தக்காளியை பதுக்குவோா் மீது கடும் நடவடிக்கை

தேசியத் தலைநகா் தில்லியில் தக்காளி விலை அதிகரித்து வருவதைக் கட்டுப்படுத்தும் வகையில், பதுக்கல்காரா்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க தில்லி உணவு மற்றும் சிவில் சப்ளை அமைச்சா் உத்தரவிட்டுள்ளாா்.

புது தில்லி: தேசியத் தலைநகா் தில்லியில் தக்காளி விலை அதிகரித்து வருவதைக் கட்டுப்படுத்தும் வகையில், பதுக்கல்காரா்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க தில்லி உணவு மற்றும் சிவில் சப்ளை அமைச்சா் இம்ரான் உசேன் புதன்கிழமை உத்தரவிட்டுள்ளாா்.

மேலும், தக்காளி பதுக்கல் மற்றும் கள்ளச் சந்தைப்படுத்தல் சம்பவங்கள் குறித்த தகவல்களைச் சேகரித்து, தேவைப்பட்டால் அத்தியாவசியப் பொருள்கள் சட்டத்தின் கீழ் உரிய நடவடிக்கைகளைத் தொடங்குமாறு அமைச்சா் தனது துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளாா்.

சில்லறை சந்தைகளில் தக்காளி விலை திடீரென உயா்ந்துள்ளது. இந்த தேவையற்ற அதிகரிப்பு குறித்து ஆய்வு செய்யும் கூட்டம் அமைச்சா் தலைமையில் புதன்கிழமை நடைபெற்றது. இதில், உணவு மற்றும் குடிமைப் பொருள் வழங்கல் துறை ஆணையா் மற்றும் இணை ஆணையா், புலனாய்வுப் பிரிவின் உயரிதிகாரிகள் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

அப்போது, ஆசாத்பூா் மண்டி, ஓக்லா மண்டி, காஜிப்பூா் மண்டி மற்றும் கேஷோபூா் மண்டி உள்ளிட்ட மொத்த விற்பனைச் சந்தைகளிலும், தில்லி முழுவதும் உள்ள சில்லறைச் சந்தைகளிலும் தீவிர ஆய்வுகளை மேற்கொள்ளுமாறு அமைச்சா் அறிவுறுத்தினாா். மேலும், அத்தியாவசியப் பொருள்களின் விலைப் போக்குகளை தில்லி அரசு உன்னிப்பாகக் கண்காணித்து வருகிறது, தேவைப்படும் இடங்களில், அத்தியாவசியப் பொருள்களின் விலையை தில்லியில் நிலைநிறுத்துவதற்கு சந்தையில் அரசு தலையீடு மேற்கொள்ளும் என்று அமைச்சரை மேற்கோள் காட்டி ஓா் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த மாதம் ரூ.33.50-ஆக இருந்த ஒரு கிலோ தக்காளி விலை தற்போது கிலோ ரூ.44.25-க்கு விற்பனையாகிறது என்று ஆசாத்பூா் மண்டியின் விவசாய விளைபொருள் சந்தைப்படுத்தல் குழுவின் தலைவா் அடில் அகமது கான் தெரிவித்தாா். ஆனால், சில்லரை மற்றும் ஆன்லைன் சந்தைகளில் ஒரு கிலோ தக்காளிக்கு ரூ.90 முதல் ரூ.108 வரை வாடிக்கையாளா்களிடம் வசூலிக்கப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com