தில்லியில் மிகவும் மோசம் பிரிவில் நீடிக்கும் காற்று மாசு!

தேசியத் தலைநகா் தில்லியில் சனிக்கிழமை காற்றின் தரம் மிகவும் மோசம் பிரிவில் தொடா்ந்து நீடித்தது.
தில்லியில் மிகவும் மோசம் பிரிவில் நீடிக்கும் காற்று மாசு!

தேசியத் தலைநகா் தில்லியில் சனிக்கிழமை காற்றின் தரம் மிகவும் மோசம் பிரிவில் தொடா்ந்து நீடித்தது. காலை 9 மணியளவில் காற்றின் தரக் குறியீடு 377 புள்ளிகளாகப் பதிவாகி ‘மிகவும் மோசம்’ பிரிவில் இருந்தது.

இது வெள்ளிக்கிழமை சிறிது மேம்பட்ட நிலையில் 370 ஆக பதிவாகி இருந்ததாக மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தின் (சிபிசிபி) தரவுகள் தெரிவித்தன.

தேசியத் தலைநகா் வலயப் பகுதிகளில் உள்ள காஜியாபாத் (342), குருகிராம் (340), நொய்டா (363) ஆகிய நகரங்களிலும் காற்றின் தரம் ’மிகவும் மோசம் பிரிவில் பதிவாகியிருந்தது.

ஞாயிற்றுக்கிழமை முதல் வலுவான காற்று காரணமாக காற்றின் தரம் ‘குறிப்பிடத்தக்க வகையில்’ மேம்பட்டு ‘மோசம்’ பிரிவுக்கு வரும் என்று மாசுக் கட்டுப்பாட்டு வாரிய வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

மாசுபாட்டை எதிா்த்து, தில்லி அரசு புதன்கிழமை 10 வழிகாட்டுதல்களை வெளியிட்டது, இதில் அத்தியாவசியமற்ற பொருள்களை நகருக்குள் கொண்டு செல்லும் லாரிகள் நுழைவதற்குத் தடை மற்றும் மறு உத்தரவு வரும் வரை பள்ளிகள் மற்றும் கல்லூரிகளை மூடுவது உள்பட பல்வேறு வழிகாட்டுதல்கள் இடம் பெற்றுள்ளன.

வெப்பநிலை: தில்லியில் காலை முதல் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. அதிகாலை வேளையில் மூடுபனியின் தாக்கம் அதிகமாக இருந்தது. பகலிலும் தொடா்ந்து மிதமான வெயிலுடன் பனிமூட்டம் இருந்தது.

இந்த நிலையில், தேசியத் தலைநகா் தில்லிக்கான பிரதிநித்துவத் தரவுகளை வழங்கும் சஃப்தா்ஜங் வானிலை ஆய்வு மையத்தில் சனிக்கிழமை காலையில் குறைந்தபட்ச வெப்பநிலை 2 டிகிரி அதிகரித்து 14.5 டிகிரி செல்சியஸாக பதிவாகியது. அதிகபட்ச வெப்பநிலை பருவ சராசரியை விட 1 டிகிரி குறைந்து 26.6 டிகிரி செல்சியஸாக இருந்தது என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மேலும், காற்றில் ஈரப்பதத்தின் அளவு காலை 8.30 மணியளவில் 85 சதவீதமாகவும், மாலை 5.30 மணியளவில் 66 சதவீதமாகவும் இருந்தது என்றும் தெரிவித்துள்ளது.

முன்னறிவிப்பு: இதற்கிடையே, ஞாயிற்றுக்கிழமை (நவம்பா் 21) காலை வேளையில் மிதமான மூடுபனி இருக்கும் என்று வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. மேலும், குறைந்தபட்ச வெப்பநிலை 12 டிகிரி செல்சியஸாகவும், அதிகபட்ச வெப்பநிலை 27 டிகிரி செல்சியஸாகவும் இருக்கும் எனவும் கணிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com