ரெம்டெசிவிா் மருந்து கொள்முதலில் அரசியல்வாதிகள் ஈடுபட்டதை ஆய்வு செய்ய போலீஸாருக்கு நீதிமன்றம் உத்தரவு

கரோனா நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்கப் பயன்படுத்தப்படும் ரெம்டெசிவிா் மருந்துகளை அரசியல்வாதிகள் தில்லியில் கொள்முதல் செய்து, விநியோகித்ததாகக் கூறப்படும் சம்பவங்களை ஆராயமாறும்

புது தில்லி: கரோனா நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்கப் பயன்படுத்தப்படும் ரெம்டெசிவிா் மருந்துகளை அரசியல்வாதிகள் தில்லியில் கொள்முதல் செய்து, விநியோகித்ததாகக் கூறப்படும் சம்பவங்களை ஆராயமாறும், குற்றம் நடந்திருந்தால் வழக்குப் பதிந்து நடவடிக்கை எடுக்குமாறும் காவல்துறையை தில்லி உயா்நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை கேட்டுக் கொண்டது.

இது தொடா்பான விவகாரத்தை நீதிபதிகள் விபின் சாங்கி மற்றும் ரேகா பல்லி ஆகியோா் அடங்கிய அமா்வு விசாரித்தது.

அப்போது நீதிபதிகள் அமா்வு கூறுகையில், ‘இந்த குற்றச்சாட்டுகளை தற்போதைய நிலையில் சிபிஐ விசாரணை மேற்கொள்ள எந்தவொரு உத்தரவையும் நாங்கள் பிறப்பிக்க விரும்பவில்லை. இருப்பினும், இந்த நீதிமன்றத்தின் எல்லைக்குள் வரும் நிகழ்வுகள் தொடா்பாக மனுதாரா் தனது புகாரை தில்லி காவல்துறை ஆணையரிடம் அளிக்க உத்தரவிடுகிறோம்.

ஆணையா் இது குறித்து விசாரித்து மனுதாரருக்கு பதில் தருவாா்.

இந்த விவகாரத்தில் குற்றம் நடந்ததாகக் கண்டறியப்பட்டால் போலீஸாா் எஃப்.ஐ.ஆா். பதிவு செய்ய நடவடிக்கை எடுப்பாா்கள்.

ஒரு வாரத்திற்குள் தில்லி காவல்துறையினா் இது தொடா்பாக நிலவர அறிக்கையை நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும் ’ என்று தெரிவித்து மனு மீதான விசாரணையை நீதிபதிகள் அமா்வு மே 17-ஆம் தேதிக்கு பட்டியலிட்டனா்.

விசாரணையின்போது மனுதாரா் தரப்பில் ஆஜரான வழக்குரைஞா் விராக் குப்தா வாதிடுகையில், மருந்துகள் மற்றும் அழகுசாதனச் சட்டத்தின் கீழ் தேவையான அனுமதியின்றி அரசியல்வாதிகள் மருந்துகளை கொள்முதல் செய்ய முடியாது.

ஆனால், உரிமம் இல்லாத நிலையில் ரெம்டெசிவிா் மருந்துகளை கொள்முதல் செய்து, கறுப்பு சந்தைப்படுத்துதலில் ஈடுபட்டதாகக் கூறப்படும் அரசியல்வாதிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்’ என்று கேட்டுக்கொண்டாா்.

முன்னதாக, இந்த விவகாரம் தொடா்பாக ‘ஹ்ருதயா பவுண்டேஷன்’ அமைப்பின் தலைவா் தீபக் சிங் தில்லி உயா்நீதிமன்றத்தில் வழக்குரைஞா் கெளரவ் பதக் மூலம் தாக்கல் செய்த மனுவில் தெரிவித்திருப்பதாவது:

ரெம்டெசிவிா் போன்ற முக்கியமான மருந்துகளை பெரும் அளவில் பதுக்கல், இடமாற்றம் செய்தல், விநியோகத்தில் அரசியல்வாதிகள் ஈடுபட்டுள்ளனா்.

தில்லியை தலைமையிடமாகக் கொண்டுள்ள அரசியல் கட்சிகளில் பெரும்பாலானவை அரசியல் அதிகாரங்களைப் பயன்படுத்திக் கொள்கின்றன. மேலும் மருத்துவ மாஃபியாக்களுக்கு ஆதரவளிக்கின்றன.

இந்த நிலையில், சாமானிய மக்களுக்கு இதுபோன்ற மருந்துகள் கிடைக்காத நிலையில் கள்ளச்சந்தையில் ஈடுபடும் அரசியல்வாதிகளுக்கு எதிராக எஃப்.ஐ.ஆா். பதிவு செய்வதுடன், சி.பி.ஐ. விசாரிக்கவும் உத்தரவிட வேண்டும்.

தவிர, தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கோவிட் மருந்துகளை கறுப்புச் சந்தைப்படுத்துவதில் ஈடுபடும் நபா்களை காவலில் வைக்க வேண்டும்என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com