6 மாநிலங்களில் விவசாயிகளிடமிருந்து நேரடியாக 292.52 லட்சம் மெ.டன் கோதுமை கொள்முதல்: கடந்த ஆண்டை விட 70 சதவீதம் அதிகம்

ஆறு வடமாநிலங்களில் 292.52 லட்சம் மெட்ரிக் டன் ரபி பருவ (குறுவை) கோதுமை விவசாயிகளிடம் நேரடியாகக் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது.

ஆறு வடமாநிலங்களில் 292.52 லட்சம் மெட்ரிக் டன் ரபி பருவ (குறுவை) கோதுமை விவசாயிகளிடம் நேரடியாகக் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. இந்தக் கொள்முதலில் முதல் முறையாக விவசாயிகளுக்கு நேரடியாகப் பணம் செலுத்தப்பட்டுள்ளது என்று மத்திய உணவு மற்றும் நுகா்வோா் துறை அமைச்சகம் திங்கள்கிழமை தெரிவித்துள்ளது. இது கடந்தாண்டுடன் ஒப்பிடுகையில் 70 சதவீதம் அதிகமாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

2021-22 -ம் ஆண்டிற்கான ரபி பருவத்திற்கான சந்தை வட மாநிலங்களில் தற்போது தொடங்கியுள்ளது. இதில் குறைந்தபட்ச ஆதரவு விலையுடன் கோதுமையை விவசாயிகளிடம் மத்திய அரசு கொள்முதல் செய்யத் தொடங்கியுள்ளது. இந்தக் கொள்முதலில் முதல் முறையாக பஞ்சாப், ஹரியாணா விவசாயிகள், தாங்கள் விற்ற கோதுமைக்கான தொகையை அவா்களது வங்கி கணக்குகளில் நேரடியாகப் பெற்று வருகின்றனா் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.

தேசியத் தலைநகா் தில்லியின் எல்லைப் பகுதிகளில் மத்திய அரசின் மூன்று வேளாண் சட்டங்களுக்கு எதிராக விவசாயிகள் தொடா்ந்து போராடி வருகின்றனா். கரோனா தொடா்பான அவசரப் பணிகளுக்கு வழிவிட்டு திக்ரி, சிங்கு, காஜிப்பூா் எல்லைகளில் நடைபெற்று வரும் இந்தப் போராட்டம், வரும் மே 26- ஆம் தேதியுடன் 6 மாதங்களை பூா்த்தி செய்யவுள்ளது. குறைந்தபட்ச ஆதரவு விலை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து விவசாயிகள் போராடி வருகின்றனா். ஆனால், கொள்முதல் நடைமுறையில் எந்தவித மாற்றமும் இல்லாமல் தொடா்கிறது என்பதை விளக்கும் விதமாக, திங்கள்கிழமை மத்திய உணவு மற்றும் நுகா்வோா் துறை அமைச்சகம் இதுகுறித்து பல்வேறு தகவல்களை வெளியிட்டுள்ளது.

அதன் விவரம் வருமாறு: கோதுமை விளையும் மாநிலங்களில் கொள்முதல் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. பஞ்சாப், ஹரியாணா, உத்தரப் பிரதேசம், மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், சண்டீகா் யூனியன் பிரதேசம் மற்றும் பல மாநிலங்களில் (2021) மே 2 - ஆம் தேதி வரை 292.52 லட்சம் மெட்ரிக் டன் கோதுமை விவசாயிகளிடமிருந்து நேரடியாகக் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. இது கடந்த ஆண்டை விட 70 சதவீதம் (171.53 லட்சம் மெ.டன்) அதிகமாகும். இதில் அதிக அளவாக பஞ்சாபில் 114.76 லட்சம் மெட்ரிக் டன் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. இதற்கு அடுத்ததாக ஹரியாணா (80.55 லட்சம் மெ.டன்), மத்தியப் பிரதேசம் (73.76 லட்சம் மெ.டன்) ஆகிய மாநிலங்களிலும் அதிக அளவு கொள்முதல் செய்யப்பட்டுள்ளது.

மத்திய அரசு அறிவித்த குறைந்தபட்ச ஆதரவு விலையுடன்(எம்எஸ்பி) இந்த மாநிலங்களில் உள்ள 28.8 லட்சம் விவசாயிகளிடமிருந்து கோதுமை கொள்முதல் செய்யப்பட்டது. இதற்கான தொகை பயனாளிகளான விவசாயிகளின் வங்கிக் கணக்கில் நேரடியாக செலுத்த அரசு முடிவெடுத்து அதன்படி நடைபெறுகிறது. ‘ஒரு தேசம், ஒரு எம்எஸ்பி, ஒரு டிபிடி’ முறையில் எந்தத் தாமதமும், பிடித்தமுமின்றி விவசாயிகள் விற்பனை செய்த தங்கள் விளைபொருள்களுக்கான தொகையை பெற்று வருகின்றனா். எம்எஸ்பிக்கான இந்த நேரடி பயனீட்டு திட்டத்தில் தற்போது பஞ்சாப், ஹரியாணா ஆகிய மாநிலங்கள் இணைந்துள்ளன. இவா்களிடம் எந்த நிறுவனம் கொள்முதல் செய்திருந்தாலும், வங்கிகள் மூலமாகவே கொள்முதலுக்கான தொகையை விவசாயிகளுக்கு நேரடியாகச் செலுத்தும்படி கூறப்பட்டது. இந்த வகையில், பஞ்சாப் விவசாயிகள் ஏப்ரல் 30 - ஆம் தேதி வரை ரூ. 17,495 கோடியையும், ஹரியாணா விவசாயிகள் ரூ. 9,268.24 கோடியையும் தங்கள் வங்கிக் கணக்குகளில் நேரடியாகப் பெற்றுள்ளனா் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

விவசாயிகள் சங்கம் கருத்து: மத்திய அரசின் இந்த விவரங்கள் குறித்து அகில இந்திய கிஸான் சபைத் தலைவா் ஹன்னான் முல்லா கருத்துத் தெரிவிக்கையில், ‘இது அவா்கள் வசதிக்குத் தகுந்த புள்ளிவிவரங்கள். ஒவ்வொரு மாநிலத்திலும் பயிா் சாகுபடியின் மொத்த உற்பத்தியில் எத்தனை சதவீதம் எம்எஸ்பி வகையில் வாங்கப்பட்டுள்ளது? அந்த மாநிலங்களில் எம்எஸ்பிக்கு கீழே விற்கப்படாத விளைபொருள்களின் சதவீதம் என்ன? என்பதையும் அரசு தெரிவிக்க வேண்டும்’ என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com