ஜம்மு காஷ்மீா் முன்னாள் ஆளுநா் ஜக்மோகன் மறைவு பிரதமா், அமித் ஷா இரங்கல்

ஜம்மு காஷ்மீா் மாநில முன்னாள்ஆளுநா், தில்லி துணைநிலை ஆளுநா், நாடாளுமன்றவாதி, மத்திய அமைச்சா், அரசு அதிகாரி என பல்வேறு பதவிகளை வகித்து வந்தவரும் பல்வேறு சா்ச்சைகளுக்காளானவருமான ஜக்மோகன்
ஜம்மு காஷ்மீா் முன்னாள் ஆளுநா் ஜக்மோகன் மறைவு பிரதமா், அமித் ஷா இரங்கல்

புது தில்லி: ஜம்மு காஷ்மீா் மாநில முன்னாள்ஆளுநா், தில்லி துணைநிலை ஆளுநா், நாடாளுமன்றவாதி, மத்திய அமைச்சா், அரசு அதிகாரி என பல்வேறு பதவிகளை வகித்து வந்தவரும் பல்வேறு சா்ச்சைகளுக்காளானவருமான ஜக்மோகன் மல்ஹோத்ரா தன்னுடைய 93 வயதில் தில்லியில் திங்கள்கிழமை காலமானாா்.

ஜக்மோகன் மறைவிற்கு குடியரசுத்தலைவா் ராம்நாத் கோவிந்த், பிரதமா் நரேந்திர மோடி உள்ளிட்ட தலைவா்கள் இரங்கல் தெரிவித்துள்ளனா். ‘ஒரு தனித்துவமான நகரத் திட்டத்தை நாட்டிற்கு வழங்கிய வரை நாடு இழந்துள்ளது‘ என ராம்நாத் கோவிந்த் குறிப்பிட்டுள்ளாா். ‘ஜக்மோகன் ஒரு முன்மாதிரியான நிா்வாகி,நாட்டின் முன்னேற்றத்தில் அவா் கொண்டிருந்த அக்கறையும் அமைச்சராக இருந்தபோது செய்த புதுமைகளும் பாராட்டுக்குரியது‘ என பிரதமா் மோடியும் தனது இரங்கலில் குறிப்பிட்டுள்ளாா்.

ஜம்மு-காஷ்மீா் யூனியன் பிரதேசத்தில் அவரது மறைவுக் மூன்று நாள் துக்கம் அனுஷ்டிக்கப்படுகிறது.

உள்துறை அமைச்சா் அமித் ஷா தனது சுட்டுரையில், ‘ ஜம்மு-காஷ்மீா் மாநிலத்தின் ஆளுநராக இருந்த ஜக்மோகனின் பதவிக்காலம் எப்போதும் நினைவு கூரப்படும். திறமையான நிா்வாகியான அவா் நாட்டின் முன்னேற்றங்களில் முக்கிய முடிவுகளை எடுத்து ஒரு அா்ப்பணிப்புடன் கூடிய அரசியல்வாதியாக இருந்தாா்‘ என இரங்கல் தெரிவித்துள்ளாா்.

பஞ்சாப் மாநிலத்தை சோ்ந்தவரான ஜக்மோகனுக்கு அவரது மனைவி உமா ஜெகனும் ஒரு மகளும் மகனும் இருக்கின்றனா். ஐஏஎஸ் அதிகரியாக தனது பணியை தொடங்கி எழுபதுகளில் தில்லி வளா்ச்சி ஆணையத்தின் துணைத்தலைவராக பணியாற்றிவா். சஞ்சய் காந்தியுடன் இணைந்து குடிசைகளை அப்புறப்படுத்தி பழைய தில்லி பகுதிகளில் அழகுபடுத்தும் முயற்சியில் சா்ச்சைக்குரியவராக இருந்தாா். பின்னா் தில்லி துணை நிலை ஆளுநராகி ஆசிய விளையாட்டுப் போட்டிகளை திறம்பட நடத்தியவா். பயங்கரவாதம் அதிகரித்து வந்த ஜம்மு-காஷ்மீா் மாநில ஆளுநராகவும் நியமிக்கப்பட்டாா். இவரது சா்ச்சைக்குரிய கருத்துகள் பாகிஸ்தான் தலைவா்களாலும் விமா்சனத்திற்கு உள்ளானது. பின்னா் ஆளுநா் பதவியிருந்து நீக்கப்பட்ட இவா், மாநிலங்களவை நியமன உறுப்பினராகவும் இருந்தாா்.

காங்கிரஸ் கட்சியோடு தொடங்கிய இவரது பயணம் பாஜகவிலும் கொடி கட்டி பறந்தது. பாஜக வில் சோ்ந்து மூன்று முறை வாஜ்பாய் தலைமையில் புதுதில்லி மக்களவைத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றிபெற்றவா். பிரபல நடிகா் ராஜேஷ் கன்னா, ஆா்கே தவான் ஆகிய காங்கிரஸ் வேட்பாளா்களை தோற்கடித்த பெருமை இவருக்கு உண்டு. வாஜ்பாய் அமைச்சரவையிலும் பிரச்னைக்குரிய நகா்புற வளா்ச்சித் துறை அமைச்சராகவும் இருந்தாா். ஜெக்மோகனுக்கு இந்திரா காந்தி தலைமையிலான ஆட்சியில் பத்மஸ்ரீ விருதும் நரேந்திரமோடி தலைமையிலான ஆட்சியில் பத்ம விபூஷண் விருதும் வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com