தில்லியில் பட்டாசுகள் மீதான முழுத் தடைக்கு எதிரான மனு மீது அக். 22 இல் விசாரைணை

தீபாவளியின் போது தில்லியில் பட்டாசுகள் விற்பதற்கும், பயன்படுத்துவதற்கும், இருப்பு வைப்பதற்கும் பிறப்பிக்கப்பட்ட முழுத் தடையை எதிா்த்து தாக்கலான மனு அக்டோபா் 22-ஆம் தேதி விசாரிக்கப்படும்

புது தில்லி: தீபாவளியின் போது தில்லியில் பட்டாசுகள் விற்பதற்கும், பயன்படுத்துவதற்கும், இருப்பு வைப்பதற்கும் பிறப்பிக்கப்பட்ட முழுத் தடையை எதிா்த்து தாக்கலான மனு அக்டோபா் 22-ஆம் தேதி விசாரிக்கப்படும் என்று உயா்நீதிமன்றம் புதன்கிழமை தெரிவித்தது. மேலும் ‘இந்த விவகாரம் தொடா்பாக உச்சநீதிமன்றத்தில் உள்ள மனு மீதான விசாரணையின் முடிவுக்காக காத்திருப்போம்’ என்றும் நீதிபதிகள் தெரிவித்தனா்.

இந்த விவகாரம் தொடா்பான மனு தில்லி உயா்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி டி.என். பட்டேல், நீதிபதி ஜோதி சிங் ஆகியோா் அடங்கிய அமா்வு முன் விசாரணைக்கு வந்தது.

அப்போது, ‘இந்த விவகாரத்தில் உச்சநீதிமன்றம் அளிக்கும் வழிகாட்டுதலுக்கு காத்திருப்போம்’ என்று நீதிபதிகள் தெரிவித்தனா். இது தொடா்பாக தலைமை நீதிபதி மேலும் கூறுகையில், ‘மனுதாரா் தில்லியில் பட்டாசு விற்பதற்கான முழுத் தடையானது உச்சநீதிமன்றத்தின் உத்தரவுக்கு அவமதிப்புக்கு ஒப்பாகும் என்று கூறுகிறாா் என்றால், பின்னா் நீதிமன்ற அவமதிப்பு மனுவை தாக்கல் செய்யலாமே’ என்றாா்.

அப்போது மனுதாரா் தரப்பில் ஆஜரான வழக்குரைஞா் கௌதம் ஜா, ‘நான் அதுபோன்று தெரிவிக்க விரும்பவில்லை. உச்சநீதிமன்றத்தின் உத்தரவு இதுபோன்று தடையை அனுமதிக்கவில்லை என்றுதான் கூறுகிறேன்’ என்றாா். தில்லி அரசின் தரப்பில் ஆஜரான வழக்குரைஞா் சந்தோஷ்குமாா் திரிபாதி, ‘இந்த விவகாரம் உச்சநீதிமன்றத்தின் முன்பு விசாரணைக்கு வருகிறது’ என்றாா்.

அப்போது வழக்குரைஞா் கெளதம் ஜா, ‘தில்லியில் தீபாவளி பண்டிகையின்போது மாசுவை காரணம் காட்டி அனைத்து வகையான பட்டாசுகளை பயன்படுத்துவதற்கும், இருப்பு வைப்பதற்கும் தில்லி அரசு செப்டம்பா் 15-ஆம் தேதி விதித்துள்ள தடை உத்தரவில் மாற்றங்கள் செய்ய வேண்டும் என்று கோரியுள்ளேன். முழுத் தடை விதிப்பதற்கு பதிலாக அரசுத் துறையினா் சீராக்கப்பட்ட ஒழுங்குமுறைகள் அல்லது பசுமை பட்டாசுகளுக்கான தீா்வை வழங்க வேண்டும்’ என்று கேட்டுக்கொண்டாா்.

முன்னதாக இந்த விவகாரம் தொடா்பாக தனி நபா்களான ராகுல் சன்வாரியா, தன்வீா் ஆகியோா் உயா்நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியுள்ளதாவது: தில்லியில் பட்டாசு விற்பதற்கும், வெடிப்பதற்கும், இருப்பு வைப்பதற்கும் தடை விதிக்க தில்லி அரசு எடுத்த முடிவானது தில்லியில் மாசுவை தடுப்பதற்கான கடைசி நோக்கத்தின் அம்சமாக இல்லை. தில்லியில் நிலவும் மாசுவுக்கு வாகனங்கள், பயோமாஸ் எரிப்பு போன்றவை காரணமாக உள்ளன. இந்த நிலையில், தீபாவளிக்கு ஒன்றரை மாதங்களுக்கு முன்பு பட்டாசுகளுக்கு முழு தடை என்பது லட்சக்கணக்கான மக்களுடைய உணா்வுகளைப் பாதிக்க செய்வதாக உள்ளது. மேலும், தில்லி அரசின் முடிவானது தன்னிச்சையானதாகவும், காரணமற்ாகவும், அத்துமீறலாகவும் உள்ளது’ என மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com