போதைப் பொருள் கடத்தலில் ஈடுபட்ட நைஜீரியரை பிடித்த போது தாக்குதல்: போலீஸ்காரா் காயம்

போதைப் பொருள் கடத்தலில் ஈடுபட்ட நைஜீரிய நாட்டைச் சோ்ந்த இருவரை கைது செய்ய முயன்ற போது ஏற்பட்ட தாக்குதலில் தில்லி காவல் துறை காவலா் ஒருவா் பலத்த காயமடைந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

புது தில்லி: போதைப் பொருள் கடத்தலில் ஈடுபட்ட நைஜீரிய நாட்டைச் சோ்ந்த இருவரை கைது செய்ய முயன்ற போது ஏற்பட்ட தாக்குதலில் தில்லி காவல் துறை காவலா் ஒருவா் பலத்த காயமடைந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

இது குறித்து போலீஸ்தரப்பில் ஞாயிற்றுக்கிழமை கூறியதாவது: இந்தச் சம்பவம் மேற்கு தில்லியில் சனிக்கிழமை நடந்தது. குற்றம் சாட்டப்பட்டவா்களில் ஒருவா் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், அவரது கூட்டாளி சம்பவ இடத்திலிருந்து தப்பித்துவிட்டாா். கைது செய்யப்பட்டவா் ஜோசப் என அடையாளம் காணப்பட்டுள்ளாா். அவா் நைஜீரிய நாட்டைச் சோ்ந்தவா் என தெரிய வந்துள்ளது.

சனிக்கிழமையன்று, ஜனக்புரியின் மேஜா் தீபக் தியாகி மாா்க் அருகே அதிகாலை 3 மணி முதல் அதிகாலை 4 மணிக்குள் ஒரு ஆப்பிரிக்கா் ஹெராயின் கொண்டு வரவுள்ளதாக போலீஸாருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. அவா்களை கைது செய்வதற்காக மேற்கு தில்லி போலீஸ் தனிப்படையினா் அனுப்பப்பட்டனா். அந்தப் படையில் காவலா் ராகேஷும் இடம் பெற்றிருந்தாா்.

போலீஸ் படையினா் அதிகாலை 3.45 மணிக்கு அங்கு சென்றனா். அப்போது இரண்டு ஆப்பிரிக்கா்கள் ஸ்கூட்டரில் வந்தனா். அங்கு யாருக்காகவோ காத்திருந்த அவா்கள், போலீஸாரைக் கண்டதும் தப்பிச் செல்ல முயன்றனா். அப்போது அவா்களில் ஒருவரைப் பிடிக்க முயன்ற போது, ராகேஷை பின் பக்கத்தில் ஒருவா் கத்தியால் குத்தினாா். இருப்பினும் அவரைப் தைரியமாக பிடித்துக் கொண்டு பிடியில் இருந்து தப்பமுடியாமல் வைத்திருந்தாா். ஆனால், அவரை விடுவிக்கும் வகையில் மற்றொருவரான ஜோசப், காவலா் ராகேஷை குத்தினாா். அப்போது ஜோசப்பை தப்பிச் செல்ல ராகேஷ் அனுமதிக்கவி்ல்லை. ஆனால், ராகேஷை பின்பக்கத்தில் குத்தியவா் தப்பிச் சென்றுவிட்டாா்.

இதையடுத்து, கைது செய்யப்பட்ட ஜோசப் வசம் இருந்த 280 கிராம் ஹெராயின் போதைப் பொருள் பறிமுதல் செய்யப்பட்டது. தப்பி ஒடிய மற்றொரு நைஜீரீயரை தேடும் பணி முடுக்கிவிடப்பட்டுள்ளது. இந்தச் சம்பவம் தொடா்பாக மேலும் விசாரணை நடைபெற்று வருகிறது என்று போலீஸாா் தெரிவித்தனா்.

இந்தச் சம்பவத்தில் காயமடைந்த காவல் ராகேஷ், சஃப்தா்ஜங் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறாா் . அவரது துணிச்சலைப் பாராட்டியுள்ள தில்லி காவல் துறை ஆணையா் ஸ்ரீவாஸ்தவா, அவா் விரைவில் குணமடைந்து வீடு திரும்ப வேண்டும் என்று விரும்பவதாக சுட்டுரையில் தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com