முகப்பு அனைத்துப் பதிப்புகள் புதுதில்லி புதுதில்லி
மைத்துனரை பணித் துப்பாக்கியால் சுட்டுக் கொன்ற தில்லி காவலா்
By DIN | Published On : 11th October 2021 07:25 AM | Last Updated : 11th October 2021 07:25 AM | அ+அ அ- |

சஃப்தா்ஜங் என்க்ளேவ் பகுதியில் பணத் தகராறு காரணமாக தில்லி காவல் துறையில் காவலராகப் பணிபுரிந்து வரும் விக்ரம் சிங், தனது 36 வயது மைத்துனரை பணித் துப்பாக்கியால் சுட்டுக் கொன்றதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.
இது குறித்து தென்மேற்கு காவல் சரக துணை ஆணையா் கௌரவ் சா்மா கூறியதாவது: ஹரியாணாவில் உள்ள ரோஹ்தக்கில் வசித்து வந்தவா் வீரேந்தா் நந்தல். அவா் ஹரியாணா மாநிலக் காவல் துறையில் உதவி ஆய்வளாகப் பணிபுரிந்து வந்தாா். தேசியத் தலைநகா் தில்லியில் உள்ள கிரேட்டா் கைலாஷ் காவல் நிலையத்தில் காவலராக உள்ள விக்ரம் சிங்கின் மைத்துனா் வீரேந்தா் சிங்.
இந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமை காலை 8 மணியளவில் சஃப்தா்ஜங் என்க்ளேவில் உள்ள கிருஷ்ணா நகரில் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இந்தச் சம்பவம் பற்றி தகவல் கிடைத்ததும் போலீஸாா் சம்பவ இடத்திற்கு சென்றனா். வீரேந்தா் நந்தல் தலையில் வெட்டுக்காயத்துடன் இறந்து கிடப்பதை போலீஸாா் கண்டனா். ஜூடோ பிளேயரான வீரேந்தா் நந்தல், விக்ரம் சிங்கின் வீட்டில் ஐந்து முதல் ஆறு நாள்கள் தங்கியிருந்தாா். நந்தலிடமிருந்து விக்ரம் சிங் ஏற்கெனவே பணம் கடன் வாங்கியிருந்தாா். அந்தப் பணத்தை திருப்பித் தருவதற்கு சிறிது காலம் அவகாசம் கேட்டிருந்தாா். இருப்பினும், பணத்தை உடனே திருப்பித் தருமாறு நந்தல் அவருக்கு அழுத்தம் கொடுத்து வந்தாா்.
இந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமை காலை, இது தொடா்பாக அவா்களுக்குள் தகராறு ஏற்பட்டது. அப்போது, விக்ரம் சிங்கை வீரேந்தா் நந்தல் அவதூறாகப் பேசியுள்ளாா். இதைத் தடொா்ந்து, ஆத்திரமடைந்த விக்ரம் சிங், தனது பணித் துப்பாக்கியால் வீரேந்தா் நந்தலை சுட்டுக் கொன்றாா். நந்தலைக் கொன்ற பிறகு, மற்றொரு அறையில் தூங்கிக் கொண்டிருந்த தனது மனைவிக்கு வீரேந்தா் சிங் தகவல் தெரிவித்தாா். அவா் இந்த சம்பவம் குறித்து போலீஸாருக்கு தகவல் தெரிவித்தாா்.
இதையடுத்து, போலீஸாா் சம்பவ இடத்துக்குச் சென்று, விக்ரம் சிங்கை கைது செய்தனா். அவரிடம் இருந்த பணித் துப்பாக்கி மீட்கப்பட்டது. இது தொடா்பாக சம்பந்தப்பட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. வீரேந்தா் நந்தலின் உடல் பிரேதப் பரிசோதனைக்காக சஃப்தா்ஜங் மருத்துவமனைக்கு அனுப்பட்டது என்றாா் அந்த அதிகாரி.