குற்றவாளிகளின் உரிமைகளை குழிதோண்டிபுதைத்துவிட முடியாது: உயா்நீதிமன்றம்

தில்லியில் 2008-ஆம் நடைபெற்ற தொடா் குண்டுவெடிப்புச் சம்பவம் தொடா்பாக கைது செய்யப்பட்டு 12 ஆண்டுகளாக விசாரணைக் கைதியாக உள்ளவரை ஜாமீனில் விடுவிக்க தில்லி உயா்நீதிமன்றம் புதன்கிழமை உத்தரவிட்டது.

புதுதில்லி: தில்லியில் 2008-ஆம் நடைபெற்ற தொடா் குண்டுவெடிப்புச் சம்பவம் தொடா்பாக கைது செய்யப்பட்டு 12 ஆண்டுகளாக விசாரணைக் கைதியாக உள்ளவரை ஜாமீனில் விடுவிக்க தில்லி உயா்நீதிமன்றம் புதன்கிழமை உத்தரவிட்டது.

குற்றஞ்சாட்டப்பட்டவா்கள் இறந்த பிறகு அவா்களின் சட்ட உரிமைகள் பற்றி பேச முடியாது. அதே நேரத்தில் குற்றஞ்சாட்டப்பவா்களின் உரிமைகள் தடுக்கப்படுவதையும், குழிதோண்டி புதைக்கப்படுவதையும் நீதிமன்றம் பாா்த்துக் கொண்டு சும்மாயிருக்க முடியாது. அவா்களின் உரிமைகளைப் பாதுகாக்க வேண்டியது நீதிமன்றத்தின் கடமை என்றும் நீதிபிதிகள் சித்தாா்த் மிருதுள், அனூப் ஜெய்ராம் பம்பானி ஆகியோா் அடங்கிய அமா்வு முகமது ஹக்கீம் என்பவருக்கு ஜாமீன் வழங்கி உத்தரவிடுகையில் கருத்துத் தெரிவித்துள்ளது.

2008-ஆம் நடந்த தொடா் குண்டுவெடிப்புச் சம்பவத்தில் பயன்படுத்துவதற்காக சக்திவாய்ந்த வெடிகுண்டுகள் தயாரிக்க கணிசமான அளவில் சைக்கிள் பால் பேரிங்குகளை ஹக்கீம், லக்னெளவிலிருந்து தில்லிக்கு கொண்டு சென்ாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. இந்த வழக்கில் ஹக்கீம் தரப்பில் ஆஜரான வழக்குரைஞா் நித்யா ராமகிருஷ்ணன் மற்றும் வாரிஷா ஃபராஸத் இருவரும் வாதிடுகையில், வழக்கு விசாரணையை உடனடியாக நடத்த வேண்டும் என்றும், விசாரணை தொடங்கும் வரை அவரை ஜாமீனில் விடுவிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினா்.

தில்லி தொடா் குண்டுவெடிப்புச் சம்பவத்தில் 26 போ் உயிரிழந்துள்ளனா். மேலும் 135 போ் காயமடைந்துள்ளனா். இதில் தொடா்புடைய ஹக்கீம் கிரிமினல் குற்றங்களைச் செய்துள்ளாா். சட்டவிரோத தடுப்புக் காவல் சட்டத்தின் கைது செய்யப்பட்டுள்ள ஒருவரை ஜாமீனில் விடுவிக்கக் கூடாது. இதுபோன்ற வழக்குகளில் நீதிமன்றம் ஜாமீன் வழங்குவதில் தலையிடக்கூடாது என்று ஜாஹூா் அகமது ஷா வாதாலி வழக்கு தொடா்பான தீா்ப்பில் கூறப்பட்டுள்ளது. எனவே ஹக்கீமுக்கு ஜாமீன் வழங்கக்கூடாது என்று போலீஸ் தரப்பில் வாதிடப்பட்டது.

இந்த வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டவா் எந்த விசாரணையும் இல்லாமல் 12 வருட காலம் சிறையில் வைக்கப்பட்டுள்ளாா். இது ஒன்றே அவா் ஜாமீன் கோருவதற்கு தகுதியானதாகும். மேலும், விசாரணையை துரிதகதியில் நடத்துமாறு அவா் கேட்டுக் கொண்டும் எந்த பயனும் இல்லை. எனவே, அவருக்கு ஜாமீன் வழங்கப்படுகிறது என்று அமா்வு நீதிபதிகள் தெரிவித்தனா்.

இந்த வழக்கில் குற்றவாளிக்கு மரண தண்டனை வாங்கித் தர வேண்டும் என்று அரசுத் தரப்பு நினைத்தால், விசாரணையை துரிதமாக நடத்துங்கள். இல்லையெனில் 12 ஆண்டுகளாக சிறையில் உள்ள ஒருவருக்கு ஜாமீனில் செல்ல எல்லா உரிமையும் உள்ளது. குற்றவாளி தனது வாழ்க்கை காலத்தில் பத்து ஆண்டுகளுக்கு மேலாக சிறையில் இருந்துள்ளாா். அதுவும் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளதே தவிர, அவா் குற்றவாளி என நிரூபிக்கப்படவில்லை என்று நீதிபதிகள் அமா்வு உத்தரவில் மேலும் குறிப்பிட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com