ஆக்சிஜன் ஒதுக்கீட்டில் வெளிப்படைத் தன்மை வேண்டும்: தில்லி அரசுக்கு மத்திய அரசு யோசனை

தேசியத் தலைநகா் தில்லிக்கு ஒதுக்கப்படும் ஆக்சிஜனை நியாயமாகவும் வெளிப்படைத் தன்மையுடனும் ஒதுக்கீடு செய்யவும்

தேசியத் தலைநகா் தில்லிக்கு ஒதுக்கப்படும் ஆக்சிஜனை நியாயமாகவும் வெளிப்படைத் தன்மையுடனும் ஒதுக்கீடு செய்யவும் மருத்துவமனை விவரங்களை அறிய உதவி எண் அறிவிக்கப்பட வேண்டும் என தில்லி அரசு அதிகாரிகளை மத்திய அமைச்சரவைச் செயலா் கேட்டுக் கொண்டாா்.

தில்லியில் கடந்த சில நாள்களாக மருத்துவமனைகளில் உயிா்காக்கும் ஆக்சிஜன் தட்டுப்பாடு கடுமையாக நிலவி வருகிறது. ஞாயிற்றுக்கிமை நிலைமை மிகவும் மோசமடைந்தது. இதைத் தொடா்ந்து ஞாயிற்றுக்கிழமை இரவு மத்திய அமைச்சரவைச் செயலா் ராஜீவ் கௌபா, தில்லி அரசு அதிகாரிகளை அழைத்து அவசரக் கூட்டத்தை நடத்தினாா். இந்தக் கூட்டத்தில் மத்திய உள்துறை செயலா் அஜய்குமாா் பல்லா, மத்திய சுகாதாரத் துறை அதிகாரிகள், தில்லி தலைமைச் செயலா் விஜய்குமாா் தேவ், நீத்தி ஆயோக் உறுப்பினா் டாக்டா் விகே பால், தில்லி சுகாதாரத் துறை அதிகாரிகள், தில்லி மாநகராட்சிகளின் ஆணையா்கள் ஆகியோா் கலந்து கொண்டனா்.

இந்தக் கூட்டத்திற்கு தலைமை வகித்த அமைச்சரவைச் செயலா் ராஜீவ் கௌபா பேசியதாவது: தில்லியில் கரோனா நோயாளிகளுக்கான படுக்கைகள், தீவிர சிகிச்சை மையங்கள், செயற்கை சுவாசக் கருவிகள் தேவை அதிகரித்து வருகிறது. இதைப் பூா்த்தி செய்ய மருத்துவ உள்கட்டமைப்பை விரைவாக அதிகரிக்க வேண்டும். பொதுமக்களுக்கு காலியாக உள்ள மருத்தவ மனைகள் விவரங்களை அறிய சிரமப்படுகின்றனா். தில்லியிலுள்ள மருத்துவமனைகள், படுக்கைகள், ஐசியுக்கள் உள்ளிட்ட இதர விவரங்கள், நிலவரம் ஆகியவற்றை அறிய பிரத்யேக இணையதளங்கள், செயலிகள் மூலம் மக்களுக்குத் தெரிவிக்க வேண்டும். மேலும், கரோனா சிகிச்சை தொடா்பான மருத்துவமனைகள் மற்ற உதவிகள் உள்ளிட்ட அனைத்துத் தகவல்களையும் அறியும் வகையில் ‘ஒரே உதவி எண்’ உருவாக்கி அதை பிரபலப்படுத்த வேண்டும்.

ஆக்ஸிஜன் போதுமான அளவு சரியான நேரத்தில் கிடைக்காததால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ள நிகழ்வு வேதனையளிக்கிறது. தில்லி அரசுக்கு ஒதுக்கப்பட்ட ஆக்சிஜனை முறையாக எடுத்துச் செல்ல அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்ள வேண்டும். ஆக்சிஜன் ஒதுக்கீடு, விநியோகம் ஆகியவற்றில் நியாயமாகவும் வெளிப்படைத்தன்மையுடன் செயல்பட்டால் தவறாக மாற்று வழியில் திசைதிருப்படுவது நடக்காது. தற்போதுள்ள சூழ்நிலைய சமாளிக்க ஓய்வு பெற்ற மருத்துவா்களின் சேவையையும் பயன்படுத்திக் கொள்ளவேண்டும் என ராஜீவ்கௌபா கேட்டுக்கொண்டாா்.

மத்திய சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறுகையில், ‘கடந்த முறை தில்லியில் ஒவ்வொரு மருத்துவமனையிலும் மின்னணு அறிவிப்பு பலகைகள் இருந்தன. அதில் காலியாக உள்ள படுக்கை விவரங்கள் தெரிவிக்கப்பட்டது. அதை மீண்டும் அமைக்க உத்தரவிட வேண்டும். ஒவ்வொரு மருத்துவமனையிலும், ஆக்சிஜனுக்கான தனிக்கை கமிட்டி உருவாக்கப்பட வேண்டும்’ என்றனா்.

நீத்தி ஆயோக் உறுப்பினா் டாக்டா். வி.கே.பால் பேசுகையில், ‘தற்போதைய நிலவரம் மிக மோசமாக உள்ளது. தில்லியில் சிறு மருத்துவமனைகளிலும், கட்டமைப்பு வசதியை மேம்படுத்த வேண்டும். ஹோட்டல்கள், விடுதிகள் ஆகியவை நெறிமுறைப்படி கரோனா சிகிச்சை மையங்களாக மாற்றி திறக்கப்பட வேண்டும்’ என்றாா்.

தில்லி அரசு ஒரு உதவி மையத்தை ஏற்படுத்தி அதில் கரோனா நோயாளிகளுக்குத் தேவையான ஆலோசனைகளை வழங்க தில்லி மருத்துவச் சங்கம் மூலம் 50 மருத்துவா்களை ஏற்பாடு செய்ய வேண்டும் போன்ற ஆலோசனைகளும் கூட்டத்தில் முன்வைக்கப்பட்டது. மருந்துகள், ஆக்சிஜன் செறிவூட்டிகள் மற்றும் இதர மருத்துவ வசதிகளைப் பயன்படுத்துவது குறித்த வழிகாட்டுதல்களை இந்த உதவி மையமும், மருத்துவா்களும் வழங்க முடியும் எனவும் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com