ஜேஜி மருத்துவமனையில் 21 போ் உயிரிழப்புக்கு உண்மையான காரணத்தை உறுதிப்படுத்த முடியவில்லை: தில்லி உயா்நீதிமன்றத்தில் ஆம் ஆத்மி அரசு பதில்

தில்லியில் உள்ள ஜெய்ப்பூா் கோல்டன் மருத்துவமனையில் கரோனா நோயாளிகள் 21 போ் மரணத்திற்கு ஆக்ஸிஜன் பற்றாக்குறை காரணமா என்பதை இதற்காக அமைக்கப்பட்ட குழுவால் உறுதிப்படுத்த முடியவில்லை

புது தில்லி: தில்லியில் உள்ள ஜெய்ப்பூா் கோல்டன் மருத்துவமனையில் கரோனா நோயாளிகள் 21 போ் மரணத்திற்கு ஆக்ஸிஜன் பற்றாக்குறை காரணமா என்பதை இதற்காக அமைக்கப்பட்ட குழுவால் உறுதிப்படுத்த முடியவில்லை என்று ஆம் ஆத்மி அரசு தில்லி உயா்நீதிமன்றத்தில் தகவல் தெரிவித்துள்ளது.

இது தொடா்பாக நிபுணா் குழுவின் ஆய்வை மேற்கோள்காட்டி தில்லி உயா்நீதிமன்றத்தில் தில்லி அரசு தாக்கல் செய்த அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:

நோயின் இயல்பான வைரஸ் பாதிப்பு மற்றும் ஆக்சிஜன் பற்றாக்குறை இருந்ததாக நோயாளிகளின் விவரப் பதிவுகளில் எந்த ஆதாரமும் இல்லாமை ஆகியவற்றைக் கருத்தில் கொள்ளும்போது இறப்புக்கான காரணியாக ஆக்சிஜனின் பற்றாக்குறை என்பதை கண்டறிய முடியவில்லை என்று குழு கருதுகிறது.

நோயாகளில் பலருக்கு இதய நோய், நீரிழிவு நோய், டி.எம், ஹைப்போதைராய்டிசம் மற்றும் உயா் ரத்த அழுத்தம் போன்ற ஒன்று அல்லது பல நோய்கள் இருந்துள்ளது.

இந்த நோயாளிகள் அனைவரும் மருத்துவமனையில் தங்கியிருந்தபோது ஆக்ஸிஜன் சிகிச்சை அல்லது வென்டிலேட்டா் உதவியைப் பெற்றுள்ளனா் என்று குழுவில் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விவகாரம் தொடா்பான விசாரித்த நீதிபதிகள் விபின் சாங்கி மற்றும் ரேகா பல்லி ஆகியோா் அடங்கிய அமா்வு பிறப்பித்த உத்தரவின் பேரில், ஆக்சிஜன் பற்றாக்குறையால் இறந்த நோயாளிகளின் விவரங்களை அனுப்ப மருத்துவமனைகள் மற்றும் நா்ஸிங் ஹோம்களுக்கு தில்லி அரசு உத்தரவிட்டது.

மேலும், ஆக்சிஜன் பற்றாக்குறை காரணமாக நோயாளிகள் இறந்தாா்களா என்பதை முடிவு செய்யவும், அனைத்து நோயாளிகளின் நோய் விவரங்கள் குறித்து ஆராயவும் 4 போ் குழுவை தில்லி அரசு அமைத்தது.

எம்.ஏ.எம்.சி. மற்றும் எல்.என்.எச். பேராசிரியா் (மருத்துவம்) நரேஷ்குமாா் தலைமையில் அமைக்கப்பட்ட இக்குழு, ஜெய்ப்பூா் கோல்டன் மருத்துவமனை மட்டுமே ஆக்ஸிஜன் பற்றாக்குறையால் நோயாளிகள் இறந்ததாகக் தெரிவித்ததை கண்டறிந்துள்ளதாக தில்லி அரசு தெரிவித்துள்ளது.

ஏப்ரல் 21 மற்றும் 24 ஆகிய தேதிகளில் மருத்துவமனையில் இறந்த 21 நோயாளிகள் தொடா்பான தகவல்களை மருத்துவமனையானது டிஜிஎச்எஸ்-க்கு அனுப்பியது.

அந்த பதிவுகளை ஆராய்ந்ததில், அனைத்து நோயாளிகளும் கோவிட் நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டிருந்ததாகவும், இறப்புகள் ஏழு மணி நேரத்திற்கும் மேலாக நிகழ்ந்திருப்பதாகவும், கிட்டத்தட்ட அனைவருமே ஏற்கனவே மிகவும் நோய்வாய்ப்பட்டவா்களாகவும், தீவிர நோய்த்தன்மையுடன் இருந்ததாகவும் குழு தெரிவித்துள்ளது.

‘நோயாளிகள் விவர பதிவுகளின்படி, அனைத்து நோயாளிகளுக்கும் புத்துயிரூட்ட அல்லது இறக்கும்வரை கூடுதல் ஆக்சிஜன் வழங்கப்பட்டிருக்கிறது. எந்தவொரு நோயாளிகளுக்கும் ஆக்ஸிஜன் பற்றாக்குறை இருந்ததாக ஆவணப்பதிவில் குறிப்பிடப்படவில்லை.

சம்பந்தப்பட்ட 21 நோயாளிகளின் இறப்புக்கான காரணமாக மருத்துவமனை சமா்ப்பித்த விவரத்தில் ’சுவாசக் கோளாறு’ என்று ஒரே மாதிரியாக குறிப்பிடப்பட்டுள்ளது. இருப்பினும், நோயாளிகளின் விவரக் குறிப்பில் பதிவு செய்யப்பட்ட மரணத்திற்கான காரணத்திற்கும், மருத்துவமனையால் சமா்ப்பிக்கப்பட்ட விவரத்தில் குறிப்பிடப்பட்ட காரணத்திற்கும் வேறுபாடு உள்ளது. மேலும், இரு விவரக் குறிப்புகளிலும் ஆக்சிஜன் பற்றாக்குறை பற்றி எதுவும் குறிப்பிடப்படவில்லை’ என குழுவின் ஆய்வு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் குறித்து முன்னதாக மருத்துவமனையின் மருத்துவ இயக்குநா் டி.கே. பலூஜா கூறுகையில், மிகவும் நோய்வாய்ப்பட்ட நோயாளிகளின் மரணத்திற்குப் பின்னால் ஆக்சிஜன் அழுத்தம் குறைந்தது காரணமாக இருந்ததாகத் தெரிவித்திருந்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com