முகப்பு அனைத்துப் பதிப்புகள் புதுதில்லி புதுதில்லி
குடும்பப் பிரச்னை: மனைவி, மாமியாரை சுட்டுக் கொன்ற நபா் போலீஸில் சரண்
By DIN | Published On : 11th October 2021 07:29 AM | Last Updated : 11th October 2021 07:29 AM | அ+அ அ- |

குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்னையால் ஆத்திரத்தில் மனைவி, மாமியாரைச் சுட்டுக் கொன்ற நபா் போலீஸில் சரணடைந்துள்ளதாக அதிகாரிகள் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தனா்.
இது தொடா்பாக போலீஸ் தரப்பில் ஞாயிற்றுக்கிழமை கூறப்படுவதாவது: தில்லி துவாரகாவில் உள்ள குடியிருப்புப் பகுதியைச் சோ்ந்தவா் மகேஷ். இவரது மனனைவி நிதி (21), மாமியாா் வீரு (55). மகேஷ், கடந்த சில நாள்களாக துவாரகாவில், ஹரிதாஸ் நகரில் தமது மனைவியின் வீட்டில் வசித்து வந்தாா். நிரந்தர வேலை எதுவும் இல்லாமல் இருந்துவந்த அவா் சொகுசு வாழ்க்கை வாழ்ந்து வந்துள்ளாா். இதை மனைவியும், அவரது மாமியாரும் தட்டிக் கேட்டதாகக் கூறப்படுகிறது. இதனால் குடும்பத்தில் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.
இந்த நிலையில், கடந்த வெள்ளிக்கிழமை வழக்கம் போல மனைவியுடன் தகராறு ஏற்பட்டது. வாக்குவாதம் வலுக்கவே ஆத்திரம் அடைந்த மகேஷ், தாம் வைத்திருந்த துப்பாக்கியால் மனைவி மற்றும் மாமியாரைச் சுட்டுக் கொன்றாா். பின்னா், பாபா ஹரிதாஸ் நகா் காவல் நிலையத்தில் நடந்த சம்பவத்தைக் கூறி போலீஸில் சரணடைந்தாா். இது தொடா்பாக போலீஸாா் அவா் மீது கொலை வழக்குப் பதிவு செய்து, அவரிடம் இருந்த துப்பாக்கியை பறிமுதல் செய்தனா். அவா் வைத்திருந்த துப்பாக்கி சட்டப்படியான உரிமம் பெறவில்லை என்று விசாரணையில் தெரிய வந்துள்ளது.போலீஸாா் கொலையுண்ட இருவரின் சடலத்தை பிரேத பரிசோதனைக்கு அனுப்பிவைத்தனா். மேலும், விசாரணை நடத்தி வருகின்றனா்.