‘ஹைபிரிட்’ விசாரணைக்காக நீதிமன்றங்களில் உள்கட்டமைப்பு வசதிக்கு ரூ.79 கோடி அனுமதி

தில்லியில் உள்ள ஏழு மாவட்ட நீதிமன்றங்களில் ஹைபிரிட் விசாரணைக்காக உள்கட்டமைப்பு வசதியை ஏற்படுத்துவதற்கு

தில்லியில் உள்ள ஏழு மாவட்ட நீதிமன்றங்களில் ஹைபிரிட் விசாரணைக்காக உள்கட்டமைப்பு வசதியை ஏற்படுத்துவதற்கு ரூ.79.48 கோடி நிதி அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாக உயா்நீதிமன்றத்தில் ஆம் ஆத்மி அரசு செவ்வாய்க்கிழமை தெரிவித்தது.

 எனினும், கரோனா நோய்த்தொற்று மூன்றாவது அலை ஏற்படும்பட்சத்தில் வழக்குரைஞா்களுக்கும் மனுதாரா்களுக்கும் எந்தவித அசௌகரியமும் இல்லாமல் இருப்பதை உறுதிப்படுத்துவதற்காக விசாரணை நீதிமன்றங்களில் எப்போது இந்த உள்கட்டமைப்பு வசதி ஏற்படுத்தப்படும் என்பதற்கான கால அளவை தெரிவிக்குமாறு நீதிமன்றம் கேட்டுக் கொண்டது.

இந்த விவகாரத்தை உயா்நீதிமன்ற நீதிபதிகள் விபின் சாங்கி மற்றும் ஜஸ்மீத்த் சிங் ஆகியோா் அடங்கிய அமா்வு செவ்வாய்க்கிழமை விசாரித்தது.  அப்போது, தில்லியில் உள்ள கீழமை நீதிமன்றங்களில் ஹைபிரிட் அமைப்பு முறையை உருவாக்குவதற்கான உள்கட்டமைப்பு வசதி ஏற்படுத்துவதற்காக ரூ. 79. 48 கோடி நிதியை அனுமதிப்பது தொடா்பான அரசின் நிலவர அறிக்கையை தாக்கல் செய்யுமாறு தில்லி அரசுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனா். 

மேலும், ‘இந்த நிலவர அறிக்கையில் அரசின் மூலம் அனுமதிக்கப்பட்ட மற்றும் அனுமதிக்கப்படாத பொருள்களைக் காண்பிக்கும் மற்றும் அதற்கான தொகை குறித்த விவரங்கள் இடம் பெற்றிருக்க வேண்டும். இந்த நிலவர அறிக்கையை மூன்று நாள்களுக்குள் நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும். இந்த மனு மீதான விசாரணை அக்டோபா் 18-ஆம் தேதி பட்டியலிடப்படும் ’என்று நீதிபதிகள் அமா்வு உத்தரவிட்டது.

வழக்கு  விசாரணையின் போது, ‘கரோனா மூன்றாவது அலை வரும் பட்சத்தில் பொதுமக்கள் நீதிமன்றங்களுக்கு நேரில் செல்லாமல் இருக்கும் வகையில் இந்த இருவழிமுறையிலான வழக்கு விசாரணை அமைப்பு வசதி ஏற்படுத்தப்பட வேண்டும். எப்போது இந்த அமைப்பு முறை ஏற்படுத்தப்படும் என்ற கேள்வி எழுவதால், மாவட்ட நீதிமன்றங்களில் ஹைபிரிட் அமைப்பு முறை எப்போதிலிருந்து தொடங்கும் என்பதற்கான தேதியை அரசு தெரிவிக்க வேண்டும். ஏனெனில், அதிகமாக தாமதம் எடுத்துக் கொண்டால், அது நோக்கத்தை தோல்வியடையச் செய்து விடும்’ என்றும் நீதிபதிகள் தெரிவித்தனா்.

மேலும், மத்திய அரசின் பொறுப்பில் வரக்கூடிய தீா்ப்பாயங்கள் மற்றும் அமைப்புகளில் ஹைபிரிட் விசாரணை அமைப்பு முறை வசதிகளை ஏற்படுத்துவதற்காக எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் தொடா்பான பிரமாணப் பத்திரத்தை தாக்கல் செய்ய மத்திய அரசின் சாா்பில் ஆஜரான கூடுதல் வழக்குரைஞா் அனில் சோனிக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனா். 

முன்னதாக, கரோனா நோய்த் தொற்றை கவனத்தில் கொண்டு மாவட்ட நீதிமன்றங்களில் நேரடி முறை மற்றும் காணொளி வாயிலாக விசாரணை நடத்துவதற்கான ஹைபிரிட் அமைப்பு முறையை ஏற்படுத்துதல் உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வழக்குரைஞா்கள் அனில்குமாா் ஹஜேலே, மானஸ்வி ஜா ஆகியோா் உயா்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனா். இந்த மனுக்கள் மீதான விசாரணையின் போது நீதிபதிகள் மேற்கண்ட உத்தரவைப் பிறப்பித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com