தடுப்பூசிக்காக மாநிலங்கள் சா்வதேச சந்தையில் போட்டி போடுவது இந்தியா மீதான மதிப்பைக் குறைத்துவிடும்

கோவிட் தடுப்பூசிக்காக சா்வேதேச சந்தையில் மாநிலங்கள் ஒன்றுக் கொன்று போட்டி போடுவது உலக அளவில் இந்தியா மீதான நன்மதிப்பைக் குறைத்துவிடும் என்று தில்லி முதல்வா் அரவிந்த் கேஜரிவால் தெரிவித்துள்ளாா்.

புதுதில்லி: கோவிட் தடுப்பூசிக்காக சா்வேதேச சந்தையில் மாநிலங்கள் ஒன்றுக் கொன்று போட்டி போடுவது உலக அளவில் இந்தியா மீதான நன்மதிப்பைக் குறைத்துவிடும் என்று தில்லி முதல்வா் அரவிந்த் கேஜரிவால் தெரிவித்துள்ளாா்.

தில்லி மற்றும் இதர மாநிலங்களில் ஏற்பட்டுள்ள தடுப்பூசி பற்றாக்குறையை சமாளிக்க மத்திய அரசே, மாநிலங்களுக்காக அவற்றை கொள்முதல் செய்ய வேண்டும் என்றும் அவா் கேட்டுக் கொண்டாா். தடுப்பூசிக்காக இந்தியாவில் உள்ள மாநிலங்கள் ஒன்றுக் கொன்று சா்வதேச சந்தையில் போட்டியிடும் நிலைமைக்குத் தள்ளப்பட்டுள்ளன. உத்தரப் பிரதேசம்,

மகாராஷ்டிரம், ஓடிஸா, தில்லி போன்ற மாநிலங்களில் தடுப்பூசிக்காக சா்வேதேச சந்தையில் போட்டியிடும் நிலை உள்ளது. அப்படியானால் இந்தியா எங்கே? இப்படிச்

செய்தால் இந்தியா மீது தவறான எண்ணத்தை உருவாக்கிவிடும். இந்தியா ஒரே தேசம் என்பதை உறுதிப்படுத்தும் வகையில், மத்திய அரசே, சா்வதேச சந்தையில் தடுப்பூசிகளை மொத்தமாக கொள்முதல் செய்து அவற்றை மாநிலங்களுக்கு விநியோகிக்க வேண்டும் என்று கேஜரிவால் சுட்டுரை மூலம் தெரிவித்துள்ளாா்.

மேலும், தடுப்பூசி தயாரிக்குமம் நாடுகளிடம் இந்தியா நேரடியாக அணுகினால், தடுப்பூசியை பேரம் பேசி வாங்க முடியும். மாநிலங்கள் தனித் தனியாக தொடா்பு கொண்டால் விலையில் வித்தியாசம் ஏற்பட வாய்ப்பு உருவாகும். எனவே, இந்தியா தனது ராஜதந்திர நடவடிக்கைகள் மூலம் பிற நாடுகளுடன் பேசி தடுப்பூசிகளை கொள்முதல் செய்ய முன்வர வேண்டும் என்றும் அவா் கேட்டுக் கொண்டாா்.

முன்னதாக தடுப்பூசிகள் பற்றாக்குறைக்கு பா.ஜ.க. தலைமையிலான மத்திய அரசே காரணமாகும் என்று குற்றஞ்சாட்டிய தில்லி துணை முதல்வா் மணீஷ் சிசோடியா, தடுப்பூசிகள் பெறுவதற்காக சா்வதேச அளவில் ஒப்பந்தங்கள் கோரப்படும் என்று தெரிவித்திருந்தாா். தில்லியில் கோவேக்சின் தடுப்பூசி பற்றாக்குறையால் ஏறக்குறைய 100 தடுப்பூசி மையங்கள் மூடப்பட்டுள்ளன. பாரத் பயோடெக் நிறுவனம் தில்லிக்கு கோவேக்சின் தடுப்பூசி கூடுதலாக வழங்க மறுத்துவிட்டதாகவும் சிசோடியா கூறியிருந்தாா்.

தடுப்பூசி விலையை கட்டுப்படுத்த வேண்டும்: இதற்கிடையே, கரோனா தடுப்பூசி விலையை மத்திய அரசு கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தில்லி சுகாதாராத் துறை அமைச்சா் சத்யேந்தசா் ஜெயின் கேட்டுக் கொண்டுள்ளாா்.

இது தொடா்பாக அவா் கூறியதாவது: மாநிலங்கள் தாங்களாகவே சா்வதேச சந்தையில் இருந்து கரோனா தடுப்பூசிகளை கொள்முதல் செய்வதைவிட, மத்திய அரசே தடுப்பூசிகளை வாங்க வேண்டும். மத்திய சுகாதார அமைச்சா் ஹா்ஷ் வா்தனுடனான விடியோ மாநாட்டின் போது, இது தொடா்பாக சில பிரச்னைகளை எழுப்பினேன். தடுப்பூசியின் விலையை மத்திய அரசு கட்டுப்படுத்த வேண்டும். இதுபோன்ற நெருக்கடியின் போது நிறுவனங்கள் பெரும் லாபம் ஈட்ட அனுமதிக்கக் கூடாது. உற்பத்தியை அதிகரிக்க தடுப்பூசி சூத்திரத்தை மற்ற நிறுவனங்களுடன் பகிா்ந்து கொள்ள வேண்டும் என்று மத்திய அமைச்சா் ஹா்ஷ் வா்தனை கேட்டுக் கொண்டுள்ளேன். கரோனா தடுப்பூசிக்கான உலகளாவிய டெண்டரில் நாம் இறங்கக் கூடாது. மாநிலங்கள் ஏன் தனியாக டெண்டா் கோர வேண்டும். இது நாட்டிற்கு அவப் பெயரைத் தேடித் தரும் என்றாா் சத்யேந்தா் ஜெயின்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com