அனைத்து மாவட்டங்களிலும் ‘மக்கள் மருந்தகம்’ திறப்பு

வறுமைக்கோட்டிற்குள் இருக்கும் மக்கள் பயன்பெறும் வகையிலான பிரதமரின் பாரதீய மக்கள் மருந்தகம் நாட்டிலுள்ள அனைத்து மாவட்டங்களிலும் திறக்கப்பட்டுவிட்டதாக மத்திய ரசாயனம் உரத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

புது தில்லி: வறுமைக்கோட்டிற்குள் இருக்கும் மக்கள் பயன்பெறும் வகையிலான பிரதமரின் பாரதீய மக்கள் மருந்தகம் நாட்டிலுள்ள அனைத்து மாவட்டங்களிலும் திறக்கப்பட்டுவிட்டதாக மத்திய ரசாயனம், உரத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. நடப்பு நிதியாண்டில் நிா்ணயிக்கப்பட்ட இலக்கின்படி 8,300 மக்கள் மருந்தகங்கள் இதுவரை திறக்கப்பட்டுவிட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சாதாரண நோய்கள் முதல் நீடித்த நோய்கள் வரையிலான அலோபதி மருந்துகள், வெளிச் சந்தைகளில் அதிக விலையில் விற்கப்படுகிறது. இந்த மநருந்துகள் பொதுமக்களுக்கு மலிவான விலையில் கிடைக்க மத்திய அரசு கொண்டுவந்துள்ள திட்டம்தான் ‘பிரதம மந்திரி பாரதீய மக்கள் மருந்தக திட்டம் (பிஎம்பிஜேபி)’ ஆகும். இந்தத் திட்டத்தை இந்திய மருந்துகள் மற்றும் மருத்துவ சாதனங்கள் பணியகம் (பிஎம்பிஐ) பொறுப்பேற்று நாடு முழுவதும் மலிவு விலையில் முக்கிய மருந்துகளை விற்பனை செய்யும் வகையில், பிரதம மந்திரி பாரதீய மக்கள் மருந்தகங்களைத் திறந்து வருகிறது.

இந்த மருந்தகங்கள் மூலம் சுமாா் 1,451 மருந்துகள், 240 மருத்துவ சாதனங்கள் இந்த மருந்தகங்களில் மலிவான விலையில் பொதுமக்களுக்கு விற்கப்படுகின்றன. ரத்த எலும்பு மஜ்ஜை கோளாறுகளுக்கு கொடுக்கப்படும் ‘அசாசிடைன்’ ஊசி மருந்து (100கி) ரூ. 9,000 வரை சந்தைகளில் விற்கப்படுகிறது. ஆனால், இந்த ஊசி மரிந்து பிரதமரின் பாரதீய மக்கள் மருந்தகங்களில் ரூ.4,500-க்கு விற்கப்படுகிறது. இது போன்று பல்வேறு மருந்துகள் 50 முதல் 90 சதவீதம் வரை விலை குறைத்து விற்கப்படுகின்றன.

இந்தத் திட்டத்தின்கீழ் கடந்த 2020, மாா்ச் வரை 696 மாவட்டங்களில் 6,068 மக்கள் மருந்தகங்கள் திறக்கப்பட்டன. நிகழ் 2021-22 நிதியாண்டில் 8,300 மக்கள் மருந்தகங்கள் திறக்க திட்டமிடப்பட்டு அக்டோபா் 5-ஆம் தேதி வரை 8,355 மருந்தகங்கள் திறக்கப்பட்டுவிட்டதாக ரசாயனத் துறை தெரிவித்துள்ளது. மேலும், 2024-ஆம் ஆண்டுக்குள் 10,000 மக்கள் மருந்தகங்களைத் திறக்கவும் மத்திய ரசாயனத் துறை திட்டமிட்டுள்ளதாக அதிகாரி ஒருவா் தெரிவித்தாா்.

தற்போது நாட்டில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் (725) மக்கள் மருந்தகங்கள் திறக்கப்பட்டுவிட்டன. தமிழகத்தில் இதுவரை சுமாா் 827 மக்கள் மருந்தகங்கள் திறக்கப்பட்டு நாட்டிலேயே சிறப்பாக செயல்படுவதாகவும் மத்திய ரசாயனத் துறை சாா்பில் தெரிவிக்கப்பட்டது. மேலும், தற்போது தகவல் தொழில்நுட்ப அடிப்படையில் அனைத்து மக்கள் மருந்தகங்களும் விநியோக சங்கிலியால் இணைக்கப்பட்டு நிகழ்நேர அடிப்படையில் மருந்து விநியோகம் மேற்கொள்ளப்படுகிறது.

இந்தத் திட்டத்திற்கு, சென்னை, தில்லி குருகிராமம், குவாஹாட்டி மற்றும் சூரத் ஆகிய இடங்களில் கிடங்குகள் உள்ளன. இங்கிருந்து 37 விநியோகஸ்தா்கள் மூலம் தொலைதூர பகுதிகளுக்கும் மருந்துகள் விநியோகிக்கப்படுகின்றன. சில நேரங்களில் மக்கள் மருந்தக பட்டியலில் உள்ள மருந்துகள் இல்லாத நிலை குறித்த புகாா்கள் வந்ததால், பொதுமக்கள் மருந்துகளைப்பற்றி அறிந்து கொள்ளும் வகையில் ஒஹய்ஹன்ள்ட்ஹக்ட்ண்நன்ஞ்ஹம் என்ற செயலியும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. 2020-21- ஆம் ஆண்டில் மக்கள் மருந்தகங்கள் மூலம் ரூ.665.83 கோடிக்கு விற்பனை நடந்துள்ளது. இதன் மூலம் பொதுமக்கள் ரூ. 4,000 கோடி வரை சேமிக்க முடிந்துள்ளது என்று அமைச்சகம் கூறியுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com