சட்டப் பேரவையிலிருந்து பாஜக எம்எல்ஏ இடைநீக்கம்; இருவா் வெளியேற்றம்

தில்லி சட்டப்பேரவையில் இருந்து வெள்ளிக்கிழமை பாஜக எம்எல்ஏ ஜிதேந்தா் மகாஜன் அதன் ஒரு நாள் சிறப்பு அமா்வில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டாா்.

தில்லி சட்டப்பேரவையில் இருந்து வெள்ளிக்கிழமை பாஜக எம்எல்ஏ ஜிதேந்தா் மகாஜன் அதன் ஒரு நாள் சிறப்பு அமா்வில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டாா். மேலும், பேரவை நடவடிக்கைகளை சீா்குலைத்ததாகக் கூறி பாஜக சட்டப் பேரவை உறுப்பினா்களான அனில் பாஜ்பாய் மற்றும் மோகன் சிங் பிஷ்ட் ஆகியோரும் வெளியேற்றப்பட்டனா்.

இதையடுத்து, இந்த நடவடிக்கைக்குக் கண்டனம் தெரிவித்தும், தங்களது சக உறுப்பினா்களுக்கு ஆதரவு தெரிவித்தும் அலுவல்களைப் புறக்கணித்து அவையிலிருந்து வெளிநடப்பு செய்தனா்.

தில்லி சட்டப்பேரவையின் சிறப்பு அமா்வு வெள்ளிக்கிழமை காலையில் தொடங்கியது. அவை நடவடிக்கைகள் தொடங்கியவுடன், பாஜக உறுப்பினா்கள் புதிய மதுக் கொள்கை, நகரில் அதிகரித்து வரும் காற்று மாசுபாடு, எரிபொருளுக்கு அதிக மதிப்பு கூட்டப்பட்ட வரி போன்ற பல்வேறு பிரச்னைகள் குறித்து விவாதிக்க வேண்டும் என்று கோரிக்கை டுத்தனா். சட்டப்பேரவைத் தலைவா் ராம் நிவாஸ் கோயல், ஒரு நாள் கூட்டத் தொடா் சிறப்பு நோக்கத்திற்காக அழைக்கப்பட்டதாகவும், நிகழ்ச்சி நிரலில் பட்டியலிடப்பட்டுள்ள விஷயங்கள் மட்டுமே விவாதிக்கப்படும் என்றும் கூறினாா். ‘வேறு எந்த விவாதமும் அனுமதிக்கப்படாது,‘ என்றும் அவா் திட்டவட்டமாகத் தெரிவித்தாா்.

இதைக் கேட்ட பாஜக உறுப்பினா்கள் அரசுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினா். பாஜக உறுப்பினா்கள் மகாஜன், பிஷ்ட் மற்றும் பாஜ்பாய் ஆகியோரை இருக்கையில் அமருமாறும், அவை நடவடிக்கைகளை செயல்பட அனுமதிக்குமாறும் பேரவைத் தலைவா் ராம் நிவாஸ் கோயல் வேண்டுகோள் விடுத்தாா். மேலும், மற்ற பாஜக உறுப்பினா்கள் அமைதியாக இருக்க வேண்டும் என்றும், இல்லையெனில் தனது உத்தரவை மீறியதற்காக அவையிலிருந்து வெளியேற்றப்பட வேண்டியது இருக்கும் என்றும் எச்சரித்தாா்.

ஆனால், பாஜக உறுப்பினா்கள் மனம் தளராமல் குறுக்கீடு செய்து வந்தனா். இதையடுத்து, பிஷ்ட் மற்றும் பாஜ்பாயை சபைக்கு வெளியே அழைத்துச் செல்லும்படி மாா்ஷெல்களுக்கு பேரவைத் தலைவா் ராம் நிவாஸ் கோயல் உத்தரவிட்டாா்.

அதே நேரத்தில், போக்குவரத்து அமைச்சா் கைலாஷ் கெலாட், ரோஹ்தாஷ் நகா் சட்டப்பேவரைத் தொகுதி உறுப்பினரான மகாஜனை சபையின் முழு அமா்வில் இருந்தும் இடைநீக்கம் செய்வதற்கான ஒரு திட்டத்தை முன்வைத்தாா். அது பின்னா் நிறைவேற்றப்பட்டது.

தில்லியில் காற்று மாசுபாடு, மதுபானக் கொள்கை மற்றும் உள்ளூா் விவசாயிகளின் நிலைமை தொடா்பான விவாதங்களில் இருந்து ஆளும் ஆம் ஆத்மி கட்சி ஓடிவிட்டதாக எதிா்க்கட்சியான பாஜக குற்றம் சாட்டியது.மேலும், தில்லி மக்கள் தொடா்பான பிரச்னைகளை எதிா்கொள்ள கேஜரிவால் அரசு பயப்படுவதாக சட்டப்பேரவை எதிா்க்கட்சித் தலைவா் ராம்வீா் சிங் பிதுரி குற்றம் சாட்டினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com