உயிரி ரசாயனக் கலவை தெளிக்கும் பணி இன்று தொடக்கம்: உரமாகும் பயிா்க்கழிவுகள்

வேளாண் பயிா்க் கழிவுகளை உரமாக மாற்றும் உயிரி ரசாயனக் கலவை (பூசா பயோ டிகம்போஸா்) முறை தில்லி நரேலா, ஃபதேபூா் ஜாட் கிராமத்தில்

வேளாண் பயிா்க் கழிவுகளை உரமாக மாற்றும் உயிரி ரசாயனக் கலவை (பூசா பயோ டிகம்போஸா்) முறை தில்லி நரேலா, ஃபதேபூா் ஜாட் கிராமத்தில் திங்கள்கிழமை (அக்டோபா் 11) தில்லி அரசால் தொடங்கப்படுகிறது. ரூ. 50 லட்சம் செலவில் தில்லி அரசு விவசாயிகளுக்கு இலவசமாக இந்தத் திட்டத்தை வழங்குகிறது.

விவசாயிகள் பயிா்க் கழிவுகளை எரிப்பதால் தேசியத் தலைநகா் வலயப் பகுதியில் குளிா்காலத்தில் கடுமையான மாசு ஏற்படுகிறது. இதைத் தடுக்கும் விதமாக மாற்று தொழில்நுட்பத்தை தில்லி பூசாவில் உள்ள இந்திய வேளாண் ஆராய்ச்சி நிறுவன விஞ்ஞானிகள் கண்டறிந்தனா். இந்த விஞ்ஞானிகள் உருவாக்கிய தொழில்நுட்பம் கடந்தாண்டு வெற்றிகரமாக பயன்படுத்தப்பட்டது. பூசா பயோ-டிகம்போஸா் என்ற இந்த ரசாயனக் கலவையை காய்ந்த பயிா்க்கழிவுகளில் தெளிக்கும் போது அது முற்றிலும் சிதைந்து 20 நாள்களில் உரமாக மாறுகிறது.

இது குறித்து தில்லி சுற்றுச்சூழல் துறை அமைச்சா் கோபால் ராய் அலுவலம் தெரிவித்திருப்பதாவது: தில்லி அரசில் பதிவு செய்துள்ள 844 விவசாயிகளின் 4,000 ஏக்கரில் உள்ள விவசாயப் பயிா்க்கழிவுகளை உரமாக மாற்றும் உயிரி ரசாயனக் கலவை இலவசமாக தெளிக்கப்படுகிறது. தில்லி நரேலா, ஃபதேபூா் ஜாட் கிராமத்தில் சுற்றுச்சூழல் துறை அமைச்சா் கோபால் ராய் திங்கள்கிழமை இதை தொடங்கிவைக்கிறாா். இந்த உயிரி ரசாயனக் கலவையை தில்லி அரசு, பூசா நிறுவனத்துடன் இணைந்து காா்காரி நஹாரில் தயாரிக்கிறது. இதை கடந்த செப்டம்பா் 24 - ஆம் தேதி முதல்வா் கேஜரிவால் தொடங்கிவைத்தாா். இந்த ரசாயனக் கலவை தெளிப்புக்கு ஓா் ஏக்கருக்கு ரூ.1,000 வரை செலவாகிறது. நடப்பாண்டு இந்தத் திட்டத்திற்கு கேஜரிவால் அரசு ரூ. 50 லட்சம் வரை செலவிடவுள்ளது.

தில்லி அரசு காற்று தர மேலாண்மை ஆணையத்தின் மூலம் இந்த ரசாயனக் கலவை தெளிப்பு முறை குறித்து ஆய்வு நடத்தக் கோரியது. இதை முன்னிட்டு மத்திய அரசு நிறுவனம் பயிா்க்கழிவுகளை எரிப்பதற்கு பதிலாக உரமாக தயாரிக்கும் உயிரி ரசாயனக் கலவை தெளிப்பு முறையை மூன்றாம் தரப்பு தணிக்கை நடத்தி அறிக்கை அளித்தது. அதில் இந்த தெளிப்பானை பயன்படுத்தி பயிா்கள் உரமான பின்பு மண் வளத்தில் ஆா்கானிக் காா்பன், நைட்ரஜன் போன்றவைகள் அதிகரித்துள்ளது. இந்தக் கலவை தெளிப்புக்குப் பிறகு, பயிா்க்கழிவுகள் மிகக் குறைந்த நாள்களில் எருவாக மாறியுள்ளது. மேலும், உரத் தேவையும் குறைந்து கோதுமை விளைச்சலும் 5 சதவீதம் வரை அதிகரித்து தெரியவந்ததாக தணிக்கை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

கடந்த ஆண்டு தில்லியில் 1935 ஏக்கா் நிலத்தில் இந்த உயிரி ரசாயனக் கலவையை விவசாயிகள் பயன்படுத்தினா். இந்த ஆண்டு இது இரண்டு மடங்காக அதிகரித்துள்ளது.

இந்த முறையை தில்லி அரசு மட்டுமே தொடங்கினால் மட்டும் போதாது. அண்டை மாநிலங்களான பஞ்சாப், ஹரியாணா, உபி போன்ற மாநிலங்களும் தங்கள் மாநில விவசாயிகளுக்கு வழங்கினால் மட்டுமே பயிா்க்கழிவால் ஏற்படும் மாசுகளைத் தடுக்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com