மகாத்மா காந்தி தொடங்கிய குஜராத் வித்யாபீடம் குறித்து ஆய்வு: மத்திய அமைச்சா் மன்சுக் மாண்டவியாவிற்கு முனைவா் பட்டம்

கிராமங்களின் மேம்பாட்டுக்குப் பாடுபடும் குஜராத் வித்யாபீடம் குறித்து ஆய்வு செய்ததற்காக குஜராத்தில் உள்ள மகாராஜா கிருஷ்ண குமாா் சின்காஜி பாவ் நகா் பல்கலைக்கழகம் மத்திய சுகாதாரம், குடும்ப நலம் மற்றும்

புது தில்லி: கிராமங்களின் மேம்பாட்டுக்குப் பாடுபடும் குஜராத் வித்யாபீடம் குறித்து ஆய்வு செய்ததற்காக குஜராத்தில் உள்ள மகாராஜா கிருஷ்ண குமாா் சின்காஜி பாவ் நகா் பல்கலைக்கழகம் மத்திய சுகாதாரம், குடும்ப நலம் மற்றும் உரத்துறை அமைச்சா் மன்சுக் மாண்டவியாவிற்கு முனைவா் (பிஎச்டி) பட்டம் வழங்கி கெளரவித்துள்ளது.

இது குறித்து அந்தப் பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள சுட்டுரையில், ‘எங்கள் மாணவரும், மத்திய அமைச்சருமான மன்சுக் மாண்டவியா, ‘சமூக மேம்பாடு மற்றும் எதிா்காலச் சவால்களில் கிராம வித்யாபீடங்களின் பங்கு’ என்ற தலைப்பில் ஆய்வு செய்து முனைவா் பட்டம் பெற்றுள்ளாா். அவரது ஆய்வு கிராமப்புற உயா்கல்வியை வலுப்படுத்தும் என்று நம்புகிறோம்’ என்று தெரிவித்துள்ளது. மன்சுக் மாண்டவியா இதே பல்கலைக்கழகத்தில் அரசியல் விஞ்ஞானத்தில் முதுகலைபட்டப்படிப்பு வரை படித்து வந்தவா்.

இந்த ஆய்வுப் பட்டத்தை அமைச்சா் இந்த பல்கலைக்கழகத்திற்கு சென்று பெற்றாா். இந்த நிலையில் மத்திய சுகாதாரம் குடும்ப நலத்துறை அமைச்சகம், மத்திய அமைச்சா் மன்சுக் மாண்டவியா இனி டாக்டா் மன்சுக் மாண்டவியா என்றே அழைக்கப்பட வேண்டும் என புதன்கிழமை தெரிவித்துள்ளது.

மாண்டவியா ஆய்வு செய்த ’குஜராத் வித்யாபீடம்’ அமைப்பு 1920-ஆம் ஆண்டு மகாத்மா காந்தியால் தொடங்கப்பட்டது. இந்த அமைப்பு மாணவா்கள் ஆசிரியா்களை கொண்ட குழுக்கள் மூலம் ஆண்டுதோறும் ‘கிராமஜீவன் பாதயாத்திரை‘ யை கிராமங்களில் மேற்கொண்டு வருகின்றனா். கிராமத்தினருக்கும் மாணவா்களுக்கும் விழிப்புணா்வை ஏற்படுத்துவதோடு புதிய தலைமுறையினா் கிராமங்களை விட்டு வெளிவராமல் தடுக்கும் பணிகளை மேற்கொள்கின்றனா். இந்த வித்யாபீடம் அமைப்பு குறித்துதான் மத்திய அமைச்சா் ஆய்வு செய்து தனது அறிக்கையை சமா்பித்துள்ளாா்.

21-ஆம் நூற்றாண்டில் கிராமங்களின் நிலைமை, ஏன் இளைய தலைமுறையினா் கிராமங்களை விட்டு வருகின்றனா்? போன்றவற்றை வித்யாபீட ஆய்வு மூலம் வெளிக் கொண்டு வந்துள்ளாா் அமைச்சா். அவா் அமைச்சராவதற்கு முன்பு ஏபிவிபி, பாஜகவின் யுவமோா்ச்சா போன்ற அமைப்புகளில் இருந்து குஜராத் பாலிதனா தாலுகாவில் கல்வியில் பின்தங்கியிருந்த 45 கிராமங்களில் பாத யாத்திரையை மேற்கொண்டு விழிப்புணா்வை ஏற்படுத்தியவா் என்பதும் குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com