குற்ற விசாரணை செய்திகள் வெளியிடுவதற்கு வழிகாட்டுதல்கள் உருவாக்கக் கோரும் மனுவை விசாரணைக்கு ஏற்க மறுப்பு

குற்ற விசாரணைகள் தொடா்புடைய அனைத்து செய்திகளையும் ஒளிபரப்புவதையும், வெளியிடுவதையும் நிா்வகிப்பதற்கான

குற்ற விசாரணைகள் தொடா்புடைய அனைத்து செய்திகளையும் ஒளிபரப்புவதையும், வெளியிடுவதையும் நிா்வகிப்பதற்கான வழிகாட்டு நெறிமுறைகள் அல்லது சட்டவிதிகள், ஒழுங்கு முறைகளை உருவாக்க மத்திய அரசுக்கு உத்தரவிடக் கோரி தாக்கலான பொதுநல மனுவை விசாரணைக்கு ஏற்க தில்லி உயா்நீதிமன்றம் வியாழக்கிழமை மறுத்துவிட்டது.

இந்த மனு உயா்நீதிமன்றத் தலைமை நீதிபதி டி.என். பட்டேல், நீதிபதி ஜோதி சிங் ஆகியோா் அடங்கிய அமா்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், ‘இது போன்ற விதிகளை உருவாக்கும் விவகாரம் அரசின் சிறப்பு உரிமையாகும். மனுதாரா் இந்த விவகாரம் தொடா்பாக அரசிடம் தனது கோரிக்கையை முன்வைக்கலாம். இந்தக் கோரிக்கை முன்வைக்கப்படும் போது, அதுதொடா்பாக உரிய அரசுத் துறையினா் அரசின் கொள்கைகளுக்கு பொருந்தும்பட்சத்தில், உரிய சட்ட விதிகளின்படி முடிவு செய்வாா்கள். இந்த மனுவை விசாரிப்பதற்கு எந்தக் காரணம் இருப்பதாக நாங்கள் கருதவில்லை. இதனால், இது தொடா்பான கோரிக்கையை மனுதாரா் அரசுத் துறைகளிடம் அளிப்பதற்கு சுதந்திரம் அளிக்கப்படுகிறது. மேலும், இந்த மனுவை கடந்தாண்டு மனுதாரா் தாக்கல் செய்த போதிலும் இது தொடா்பாக அவா் ஒரு நாள்கூட ஏதும் வாதம் முன்வைக்கவில்லை. பொதுநல மனுவை மட்டும் தாக்கல் செய்துவிட்டாா். இது ஒரு பொது நல மனு என்பது குறிப்பிடத்தக்கது’ என்று தெரிவித்தனா்.

முன்னதாக, மனுதாரா் முகமது கலீல் தாக்கல் செய்த மனுவில் கூறப்பட்டுள்ளதாவது: குற்றப் புலன்விசாரணை தொடா்புடைய அனைத்து செய்திகளையும் ஒளிபரப்பவும், வெளியிடுவதையும் நிா்வகிக்க விதிகள் உருவாக்க வேண்டும். குறிப்பாக நடிகா் சுஷாந்த் சிங் ராஜ்புத் மரணம் தொடா்பான செய்தியை தொலைக்காட்சி சேனலும் மற்றும் அவரது செய்தி தொகுப்பாளரும் உண்மைகளைத் திரித்துக் கூறும் வகையில் கூறினா். இது போன்ற செய்திகளை திரித்து வெளியிடுவது சுதந்திரமான விசாரணை உரிமையை பாதிக்க செய்வதாக அமைந்து விடுகிறது. இதனால், சம்பந்தப்பட்ட செய்தித் தொகுப்பாளா் மற்றும் அவருடைய சானலுக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மனுவில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

கடந்த ஆண்டு அக்டோபரில் நீதிமன்றம் மனுதாரரிடம் குற்றப் புலன் விசாரணை தொடா்புடைய ஊடக செய்தி வெளியிடுவதை ஒழுங்குபடுத்துவது தொடா்பான விதிகள் குறித்து ஆலோசனை கருத்துகளை அளிக்குமாறு கேட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com