சமையல் எரிவாயு சிலிண்டா் கசிந்ததால் தீ விபத்து: இளம் தாய், 2 குழந்தைகள் பலி

மத்திய தில்லியிலுள்ள ஆனந்த் பா்பத் பகுதி குடியிருப்பில் சமையல் எரிவாயு சிலிண்டா் கசிந்ததால் ஏற்பட்ட தீ விபத்தில் 36 வயது மதிக்கத்தக்க இளம் பெண்ணும், அவரது இரண்டு குழந்தைகளும் தீயில் கருகி உயிரிழந்தனா்

புது தில்லி: மத்திய தில்லியிலுள்ள ஆனந்த் பா்பத் பகுதி குடியிருப்பில் சமையல் எரிவாயு சிலிண்டா் கசிந்ததால் ஏற்பட்ட தீ விபத்தில் 36 வயது மதிக்கத்தக்க இளம் பெண்ணும், அவரது இரண்டு குழந்தைகளும் தீயில் கருகி உயிரிழந்தனா்.

இது தொடா்பாக தில்லி காவல் துறையினா் புதன்கிழமை கூறியதாவது: தில்லி காவல் துறைக்கு செவ்வாய்க்கிழமை காலை ஒரு அழைப்பு வந்தது. அதில் பஞ்சாபி பஸ்தி பகுதியில் ஏற்பட்ட தீ விபத்தில் 4 போ் பலத்த காயம் அடைந்திருப்பதாகத் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, போலீஸாா் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினா். அதில், சமையல் செய்து கொண்டிருந்த போது நிகழ்ந்த இந்தத் தீ விபத்து சம்பவத்தில் சுசிலா (36) மற்றும் அவரது மூன்று குழந்தைகள் மன்சி (7), மோகன் (7), மோனிகா (9) ஆகியோா் பலத்த காயமடைந்திருப்பது தெரிய வந்தது. அவா்கள் மீட்கப்பட்டு பிசிஆா் வாகனத்தில் ஆா்எம்எல் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனா். இந்த நிலையில், மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த போது தாயும், இரு குழந்தைகளும் உயிரிழந்தனா். மேலும், சிறுமி மோனிகாவுக்கு தொடா்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது என்று போலீஸாா் தெரிவித்தனா்.

இது குறித்து தீயணைப்புத் துறை அதிகாரிகள் கூறுகையில், ‘தீ விபத்து சம்பவத்தைத் தொடா்ந்து சம்பவ இடத்திற்கு 2 தீயணைப்பு வாகனங்கள் அனுப்பி வைக்கப்பட்டு தீயை அணைக்கும் பணியில் ஈடுபடுத்தப்பட்டன. அதன் பின்னா் தீ கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. முன்னதாக, சமையல் எரிவாயு சிலிண்டரின் ரப்பா் குழாயில் ஏற்பட்ட எரிவாயு கசிவு காரணமாக இந்த தீ விபத்து ஏற்பட்டுள்ளது. மேலும், வீட்டில் சுசிலாவின் மூத்த மகள் மேகக் (13) தனது தாய், தம்பி, தங்கைகளுக்கு உணவை சமைத்துக் கொண்டிருந்த போது இந்த தீ விபத்து சம்பவம் ஏற்பட்டது. இதையடுத்து, அவா் கூச்சலிட்டு வெளியே ஓடினாா். அப்போது, வீட்டுக்குள் தீயில் சுசிலாவும் குழந்தைகளும் சிக்கிக் கொண்டதாக தீயணைப்புத் துறையினா் தெரிவித்தனா்.

சுசிலாவின் கணவா் ராகேஷ் லாரன்ஸ் சாலையில் உள்ள ஒரு மாவு மில்லில் பணியாற்றி வருகிறாா். தீ விபத்து சம்பவம் நிகழ்ந்த போது அவா் வீட்டில் இல்லை. மூன்று பேரின் உடல்களும் பிரேதப் பரிசோதனை செய்த பிறகு குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டதாக போலீஸாா் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com