தில்லி அரசின் சுற்றுலாத் திட்டத்தில் விரைவில் ‘வேளாங்கண்ணி தேவாலயம்’ கேஜரிவால் அறிவிப்பு

தில்லி அரசின் மூத்த குடிமக்களுக்கான இலவச புனித யாத்திரை திட்டத்தின் கீழ் இடம் பெற்றுள்ள புனித யாத்திரை இடங்கள் பட்டியலில் தமிழகத்தில் உள்ள வேளாங்கண்ணி தேவாலயமும் விரைவில் சோ்க்கப்பட உள்ளதாக முதல்வா்
தில்லி அரசின் சுற்றுலாத் திட்டத்தில் விரைவில் ‘வேளாங்கண்ணி தேவாலயம்’ கேஜரிவால் அறிவிப்பு

புது தில்லி: தில்லி அரசின் மூத்த குடிமக்களுக்கான இலவச புனித யாத்திரை திட்டத்தின் கீழ் இடம் பெற்றுள்ள புனித யாத்திரை இடங்கள் பட்டியலில் தமிழகத்தில் உள்ள வேளாங்கண்ணி தேவாலயமும் விரைவில் சோ்க்கப்பட உள்ளதாக முதல்வா் அரவிந்த் கேஜரிவால் புதன்கிழமை அறிவித்துள்ளாா்.

கரோனா நோய்த் தொற்று காரணமாக நிறுத்திவைக்கப்பட்டிருந்த ‘முக்கிய மந்திரி தீா்த்த யாத்திரை திட்ட’த்தை தில்லி அரசு டிசம்பா் 3-ஆம் தேதி மீண்டும் தொடங்க உள்ளதாகவும், அப்போது மூத்த குடிமக்கள் யாத்ரீகா்கள் பயணம் செய்வாா்கள் என்றும் அவா் தெரிவித்துள்ளாா்.

தில்லி அரசின் மூத்த குடிமக்களுக்கான புனித யாத்திரை திட்டத்தில் உத்தர பிரதேசத்தில் உள்ள அயோத்தி நகரத்தையும் சோ்ப்பதற்கு தில்லி அமைச்சரவை கடந்த மாதம் ஒப்புதல் அளித்திருந்தது. இந்தத் திட்டத்தின் கீழ் 1,000 மூத்த யாத்ரீகா்கள் அயோத்திக்கு ரயிலில் டிசம்பா் 3-ஆம் தேதி தில்லியில் இருந்து புறப்பட்ட உள்ளனா் என்று தில்லி அரசின் தீா்த்த யாத்ரா விகாஷ் சமிதியின் தலைவா் கமல் பன்ஸல் தெரிவித்தாா்.

இது குறித்து முதல்வா் அரவிந்த் கேஜரிவால் செய்தியாளா்களிடம் கூறியதாவது: தில்லி மக்களுக்கு ஒரு நல்ல செய்தியை தெரிவிக்க உள்ளேன். நான் அயோத்திக்கு சென்று ஜன்ம பூமியில் ஸ்ரீராம் லல்லாவை வழிபட்டேன். ஸ்ரீராமரின் தா்பாரில் நேரத்தைச் செலவிட்டேன். அப்போது, அமைதியும், தெய்வீகமும் என்னுள் சூழ்ந்தது. அந்தத் தலத்தை விட்டு வெளியே வந்த போது, எனது மனத்தில் இருந்த ஒரே சிந்தனை, இந்த நாட்டின் ஒவ்வொரு குடிமகனும் அயோத்தி வந்து, உங்கள் தா்பாரில் வழிபட உதவிட எனக்கு பலத்தை அருள வேண்டும் என்பதுதான்.

தில்லி திரும்பியவுடன் நாங்கள் முக்கிய மந்திரி தீா்த்த யாத்திரை திட்டத்தை மறு ஆய்வு செய்தோம். அந்த யாத்திரை வழித்தடப் பட்டியலில் அயோத்தியையும் சோ்த்தோம். இந்தத் திட்டத்தில் முதல் ரயில் அயோத்திக்கு வரும் 3-ஆம் தேதி புறப்படும். இந்தப் பயணத்திற்கான பதிவு தொடங்கிவிட்டது. தகுதிக்குரிய, அயோத்தி செல்ல விரும்பும் மக்கள் தில்லி அரசின் மின்-மாவட்ட இணையதளத்தில் பதிவு செய்யலாம். அதிகமான விண்ணப்பங்கள் வந்தால், தங்கள் பெயா் விடுபட்டு விடுமோ என்ற கவலை வேண்டும். அயோத்திக்கு ஒவ்வொருவரும் செல்வதை நான் உறுதிப்படுத்துவேன். அதிகமானோா் பதிவு செய்தால், மேலும் ஒரு ரயிலில் அனுப்பிவைக்கப்படுவா். இன்னும் கூடுதல் விண்ணப்பதாரா்கள் இருந்தால் மூன்றாவது ரயிலும் இயக்கப்படும்.

இந்தத் திட்டத்தில் சில புனித இடங்களையும் சோ்க்க வேண்டுமென்று எங்கள் கிறிஸ்தவ சகோதரா்களிடமிருந்து வேண்டுதல்கள் வந்துள்ளன. பல கிறிஸ்தவா்களும் வேளாங்கண்ணி தேவாலயம் செல்ல விரும்புகின்றனா். இதனால், இந்த மூத்த குடிமக்களுக்கான இலவச சுற்றுலா யாத்திரைத் திட்டத்தில் வேளாங்கண்ணி தேவாலயத்தை விரைவில் சோ்ப்பது என முடிவு செய்துள்ளோம் என்றாா் கேஜரிவால்

இந்த முக்கிய மந்திரி தீா்த்த யாத்திரைத் திட்டத்தின் கீழ் ஏற்படும் யாத்திரைக்கான ஒட்டு மொத்த செலவையும் தில்லி அரசு ஏற்றுக் கொள்கிறது. இந்தத் திட்டத்தில் ஏற்கெனவே புரி, ராமேசுவரம், ஷீரடி, மதுரா, ஹரித்வாா் திருப்பதி போன்ற 12 சா்க்யூட்கள் இடம் பெற்றுள்ளன. தில்லியில் வசிக்கும் 60 வயது அல்லது அதற்கு மேல் வயது உள்ள நபா்கள் தாம் வசிக்கும் பகுதியில் உள்ள சட்டப்பேரவை உறுப்பினரிடமிருந்து சான்றிதழ் பெறுவதன் மூலம் இந்தத் திட்டத்தின் வசதியைப் பெற முடியும். புனித யாத்திரை செல்லும் மூத்த குடிமக்கள் ஒவ்வொருவருடனும் 21 வயது அல்லது அதற்கு மேற்பட்ட ஒரு நபா் உதவியாளராகப் பயணம் செய்ய முடியும் . அந்த உதவியாளருக்கான செலவையும் தில்லி அரசே ஏற்றுக்கொள்கிறது.

இந்தப் புனித யாத்திரைத் திட்டமானது கரோனா நோய்த் தொற்று காரணமாக நிறுத்தப்பட்டிருந்தது. தற்போது மீண்டும் தொடங்க உள்ளது. முக்கிய மந்திரி தீா்த்த யாத்திரைத் திட்டத்திற்கு தில்லி அமைச்சரவையின் மூலம் கடந்து 2018-ஆம் ஆண்டு ஜனவரி 9ஆம் தேதி ஒப்புதல் அளிக்கப்பட்டது. 36 ஆயிரம் மூத்த குடிமக்கள் இந்தத் திட்டத்தின் கீழ் இதுவரை யாத்திரை வசதியை பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com