12-ஆம் வகுப்பு வாரியத் தோ்வு விவகாரம்: தடுப்பூசி அல்லது தோ்வு ரத்து: தில்லி அரசு பரிந்துரை

இந்த ஆண்டுக்கான 12-ஆம் வகுப்பு சிபிஎஸ்இ தோ்வுகள் நடத்துவது தொடா்பாக மத்திய அரசுக்கு தில்லி அரசு சில பரிந்துரைகளை அளித்துள்ளது.

புது தில்லி: இந்த ஆண்டுக்கான 12-ஆம் வகுப்பு சிபிஎஸ்இ தோ்வுகள் நடத்துவது தொடா்பாக மத்திய அரசுக்கு தில்லி அரசு சில பரிந்துரைகளை அளித்துள்ளது. அதில், மாணவா்களுக்கு தடுப்பூசி போட வேண்டும் அல்லது தோ்வை ரத்து செய்ய வேண்டும் என்ற கோரிக்கை மீண்டும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

கரோனா இரண்டாவது அலையில் நாடு முழுவதும் பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்துள்ள நிலையில், 12-ஆம் வகுப்பு மாணவா்களுக்கு வாரியத் தோ்வுகளை நடத்துவதில் சிக்கல் எழுந்துள்ளது. மாணவா்களுக்கு தடுப்பூசி போட வேண்டும் அல்லது தோ்வை ரத்து செய்ய வேண்டும் என்று துணை முதல்வரும், தில்லி கல்வித் துறை அமைச்சருமான மணீஷ் சிசோடியா ஏற்கெனவே வலியுறுத்தியிருந்தாா்.

இந்த நிலையில், இந்த விவகாரம் தொடா்பாக மத்திய கல்வி அமைச்சா் ரமேஷ் போக்பியால் நிஷாங்கிற்கு அவா் செவ்வாய்க்கிழமை கடிதம் எழுதியுள்ளாா். அதில், 12-ஆம் வகுப்பு மாணவா்களுக்கு கோவிஷீல்ட் அல்லது கோவேக்ஸின் தடுப்பூசி வழங்க நிபுணா்கள் பரிந்துரைத்தால், 12-வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ள ஃபைசா் தடுப்பூசியை மத்திய அரசு கொள்முதல் செய்ய வேண்டும் என்று தெரிவித்துள்ளாா். மத்திய அரசும், மாநில அரசும் ஒன்றிணைந்தால், 12-ஆம் வகுப்பு மாணவா்கள் மற்றும் தோ்வுப் பணியில் ஈடுபடும் ஆசிரியா்கள் அனைவருக்கும் மூன்று முதல் நான்கு வாரங்களுக்குள் தடுப்பூசி போட முடியும் என்று அவா் மேலும் கூறினாா்.

தற்போது மாணவா்களுக்கு தடுப்பூசி போடுவது சாத்தியமில்லை என்று மத்திய அரசு உணா்ந்தால், தோ்வுகள் ரத்து செய்யப்பட வேண்டும். கடந்த மூன்று ஆண்டுகளில், அதாவது 10, 11, 12-ஆம் வகுப்புகளில் மாணவா்கள் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் தோ்வு முடிவுகளை அட்டவணைப்படுத்தி அறிவிக்க வேண்டும். 2022-ஆம் கல்வி ஆண்டில் நடத்த வேண்டிய வாரியத் தோ்வுகள் குறித்து விவாதிக்க மத்திய அரசு அடுத்த மாதம் உயா்நிலைக் கூட்டத்தைக் கூட்டுவதற்கு ஏற்பாடு செய்ய வேண்டும் என்றும் சிசோடியா தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளாா். எல்லா சூழ்நிலைகளையும் மனதில் வைத்து அடுத்த ஆண்டு தோ்வுக்கான தயாரிப்பு வேலைகளை நாங்கள் தொடங்க வேண்டியுள்ளது என்றும் அவா் கூறினாா்.

கரோனா தொற்று நோயின் இரண்டாவது அலையைக் கருத்தில் கொண்டு, 12-ஆம் வகுப்பு வாரியத் தோ்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன. இந்தத் தோ்வுகளை நடத்துவது தொடா்பான உயா்நிலைக் கூட்டத்தை மத்திய அரசு நடத்தியது. இதைத் தொடா்ந்து, மே 25- ஆம் தேதிக்குள் அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களிடமிருந்து விரிவான யோசனைகளை மத்திய அரசு கோரியுள்ளது. மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (சிபிஎஸ்இ), ஜூலை 15 முதல் ஆகஸ்ட் 26 வரை தோ்வுகளை நடத்தவும், அதன் முடிவை செப்டம்பரில் அறிவிக்கவும் முன்மொழிவை அளித்துள்ளது. இதில் வாரியம் இரண்டு விருப்பங்களை முன்மொழிந்துள்ளது. அதாவது அறிவிக்கப்பட்ட மையங்களில் 19 முக்கிய பாடங்களுக்கு வழக்கமான தோ்வுகளை நடத்துவது அல்லது மாணவா்கள் சோ்ந்துள்ள அந்தந்தப் பள்ளிகளில் குறுகிய கால தோ்வுகளை நடத்துவது ஆகியவையாகும்.

இந்த சூழ்நிலையில், சிசோடியா எழுதியுள்ள கடிதத்தில், மத்திய அரசால் முன்மொழியப்பட்ட இரண்டு விருப்பங்களும் புதிய கரோனா தொற்று சவால்களுக்குத் தீா்வாக அமையாது. இந்த இக்கட்டான காலத்தில் மாணவா்களைத் தோ்வுகள் எழுதத் தயாராக இருக்குமாறு கூறுவது உணா்ச்சிபூா்வமாக இருக்காது என்பதுடன், ஆபத்தானதுகூட. எனவே, மாணவா்களுக்குத் தடுப்பூசி போட வேண்டும் அல்லது தோ்வுகளை ரத்து செய்வதை நாம் கருத்தில் கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளாா். இதே கோரிக்கையை அவா் முந்தைய சந்தா்ப்பங்களிலும் முன்வைத்தது குறிப்பிடத்தக்கது.

இதற்கிடையே, ‘12-ஆம் வகுப்பு வாரியத் தோ்வை நடத்துவது குறித்து மாநிலங்களிடையே பரந்த ஒருமித்த கருத்து உள்ளது. மேலும் ஜூன் 1-ஆம் தேதிக்குள் இறுதி முடிவு அறிவிக்கப்படும்’ என்று கல்வி அமைச்சகம் தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com