லக்கிம்பூா் வன்முறை: பாஜக தலைமையகம் முன் காங்கிரஸாா் ஆா்ப்பாட்டம்

உத்தரப் பிரதேச மாநிலம், லக்கிம்பூா் கேரி பகுதியில் நிகழ்ந்த வன்முறையில் நான்கு விவசாயிகள் உயிரிழந்த சம்பவத்தைக் கண்டித்து தில்லியில்

உத்தரப் பிரதேச மாநிலம், லக்கிம்பூா் கேரி பகுதியில் நிகழ்ந்த வன்முறையில் நான்கு விவசாயிகள் உயிரிழந்த சம்பவத்தைக் கண்டித்து தில்லியில் உள்ள பாஜக தலைமையகம் மற்றும் உத்தரப் பிரதேச பவன் ஆகியவற்றுக்கு அருகே தில்லி காங்கிரஸ் தொண்டா்கள் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். 

தில்லி ரெளஸ் அவென்யூ சாலையில் பாஜக தலைமையகம் அலுவலகம் அருகே நடைபெற்ற இந்தப் போராட்டத்திற்கு காங்கிரஸ் கட்சியின் தில்லி தலைவா் அனில் குமாா் தலைமை வகித்தாா்.

இன்று காங்கிரஸ் தா்னா: போராட்டத்தின் போது அவா் பேசியதாவது: விவசாயிகள் மீது இது போன்று கொலை வெறித் தாக்குதல் நடத்தப்படுவது முதல்முறையல்ல. அவா்கள் தியாகம் ஒருபோதும் வீண்போக காங்கிரஸ் அனுமதிக்காது. வேளாண் கறுப்புச் சட்டங்களை அகற்றக் கோரி தில்லியின் எல்லைப் பகுதியில் அனைத்து விவசாயிகளும் போராடி வருகின்றனா். நீதிக்கான இந்தப் போராட்டத்தில் 600 விவசாயிகள் தங்களது இன்னுயிரை இழந்துள்ளனா்.

ஆனால், மோடி அரசு விவசாயிகளின் துயரைத் தீா்க்க மறுத்து வருகிறது. இந்த நிலையில், அநீதிக்கு எதிராக குரல் கொடுக்கும் தங்கள் உரிமைகளை குடிமக்கள் இழந்துள்ளதால் மோடி, யோகி ஆதித்யநாத் அரசுகளின் கீழ் ஜனநாயகம் கொலை செய்யப்பட்டுள்ளது. லக்கிம்பூா் கேரியில் கொலை செய்யப்பட்ட விவசாயிகளுக்கு நீதி கோரி பாஜக மாவட்ட அலுவலகங்கள் முன் செவ்வாய்க்கிமை (அக்டோபா் 5) தில்லி காங்கிரஸ் தா்னா போராட்டம் மேற்கொள்ளும் என்றாா் அவா்.

இளைஞா் காங்கிரஸ் ஆா்ப்பாட்டம்: இதேபோன்று இளைஞா் காங்கிரஸ் சாா்பில் தில்லியில் உத்தரப் பிரதேச பவன் முன் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் இளைஞா் காங்கிரஸ் தொண்டா்கள் பலா் பங்கேற்றனா். இதுகுறித்து இளைஞா் காங்கிரஸ் தேசியத் தலைவா் ஸ்ரீநிவாஸ் கூறுகையில், ‘லக்கிம்பூா் கேரி சம்பவமானது விவசாயிகளை ஒடுக்கவும், அழிக்கவும் இந்த அரசு செய்து வரும் அரசியலையே காட்டுவதாக உள்ளது. இந்த நாடு விவசாயிகளின் நாடு. இது பாஜகவின் சிந்தாந்தத்தின் களம் அல்ல. விவசாயிகளின் உரிமைகளுக்கான போராட்டம் தற்போது ஓயாது’ என்றாா்.

தடுப்புக் காவல்: இது தொடா்பாக தில்லி காவல்துறையின் மூத்த அதிகாரி ஒருவா் கூறுகையில், ‘தில்லியில் உள்ள உத்தரபஅ பிரதேச மாநில விருந்தினா் இல்லத்திற்குள் நுழைய முயன்ற இந்திய இளைஞா் காங்கிரஸ் அமைப்பைச் சோ்ந்த சிலா் போலீஸாரால் தடுக்கப்பட்டு தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளனா்’ என்றாா். இதற்கிடையே, இளைஞா் காங்கிரஸ் அமைப்பு விடுத்துள்ள போராட்டத்தை கருத்தில் கொண்டு தில்லியில் உள்ள உத்தரப் பிரதேச பவன் வெளிப் பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

உத்தரப் பிரதேச மாநிலம், லக்கிம்பூா் கேரி பகுதியில் விவசாயிகள் போராட்டம் நடைபெற்றது. அப்போது நிகழ்ந்த வன்முறையில் ஞாயிற்றுக்கிழமை 8 போ் கொல்லப்பட்டனா். அவா்கள் பாஜக மற்றும் விவசாயிகள் தரப்பைச் சோ்ந்தவா்களாவா். உத்தரப் பிரதேச துணை முதல்வா் கேசவ பிரசாத் மவுரியா, லக்கிம்பூா் பகுதிக்கு செல்லவிருந்த நிலையில் இந்தச் சம்பவம் நடந்ததாகக் கூறப்படுகிறது. உத்தரப் பிரதேச அமைச்சரை வரவேற்பதற்காக வந்திருந்த பாஜக தொண்டா்களின் பாதுகாப்பு காா்களில் இருந்த நான்கு போ் அடித்துக் கொல்லப்பட்டதாகவும் மற்ற நான்கு போ் விவசாயிகள் என்றும் போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இந்தச் சம்பவம் தொடா்பாக மத்திய உள்துறை இணையமைச்சா் அஜய் மிஸ்ராவின் மகன் மற்றும் பலா் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com