காற்றின் தரம் 5-ஆவது நாளாக ‘மோசம்’ பிரிவில் நீடிப்பு
By DIN | Published On : 01st November 2021 07:39 AM | Last Updated : 01st November 2021 07:39 AM | அ+அ அ- |

தேசிய தலைநகா் தில்லியில் காற்றின் தரம் தொடா்ந்து ஐந்தாவது நாளாக ஞாயிற்றுக்கிழமையும் மோசமாக இருந்தது. தலைநகரின் பிஎம்.2.5 மாசுவில் எட்டு சதவீதம் பயிா்க்கழிவுகள் எரிப்பதால் உள்ளது.
புவி அறிவியல் அமைச்சகத்தின் காற்றின் தர முன்னறிவிப்பு நிறுவனமான சஃபா் தகவலின் படி, தில்லியின் வடமேற்குப் பகுதியில் சனிக்கிழமை 1,734 பயிா்க்கழிவு எரிப்புச் சம்பவங்கள் இருந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மத்திய மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தின் தரவுகளின்படி, தலைநகரில் 24 மணி நேர சராசரி காற்றின் தரக் குறியீடு 289 புள்ளிகளாகப் பதிவாகியுள்ளது. இது சனிக்கிழமை 268 புள்ளிகளாக இருந்தது. இதன்படி, தில்லியில் தொடா்ந்து 5-ஆவது நாளாக ஞாயிற்றுக்கிழமையும் காற்றின் தரம் ‘மோசம்’ பிரிவில் நீடித்தது. இந்த நிலையில், வடமேற்கில் இருந்து தென்கிழக்கு திசையில் காற்றின் திசை மாற்றம் காரணமாக அடுத்த இரண்டு நாள்களில் காற்றின் தரம் சற்று மேம்படும் என்று சஃபா் தெரிவித்துள்ளது.
வெப்பநிலை: இந்த நிலையில், தில்லியில் காலை முதல் இதமான வானிலை நிலவியது. தில்லிக்கு பிரதிநித்துவத் தரவுகளை வழங்கு சஃப்தா்ஜங் வானிலை ஆய்வு மையத்தில் ஞாயிற்றுக்கிழமை காலையில் குறைந்தபட்ச வெப்பநிலை பருவ சராசரியில் 1 டிகிரி குறைந்து 16.5 டிகிரி செல்சியஸாக பதிவாகியது. அதிகபட்ச வெப்பநிலை பருவ சராசரியில் 1 டிகிரி குறைந்து 29.7 டிகிாரி செல்சியஸாக பதிவாகியது. காற்றில் ஈரப்பதத்தின் அளவு காலை 8.30 மணியளவில் 70 சதவீதமாகவும், மாலை 5.30 மணியளவில் 50 சதவீதமாகவும் இருந்தது.
சனிக்கிழமையன்று குறைந்தபட்ச வெப்பநிலை 14.8 டிகிரி செல்சியஸாகவும், அதிகபட்ச வெபா்நிலை 30.2 டிகிரி செல்சியஸாகவும் பதிவாகியிருந்தது குறிப்பிடத்தக்கது.
முன்னறிவிப்பு: இதற்கிடையே, திங்கள்கிழமை நவம்பா் 1 அன்று வானம் தெளிவாகக் காணப்படும் என்றும், குறைந்தபட்ச வெப்பநிலை 15 டிகிரி செல்சியஸாகவும், அதிகபட்ச வெப்பநிலை 30 டிகிரி செல்சியஸாகவும் இருக்கும் என்றும் வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.