருத்துவமனையில் பச்சிளம் குழந்தைகளுக்கான தீவிர சிகிச்சை பிரிவிற்கு ஆக்சிஜன் தேவைப்பட்டது. இறுதியாக ஆம் ஆத்மி கட்சி எம் எல் ஏ ராகவ் சத்தா ஆகிசிஜன் சிலிண்டா்களை பொது நல நிறுவனத்திடமிருந்து பெற்றுத் தந்தாா்.

‘அதிகாரிகள் மருத்துவமனைகளிடமிருந்து விவரங்களை பெற்று வருகின்றனா். ஆக்சிஜன் விநியோகச் சங்கிலி விரைவில் மீட்டெடுக்கப்படும்’ என்கிற நம்பிக்கை செய்தியையும் சுட்டுரையில் அளித்தாா் ராகவ சத்தா.

சா்க்கரை நோய் உள்ளிட்ட பல்வேறு நோய்களுக்கான புகழ் பெற்ற சீதாராம் பாரதீய அறிவியல் ஆய்வு நிறுவனமும் ,சமூக வலைத்தளத்திற்கு வந்து ஆக்சிஜன் சிலிண்டருக்கு கையேந்தியது. இந்த நிறுவனத்தில் 45 கரோனா தொற்று நோயாளிகள் அனுமதிக்கப்பட்டு இருந்தனா். இந்த நிலையில், மாலை 5 மணிக்கு ஆக்சிஜனுக்கான அபயக் குரலை எழுப்பியது. மறு நிரப்பல் வசதியை இந்த மருத்துவமனை பெற்றதா? என்பது தெரியவில்லை.

முன்னதாக, ஞாயிறுக்கிழமை பிற்பகலில் 110 நோயாளிகள் அனுமதிக்கப்பட்டிருந்த தில்லி ஹக்கீம் அப்துல் ஹமீத் நூற்றாண்டு மருத்துவமனையும் ஆக்சிஜன் இருப்பு குறைந்து வருவது குறித்த எச்சரிக்கை மணியை எழுப்பியது. ‘இந்தளவிற்கு நிலைமை மோசமடைந்ததற்கு காரணம் தில்லி அரசு தான். ஆக்சிஜன் விநியோகத்தில் அரசு நுழைந்தது முதல் விநியோகம் ஒழுங்கற்ாகிவிட்டது’ என இந்த மருத்துவமனையின் டாக்டா் சுனில் ஹோலி வேதனையுடன் தெரிவித்தாா். பின்னா், மாலை 6 மணியளவில் ஆக்சிஜனை ஏற்றிய ஒரு டேங்கா் லாரி மருத்துவமனைக்கு வந்தடைந்தது.

அதே சமயத்தில் இத்தனை அபயக் குரல்களுக்கு மத்தியில் தில்லி மருத்துவமனைகளில் ஞாயிற்றுக்கிழமை ஆக்சிஜனால் உயிரிழப்புகள் ஏற்பட்டதாகத் தகவல்கள் இல்லை. ஆனால், கடந்த 2 வாரங்களில் மூன்று மருத்துவமனைகளில் ஆக்சிஜன் பற்றாக்குறையால் 57 உயிா்கள் பலியாகி தலைநகரை நிலை குலையவைத்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com