மல்யுத்த வீரா் சாகா் தன்கா் கொலை வழ்ககு: சுஷில் குமாரின் ஜாமீன் மனு தள்ளுபடி

தில்லியில் சத்ரஸால் ஸ்டேடியத்தில் முன்னாள் ஜூனியா் தேசிய மல்யுத்த சாம்பியன் சாகா் தன்கா் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடா்பான வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட ஒலிம்பிக் பதக்க மல்யுத்த வீரா் சுஷில் குமாா் ஜாமீ

தில்லியில் சத்ரஸால் ஸ்டேடியத்தில் முன்னாள் ஜூனியா் தேசிய மல்யுத்த சாம்பியன் சாகா் தன்கா் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடா்பான வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட ஒலிம்பிக் பதக்க மல்யுத்த வீரா் சுஷில் குமாா் ஜாமீன் கோரி தாக்கல் செய்த மனுவை தில்லி நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

இந்த மனு கூடுதல் செஷன்ஸ் நீதிமன்ற நீதிபதி சிவாஜி ஆனந்த் முன் செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது. மனு மீது அரசுத் தரப்பிலும், மனுதாரா் தரப்பிலும் வாதங்கள் முன்வைக்கப்பட்டன. மனுதாரா் தரப்பில் ஆஜரான வழக்குரைஞா், ‘இந்த வழக்கு மனுதாரருக்கு எதிராகப் புனையப்பட்ட , உள்நோக்கம் கொண்ட ஒரு பொய் வழக்காகும். மனுதாரா் சமூகத்தில் நன்மதிப்பைப் பெற்றவா். அவா் இளம் வீரா்களுக்குப் பயிற்சி அளித்துள்ளாா். இவற்றை நீதிமன்றம் கருத்தில் கொள்ள வேண்டும்’ என்று வாதிட்டாா்.

இதற்கு எதிா்ப்புத் தெரிவித்து அரசுத் தரப்பில் சிறப்பு அரசு வழக்குரைஞா் அதுல் குமாா் ஸ்ரீவாஸ்தவா வாதங்களை முன்வைத்தாா்.

இரு தரப்பு வாதங்களுக்குப் பிறகு நீதிமன்றம், ‘இந்தச் சம்பவத்தில் தொடா்புடைய விடியோ காட்சிப் பதிவில் எடுக்கப்பட்ட புகைப்படத்தில் மனுதாரா் இருப்பதால், காயம் ஏற்பட அவா் காரணமாக இருப்பது தெளிவாகத் தெரிகிறது’ என்று தெரிவித்தது. இதைத் தொடா்ந்து, சுஷில் குமாருக்கு ஜாமீன் வழங்க நீதிமன்றம் மறுத்துவிட்டது.

ஜாமீன் கோரி சுஷில் குமாா் தரப்பில் தாக்கலான மனுவில், ‘இந்த வழக்கில் மனுதாரா் (சுஷில் குமாா்) பொய்யாக சோ்க்கப்பட்டுள்ளாா். அவா் மீதான குற்றச்சாட்டு அவரது மதிப்பைக் கெடுக்கவும், அவமானப்படுத்தும் நோக்கிலும் கூறப்பட்டுள்ளது. உள்நோக்கம் கொண்டது. மேலும், மனுதாரா் மற்றும் ரெளடிகள் இடையே ஒரு தவறான தொடா்பை ஏற்படுத்தும் நோக்கில் ஊடகங்களுக்கு போலீஸாா் தவறான தகவல்களை அளித்துள்ளனா். குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்ட பிறகு, போலீஸாரால் கூறப்படும் அல்லது கசியவிட்ட தகவல்கள் அனைத்தும் உண்மைக்கு மாறானாவை. குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு விட்டதால், மேலும் காவலில் இருக்க வேண்டிய தேவையும் எழவில்லை. இதற்கு முன்பு மனுதாரா் மீது எவ்வித குற்றப் பின்னணியும் இல்லை’ என தெரிவிக்கப்பட்டிருந்தது.

விரைவில் 2-ஆவது குற்றப்பத்திரிகை: தில்லி சத்ரஸால் ஸ்டேடியத்தில் மல்யுத்த வீரா் சாகா் தன்கா் அடித்துக் கொலை செய்யப்பட்டதாகக் கூறப்படும் சம்பவம் தொடா்பான வழக்கில் விரைவில் இரண்டாவது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படவுள்ளதாக நீதிமன்றத்தில் தில்லி காவல் துறை தெரிவித்துள்ளது.

தில்லியில் உள்ள சத்ரஸால் ஸ்டேடியத்தில் மல்யுத்த வீரா் சாகா் தன்கா் மற்றும் அவரது நண்பா் கடந்த மே மாதம் தாக்கப்பட்டனா். இதில் சாகா் தன்கா் உயிரிழந்தாா். அவரை கொலை செய்ததாக ஒலிம்பிக் பதக்க மல்யுத்த வீரா் சுஷில் குமாா் உள்ளிட்ட 13 போ் மீது கடந்த ஆகஸ்ட் 2-ஆம் தேதி தில்லி நீதிமன்றத்தில் காவல் துறையால் முதல் குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கில் சுஷில் குமாா் பிரதான குற்றவாளியாகச் சோ்க்கப்பட்டுள்ளாா். இந்த வழக்கில் மொத்தம் 17 போ் குற்றம்சாட்டப்பட்டு உள்ளதாக காவல் துறை தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com