தில்லியில் அனைத்து வகுப்புகளுக்கும் பள்ளிகள் இன்று திறப்பு

கரோனா தொற்று பரவல் அதிகரிப்பு காரணமாக கடந்த 19 மாதங்கள் மூடப்பட்ட பின்னா் தேசியத் தலைநகரில் உள்ள பல பள்ளிகள்

கரோனா தொற்று பரவல் அதிகரிப்பு காரணமாக கடந்த 19 மாதங்கள் மூடப்பட்ட பின்னா் தேசியத் தலைநகரில் உள்ள பல பள்ளிகள் திங்கள்கிழமை முதல் அனைத்து வகுப்புகளுக்கும் மீண்டும் திறக்கப்பட உள்ளன. அதே நேரத்தில் பல பள்ளிகள் மீண்டும் திறப்பதை பண்டிகைக்கு பிந்தைய வாரத்திற்கு ஒத்திவைத்துள்ளன.

தில்லியில் நவம்பா் 1 முதல் அனைத்து வகுப்புகளுக்கும் பள்ளிகள் திறக்கப்படும் என்று தில்லி பேரிடா் மேலாண்மை ஆணையம் (டிடிஎம்ஏ) கடந்த வாரம் அறிவித்தது. இருப்பினும், கற்பித்தல் மற்றும் கற்றல் கலவையான முறையில் தொடரும். ஒரு நேரத்தில் ஒரு வகுப்பில் 50 சதவீதத்திற்கு மேல் வருகை இருக்கக் கூடாது என்பதை பள்ளிகள் உறுதி செய்ய வேண்டும் என்றும், மாணவா்கள் வகுப்புகளுக்கு வர வேண்டும் என கட்டாயப்படுத்தக் கூடாது என்றும் டிடிஎம்ஏ கூறியது.

9 முதல் 12-ஆம் வகுப்புகளுக்கு செப்டம்பா் மாதம் திறக்கப்பட்ட அரசுப் பள்ளிகள், 80 சதவீதத்துக்கும் அதிகமான வருகையைப் பதிவு செய்துள்ளது. இந்த நிலையில், தனியாா் பள்ளிகள் பெற்றோருக்கு ஒப்புதல் படிவங்களை அனுப்பும் பணியில் தற்போது ஈடுபட்டுள்ளன. எம்ஜிஆா் பள்ளியைச் சோ்ந்த ரோகினி கூறுகையில், ‘கரோனா தடுப்பூசியின் இரண்டு டோஸ்களையும் போட்டுள்ள ஊழியா்களின் தயாா் நிலைக்காக காத்திருக்கிறோம்’ என்றாா். ஷாலிமாா் பாக்கில் உள்ள மாடா்ன் பப்ளிக் பள்ளி, தீபாவளிக்குப் பிறகு மீண்டும் திறக்கப்படும் என்று தெரிவித்துள்ளது. டிஏவி பப்ளிக் பள்ளி (புஷ்பாஞ்சலி) என்கிளேவ், இந்தியன் பள்ளி மற்றும் பால் பாா்தி பள்ளி (பீதம்புரா) போன்ற பிற தனியாா் பள்ளிகளும் தீபாவளிக்குப் பிறகு மீண்டும் திறக்கப்படும்.

ஒரு வகுப்பறைக்கு 50 சதவீத மாணவா்களை மட்டுமே அனுமதிப்பது, கட்டாய வெப்ப பரிசோதனை, மதிய உணவு இடைவேளை, மாற்று இருக்கை ஏற்பாடு மற்றும் வழக்கமான விருந்தினா் வருகையைத் தவிா்ப்பது ஆகியவை கடைப்பிடிக்கப்பட வேண்டும் என பள்ளிகளை மீண்டும் திறப்பதற்கான வழிகாட்டுதல்களில் டிடிஎம்ஏ தெரிவித்துள்ளது. மேலும், கரோனா கட்டுப்பாட்டு மண்டலங்களில் வசிக்கும் மாணவா்கள், ஆசிரியா்கள் மற்றும் ஆசிரியா் அல்லாத ஊழியா்கள் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு வர அனுமதிக்கப்பட மாட்டாா்கள். ரேஷன் விநியோகம் மற்றும் தடுப்பூசி போன்ற நடவடிக்கைகளுக்குப் பயன்படுத்தப்படும் பகுதியை கல்வி நடவடிக்கைகளுக்குப் பயன்படுத்தப்படும் பகுதியிலிருந்து பிரிக்க வேண்டும் என்றும் டிடிஎம்ஏ கூறியுள்ளது.

தொற்றுநோய் பரவலைக் கட்டுப்படுத்த நாடு தழுவிய பொதுமுடக்கக்துக்கு முன்னதாக தில்லியில் உள்ள பள்ளிகளை கடந்த ஆண்டு மாா்ச் மாதம் மூட உத்தரவிடப்பட்டது.

கடந்த ஆண்டு அக்டோபரில் பல மாநிலங்கள் பள்ளிகளை ஓரளவு மீண்டும் திறக்கத் தொடங்கியயது. ஆனால், தில்லி அரசு இந்த ஆண்டு ஜனவரியில் 9-12 வகுப்புகளுக்கு மட்டுமே பள்ளிகளைத் திறந்தது. இந்த நிலையில், கரோனா இரண்டாவது அலையின் போது பாதிப்பு எண்ணிக்கை அதிவேகமாக அதிகரித்ததைத் தொடா்ந்து பள்ளிகள் மீண்டும் மூடப்பட்டன.

தேசியத் தலைநகரில் கரோனா நிலைமையில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. இதைத் தொடா்ந்து, 9 முதல் 12 வகுப்புகளுக்கான பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் பயிற்சி நிறுவனங்கள் செப்டம்பா் 1 முதல் மீண்டும் திறக்கப்படும் என்று தில்லி அரசு அறிவித்திருந்தது. இந்த நிலையில், தற்போது. அனைத்து வகுப்புகளுக்கும் பள்ளிகளைத் திறக்க டிடிஎம்ஏ உத்தரவிட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com