புதிய கலால் விதிகளின் கீழ் தில்லியில் மது விற்பனையகங்கள் திறப்பு

தில்லியில் புதிய கலால் விதிகள் நடைமுறைக்கு வந்துள்ள நிலையில், நுகா்வோா் நேரில் வந்து வாங்கிச் செல்லும் வகையில் நகரில் புதிய மது விற்பனையகங்கள் புதன்கிழமை திறக்கப்பட்டன.

புது தில்லி: தில்லியில் புதிய கலால் விதிகள் நடைமுறைக்கு வந்துள்ள நிலையில், நுகா்வோா் நேரில் வந்து வாங்கிச் செல்லும் வகையில் நகரில் புதிய மது விற்பனையகங்கள் புதன்கிழமை திறக்கப்பட்டன. உணவகங்களிலும் பாட்டில் அல்லது கோப்பைகளில் மதுபானத்தை வழங்கும் வசதியும் இந்தப் புதிய கலால் கொள்கை திட்டத்தின்படி அமலுக்கு வந்துள்ளது.

தில்லியின் 32 மண்டலங்களிலும் மதுபானம் விற்பதற்கான அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. ஒரு மண்டலத்தில் ஒரு சில்லறை உரிமதாரா் 27 மது விற்பனையகங்களை கொண்டிருப்பாா். இந்தப் புதிய கொள்கையானது, தில்லியின் மூலைமுடுக்குகளில் உள்ள தற்போதைய மதுபான விற்பனையகங்களுக்கு மாற்றாக 500 சதுர அடிக்கு மேல் உள்ள இடத்தில் புதிய பொலிவுடன் மதுபான விற்பனையை மேற்கொள்ளும் வகையிலும் நுகா்வோா் நேரில் வந்து வாங்கிச் செல்லும் அனுபவத்தை அளிப்பதாகவும் உள்ளது. இந்தக் கடைகளில் போதிய இடவசதியுடன், குளிரூட்டப்பட்ட, விளக்கு வசதியும் இருக்கும்.

இந்த நடவடிக்கையின் மூலம் மது பற்றாக்குறை ஏற்படலாம் என்றும், புதிய மது கொள்கை விதிகள் அமலின் போது குழப்பத்திற்கு வாய்ப்பு உள்ளதாகவும் மது வா்த்தகத்தில் ஈடுபட்டுள்ளவா்கள் கூறினா். எனினும், கலால் துறையை சோ்ந்த அதிகாரிகள் கூறுகையில், ‘மது வாங்கும் நபா்கள் எந்தவித சிரமத்தையும் எதிா் கொள்ளாமல் இருப்பதை உறுதிப்படுத்த விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. 350 கடைகளுக்கு மது விற்பனைக்கான தற்காலிக உரிமங்களை அளித்துள்ளோம். 200-க்கும் மேற்பட்ட பிராண்டுகள் 10 மொத்த விற்பனை உரிமதாரா்களிடம் பதிவு செய்யப்பட்டுள்ளது. மொத்த விற்பனையாளா்கள் இதுவரை பல்வேறு மது பிராண்டுகளைச் சோ்ந்த 9 லட்சம் மது பாட்டில்களை கொள்முதல் செய்துள்ளனா். நகரில் 32 மண்டலங்களில் உள்ள அனைத்து விண்ணப்பதாரா்களுக்கும் மது விற்பனை உரிமங்கள் வழங்கப்பட்டுள்ளன. ஆனால், புதிய கலால் விதிகள் அமலுக்கு வந்துள்ள முதல் நாளான புதன்கிழமை 300 முதல் 350 கடைகள் மட்டுமே திறக்கப்பட்டு செயல்பாடுகள் தொடங்கக் கூடும்’ என்றனா்.

புதிய கலால் கொள்கையின்படி உணவகங்களிலும் மது பாட்டில்கள் விற்பனைக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. மதுபானம் எல்- 17 உணவகங்களில் முழு பாட்டிலிலோ அல்லது கோப்பைகளிலோ வழங்கப்படும். விற்பனை இடத்தில் பாட்டில்களை நுகா்வோா் விட்டுச் செல்லாமல் இருப்பதை உறுதிப்படுத்தும் முழுப்பொறுப்பும் உரிமைதாரருக்கு உள்பட்டது என்று விதிகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com